Published:Updated:

ஒன்று இரண்டு இல்லை... இந்த தேர்வு எழுத பல காரணம் உண்டு #GATE2020

`பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு – 2020’-க்கான (Graduate Aptitude Test in Engineering – GATE 2020) அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

GATE 2020
GATE 2020

தகுதித் தேர்வு பயன்கள்:

பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் (GATE Score), இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) மற்றும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிலிருக்கும் மேற்படிப்புகளுக்கான சேர்க்கை பெறுவதற்கு உதவும். அதோடு, பொறியியல், தொழில்நுட்ப மேற்படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகள் போன்றவற்றுக்கான நிதியுதவியியைப் பெறுவதற்கும் உதவும்.

BHEL
BHEL

பாரத மிகுமின் நிறுவனம் (Bharat Heavy Electricals Limited), இந்திய எண்ணெய்க் கழகம் (Indian Oil Corporation), தேசிய அனல் மின் நிறுவனம் (National Thermal Power Corporation), இந்திய அணு ஆற்றல் கழக நிறுவனம் (Nuclear Power Corporation of India Limited), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation), மின் கட்டமைப்புக் கழகம் (Power Grid Corporation) போன்ற இந்திய அரசு நிறுவனப் பணிகளுக்கும் GATE தேர்வு மதிப்பெண் தகுதியும் ஒன்றாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்கான அமைப்பு

பெங்களூரிலிருக்கும் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science, Bangalore) மற்றும் மும்பை, டெல்லி, கவுஹாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்கி என ஏழு இடங்களிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) என மொத்தம் எட்டுக் கல்வி நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வைச் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நடத்திவருகின்றன. 2020-ம் ஆண்டுக்கான தேர்வை டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology Delhi (IITD)) நடத்தவிருக்கிறது.

Exam
Exam

தாள்கள்

  • விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering)

  • வேளாண்மைப் பொறியியல் (Agricultural Engineering)

  • கட்டடவியல் மற்றும் திட்டமிடுதல் (Architecture and Planning)

  • உயிரியல் மருத்துவப் பொறியியல் (Bio- Medical Engineering)

  • உயிர்த் தொழில்நுட்பம் (Biotechnology)

  • கட்டுமானப் பொறியியல் (Civil Engineering)

  • வேதியியல் பொறியியல் (Chemical Engineering)

  • கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Computer Science and Information Technology)

  • வேதியியல் (Chemistry)

  • மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் (Electronics and Communication Engineering)

  • மின்னியல் பொறியியல் (Electrical Engineering)

  • சூழ்நிலையியல் மற்றும் படிமுறை வளர்ச்சி (Ecology and Evolution)

  • நிலவியல் மற்றும் புவி இயற்பியல் (Geology and Geophysics)

  • கருவிமயமாக்கல் பொறியியல் (Instrumentation Engineering)

  • கணிதம் (Mathematics)

  • இயந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering)

  • சுரங்கப் பொறியியல் (Mining Engineering)

  • உலோகத்தொழிற்கலைப் பொறியியல் (Metallurgical Engineering)

  • பெட்ரோலியப் பொறியியல் (Petroleum Engineering)

  • இயற்பியல் (Physics)

  • உற்பத்தி மற்றும் தொழிற்சாலைப் பொறியியல் (Production and Industrial Engineering)

  • புள்ளியியல் (Statistics)

  • நெசவுப் பொறியியல் மற்றும் இழைகள் அறிவியல் (Textile Engineering and Fibre Science)

  • பொறியியல் அறிவியல்கள் (Engineering Sciences)

  • உயிர் அறிவியல்கள் (Life Sciences).

Education
Education

கல்வித் தகுதி

  • பொறியியல் / தொழில்நுட்பம் / மருந்தாளுமை (BE / B.Tech / BPharm) அல்லது கட்டடக்கலை (B.Arch) அல்லது நான்காண்டுகால இளநிலை அறிவியல் (ஆய்வியல்) (B.Sc (Research) / B.S) படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.

  • அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினிப் பயன்பாடுகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளில் முதுநிலைப் பட்டம் (M.Sc / M.A / M.C.A or Equivalent) பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.

  • நான்காண்டுகால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int. M.E / M.Tech) அல்லது இளநிலை அறிவியல் (Post - B.Sc) படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் படித்துக்கொண்டு, 2022ஆம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.

  • ஐந்தாண்டுகால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int. M.E / M.Tech) அல்லது இரண்டு பட்டப்படிப்புகள் (Dual Degree) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2021-ம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவுசெய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.

  • ஐந்தாண்டுகால அளவிலான ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள் (Int. M.Sc) அல்லது ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வியல் படிப்பு (Int B.S - M.S) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.

