Published:Updated:

கீரமங்கலம் அரசுப் பள்ளிகள்... `மெடிக்கல் சீட்' பெற்ற 5 மாணவர்கள்... கனவு நனவானது எப்படி?

கீரமங்கலம் அரசுப்பள்ளி மாணவிகள்
கீரமங்கலம் அரசுப்பள்ளி மாணவிகள்

கீரமங்கலம் பகுதியிலிருந்து ஐந்து மாணவர்கள் மருத்துவம் படிக்க வீரநடைபோட்டுப் புறப்பட்டிருக்கின்றனர். இந்த மாணவர்களால், கீரமங்கலம் பகுதியே பெருமையடைந்திருக்கிறது.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் இந்த வருடம் 313 அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு நனவாகியிருக்கிறது. ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, எட்டாக்கனியாக இருந்த மருத்துவப் படிப்பு எட்டும் கனியாக மாறியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசுப் பள்ளியில் பயின்ற 11 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கிறது. அதில், கீரமங்கலம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்த திவ்யா, பிரசன்னா, தரணிகா, ஜீவிகா ஆகிய நான்கு மாணவிகளுக்கும் முதல் நாள் கலந்தாய்விலேயே மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைத்தன. ஒரே பள்ளியில் படித்த நான்கு மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து பள்ளிக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்ந்திருக்கின்றனர்.

மருத்துவ இடம்பிடித்த 11 மாணவிகள்
மருத்துவ இடம்பிடித்த 11 மாணவிகள்

இதேபோல், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்த மாணவன் ஹரிஹரனுக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க, கீரமங்கலம் பகுதியிலிருந்து ஐந்து மாணவர்கள் மருத்துவம் படிக்க வீரநடைபோட்டுப் புறப்பட்டிருக்கின்றனர். இந்த மாணவர்களால், கீரமங்கலம் பகுதியே பெருமையடைந்திருக்கிறது.

மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள ஒரே பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவிகளும், கடந்த முறை நீட் தேர்வு எழுதித் தோல்வியடைந்து, விடாமுயற்சியால், இந்த முறை தேர்வு எழுதி வெற்றிபெற்றிருப்பவர்கள். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 11 பேரையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டி, அவர்களுக்குத் தனது அறக்கட்டளை மூலம் சொந்தச் செலவில், முதல் வருடத்துக்கான கட்டணத்தைச் செலுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 வீதம், ரூ.5,50,000 வழங்கினார்.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவிகளிடம் பேசினோம்...

தரணிகா

``அப்பாவும் அம்மாவும் விவசாயக்கூலி. ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம் எங்களோடது. தனியார் கோச்சிங் சென்டர்ல படிக்க வைக்கவெல்லாம் எங்ககிட்ட போதுமான வசதி இல்ல. போன வருஷம் நீட் எழுதினேன். குறைவான மார்க்தான் கிடைச்சது. ஆனாலும், அடுத்த வருஷமும் என்னைத் தொடர்ந்து படிக்க வெச்சா அதிக மார்க் எடுத்திடுவேன்கிற நம்பிக்கை இருந்துச்சு. குடும்பச் சூழ்நிலையால எங்க படிக்க முடியாமப் போயிருமோன்னுதான் நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, குடும்பக் கஷ்டத்திலும் அப்பா, `இந்த வருஷம் போனா என்ன, அடுத்த வருஷம் நிச்சயமா நல்ல மார்க் எடுத்து மருத்துவராகிடுவ'ன்னு சொல்லி என் மேல நம்பிக்கை வெச்சாங்க. அப்பா நம்பிக்கையை வீணாக்காம ஜெயிச்சுட்டேன். எனக்காக அப்பா, அம்மா பட்ட கஷ்டத்தை எல்லாம் நான் மருத்துவராகிப் போக்கணும்ங்கிற வைராக்கியத்துல இருக்கேன்".

கீரமங்கலம் அரசுப்பள்ளி மாணவிகள்
கீரமங்கலம் அரசுப்பள்ளி மாணவிகள்

திவ்யா

``கொரோனா நேரத்துல சிரமத்துலதான் படிச்சேன். அப்பா, அம்மா, டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப ஊக்கம் கொடுத்தாங்க. பெரும்பாலும், நீட் சம்பந்தமான ஆன்லைன் கிளாஸை விடாம அட்டெண்ட் பண்ணிருவேன். படிச்சு தயாராகிட்டோம். ஆனாலும், கொரோனா பிரச்னையால தேர்வு எழுதப் போறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எல்லா கஷ்டத்தையும் கடந்து இப்போ ஆசைபட்டபடி மருத்துவக் கல்லூரியில சீட் கிடைச்சிருச்சு. மருத்துவராகி எங்க கிராமத்துக்குச் சேவை செய்யணும்."

ஜூவிகா

``ப்ளஸ் டூ படிக்கும்போது பள்ளியிலிருந்து நீட் கோச்சிங் ஏற்பாடு செஞ்சாங்க. அது ரொம்ப உதவியா இருந்துச்சு. பெற்றோர், ஆசிரியர்கள் சப்போர்ட் எப்பவுமே இருந்துச்சு. எல்லோரையும் மாதிரி எனக்கும் சின்ன வயசுல டாக்டராகணும்ங்கிற கனவு இருந்துச்சு. நீட்டை எல்லாம் தாண்டி, இன்னைக்கு அது நிறைவேறிடுச்சு. நம்பமுடியாத ஆச்சர்யத்துலதான் இருக்கேன். எனக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.''

பிரசன்னா

``எங்க அக்கா கீரமங்கலம் அரசுப் பள்ளியில படிச்சுதான் இன்னைக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில மருத்துவம் படிச்சு முடிச்சிருக்காங்க. அக்காதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அக்கா மாதிரியே எனக்கும் மருத்துவராகணும்ங்கிறதுதான் ஆசை. எனக்குப் பாடம் எடுத்த பழனியப்பன் சார், நான் ஆறாவது படிக்கும்போதிலிருந்தே, `உங்க அக்கா மாதிரி நீயும் டாக்டரா ஆகணும்'னு சொல்லிட்டே இருப்பாரு. 6 - 12-ம் வகுப்பு வரை பள்ளி ஆசிரியர்களோட பயிற்சி, ஊக்கம் நிறைய கிடைச்சது. மொதல்ல, அரசு நீட் கோச்சிங்ல படிச்சேன். அப்புறம் தனியார் நீட் கோச்சிங்கும் போனேன். கொரோனாவால கொஞ்ச மாசம் கோச்சிங் போக முடியாத நிலை ஏற்பட்டதால, அதுக்கப்புறம் வீட்ல இருந்துதான் படிச்சேன். அரசு சார்பில் மாணவர்களுக்குத் தொடர்ந்து நீட் கோச்சிங் கிடைச்சா, என்னைப்போன்ற ஏராளமானோர் சாதிக்க முடியும்.''

மாணவி பிரசன்னாவின் குடும்பம்
மாணவி பிரசன்னாவின் குடும்பம்

மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் இருக்கும் இவர்களின் பெற்றோரிடமும் பேசினோம்.

மாணவி பிரசன்னாவின் அப்பா முத்துச்சாமி, ``எங்களோடது விவசாயக் குடும்பம்தான். எனக்கு மூணு பொண்ணுங்க. அதுல, மூத்த பொண்ணு பிரவீனா நல்லா படிக்கும். எம்.பி.பி.எஸ் படிக்கணும்னு ஆசைப்பட்டுச்சு. `கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்கிறம்மா, கவர்ன்மென்ட் மெடிக்கல் காலேஜ்ல படிக்கிற மாதிரி மார்க் எடுத்துடு'னு சொன்னேன். அதுபடியே மார்க் எடுத்துச்சு. இப்போ மதுரை மெடிக்கல் காலேஜ்ல படிச்சி முடிச்சிருச்சு. பிரசன்னாவும், அது அக்கா மாதிரி டாக்டராகணும்னு சொன்னுச்சு. அதுக்கும் இன்னைக்கு அவங்க அக்கா படிச்ச காலேஜ்லயே சீட் கிடைச்சிருச்சு. இந்த கிராமத்து தகப்பனோட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லையே" என்றார் தன் மூன்று பெண்களின் முகத்தில் வழியும் சந்தோஷத்தில் கரைந்தபடி.

மாணவி தரணிகாவின் அப்பா முத்துச் சித்திரன், ``இந்த வருஷம் தரணிகா ஓரளவுக்கு நல்ல மார்க்தான் எடுத்திருந்துச்சு. ஆனா, சிலர் கவர்ன்மென்ட் காலேஜ்ல எம்.பி.பி.எஸ் கிடைக்கிறது கஷ்டம்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. ஆனா, அவங்க டீச்சர்ஸ் எல்லாம், `அரசுப்பள்ளிக்குனு இட ஒதுக்கீடு கிடைச்சா நிச்சயம் தரணிகாவுக்கு சீட் கிடைக்கும்'னு சொன்னாங்க. ஆண்டவன்கிட்ட அதைத்தான் வேண்டிக்கிட்டேன். தமிழக அரசு இட ஒதுக்கீடு அறிவிக்க, இன்னைக்கு என் பொண்ணுக்கு மருத்துவப் படிப்புக்கு சீட் கிடைச்சிருச்சு.

அன்னைக்குக் கொரோனா பிரச்னையால தேர்வு எழுதக் கூட்டிக்கிட்டு போறதுக்கே ரொம்ப கஷ்டப்பட்டேன். காருக்கு செலவு பண்ண முடியாத நிலை. ஆசிரியர்கள் தங்களோட முயற்சியால தேர்வு எழுதக் கூட்டிக்கிட்டு போனாங்க. இன்னும் பல வழிகள்ல அவங்களும், இன்னும் பலரும் என் பொண்ணு படிப்புக்குப் பண்ணின உதவிகளை எல்லாம் மறக்க மாட்டோம். இன்னைக்கு, ஒரு வருஷப் படிப்புக்குத் தேவையான பண உதவியை அமைச்சர் கொடுத்து உதவியிருக்காரு. எங்க புள்ளைங்க எல்லாம் டாக்டராகப் போறாங்க. இட ஒதுக்கீடு வேணும்னு போராடினவங்க, அதுக்கான முயற்சிகளை எடுத்த அதிகாரிங்க, சாத்தியப்படுத்துன அரசுனு எல்லாருக்கும் கைகூப்பி நன்றி சொல்லிக்கிறோம்ங்க'' என்றார்.

கீரமங்கலம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி
கீரமங்கலம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி

கீரமங்கலம் அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜூ, ``கடந்த காலங்கள்ல எங்க பள்ளியில் படிச்ச ஏராளமான மாணவிகள் இன்னைக்கு மருத்துவராக இருக்காங்க. 2016-ல நான் தலைமையாசிரியராகச் சேர்ந்தேன். அந்த வருஷம் ஒரே வருஷத்துல ரெண்டு மாணவிகளுக்கு மருத்துவ சீட் கிடைச்சது. அதற்கப்புறம் இப்போ ஒரே வருஷத்துல நாலு மாணவிகளுக்குக் கிடைச்சிருக்கு. பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துட்டாங்க.

பெற்றோர் ஆசிரியர் கழகம் எங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்கு. தேர்வு நேரத்துல ஆசிரியர்கள் மாணவிகளின் வீடு தேடி அவர்களைக் கவனித்துப் படிக்க வைப்பது, நல்ல மதிப்பெண் எடுப்பவர்களுக்குத் தங்க நாணயம் கொடுத்து ஊக்குவிப்பது, இங்கு படித்து டாக்டர், வக்கீல் என உயர்ந்த நிலையில் இருக்கும் மாணவிகளை அழைத்து வந்து ஊக்கம் கொடுப்பது என எங்களுடைய டீச்சர்ஸ் நிறையவே யோசிச்சு செய்வாங்க. எங்க பள்ளியைப் பொறுத்தவரைக்கும் இந்த டீச்சர், அந்த டீச்சர்னு சொல்ல முடியாது... எல்லாருமே பாடத்திட்டத்தைத் தாண்டி நிறைய விஷயங்களைப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க முயற்சி செய்றாங்க. அன்பால பேசி படிக்க வைக்கிறாங்க. நல்லா ஊக்கம் கொடுக்குறாங்க. அந்தளவுக்கு மாணவிகளும் நல்லா படிக்க மெனக்கெடுறாங்க. இந்தக் கூட்டு முயற்சியாலதான் இன்னைக்கு எங்க பள்ளியும் நாங்களும் தனிச்சு தெரியுறோம்'' என்கிறார் உற்சாகத்துடன்.

தலைவணங்குகிறோம்!

அடுத்த கட்டுரைக்கு