  • மனிதவள மேம்பாட்டுத்துறை (MHRD), இந்திய தேர்வாணையக் கழகம் (UPSC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் நடத்தும் பொறியியல் படிப்புகளுக்கு இணையான படிப்புகளை (B.E / B.Tech / B. Arch equivalent examinations of Professional Societies, recognized by MHRD / UPSC / AICTE) (உதாரணமாக A.M.I.E, AMICE) நிறைவு செய்திருக்க வேண்டும்.

Gate
Gate

விண்ணப்பம்

http://gate.iitd.ac.in/brochure.php எனும் இணையதளத்தில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் (Information Brochure) தரவிறக்கம் செய்து, அதை முழுமையாகப் படித்துத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு, பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு இணைய விண்ணப்பச் செயல்திட்ட அமைப்புக்கான (GATE - Online Application Processing System (GOAPS) http://appsgate.iitd.ac.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

download

தேர்வுக் கட்டணம்

பொதுப்பிரிவினர் - ரூ.1500/-

எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.750/-

வெளிநாட்டுத் தேர்வு மையங்களைத் தேர்வு செய்யும் நிலையில்...

அடிஸ் அபாபா, கொழும்பு, டாக்கா மற்றும் காத்மண்டு (Addis Ababa, Colombo, Dhaka and Kathmandu) ஆகிய மையங்களுக்கு தேர்வுக் கட்டணம் 50 அமெரிக்க டாலர் (US$ 50).

துபாய் மற்றும் சிங்கப்பூர் (Dubai and Singapore) மையங்களில் தேர்வெழுத தேர்வுக் கட்டணம் 100 அமெரிக்க டாலர் (US$ 100).

கட்டணத்தை மின்பரிமாற்ற முறையில் (Online Transaction) செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 24-9-2019.

தேர்வு மையங்கள்

GATE 2020 தேர்வுக்கு இந்தியா மற்றும் வங்கதேசம், எத்தியோப்பியா, நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் முக்கிய நகரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனும் மண்டலத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில நகரங்கள் என மொத்தம் 41 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி - நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என்று 15 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பித்த பின்னர் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள விரும்பினால், அதற்குரிய கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும். தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளக் கடைசி நாள்: 15-11-2019.

Exam
Exam

அனுமதிச் சீட்டு

விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பொறியியல் பட்டதாரித் தகுதித்தேர்வு இணைய விண்ணப்பச் செயல்திட்ட அமைப்புக்கான (GATE Online Application Processing System (GOAPS)) http://appsgate.iitd.ac.in எனும் இணையதளத்திலிருந்து 3-1-2020 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையைத் (Admit Card) தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அனுமதி அட்டையுடன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கும் கடவுச்சீட்டு (Passport), நிரந்தரக் கணக்கு எண் அட்டை (PAN Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), ஆதார் அடையாள அட்டை (Aadhar UID), கல்லூரி அடையாள அட்டை (College ID), பணியாளர் அட்டை (Employee ID), ஓட்டுநர் உரிமம் (Driving License) என்று ஏதாவதோர் அடையாள அட்டையைத் தேர்வு எழுதும் மையத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

தேர்வு நாள்கள்

இணையவழியில் நடத்தப்படும் இந்த கணினி வழித் தேர்வு (ONLINE Computer Based Test (CBT)) வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. GATE 2020 தேர்வு 1-2-2020, 2-2-2020 மற்றும் 8-2-2020, 9-2-2020 ஆகிய நான்கு நாள்கள் நடத்தப்படவிருக்கிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில், உரிய நேரத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்துக்குச் சென்று தேர்வை எழுத வேண்டும்.

Exam Results
Exam Results

தேர்வு முடிவுகள்

GATE 2020 தேர்வு முடிவுகள் http://gate.iitd.ac.in/ இணையதளத்தில் 16-3-2020 அன்று வெளியிடப்படும். இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் அட்டையை (Score Card) பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு இணைய விண்ணப்பச் செயல்திட்ட அமைப்புக்கான (GATE Online Application Processing System (GOAPS)) http://appsgate.iitd.ac.in எனும் இணையதளத்திலிருந்து 20-3-2020 முதல் 31-5-2020 வரை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழை அலுவலகத்திலிருந்து தனியாகப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் படித்துத் தெரிந்துகொண்டு, அதற்கான கட்டணமாக ரூ.500/- செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியான நாளிலிருந்து மூன்று ஆண்டுகள்வரை பயன்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

கூடுதல் தகவல்கள்

இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus), தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களைத் (Examination Related Information) தெரிந்துகொள்ள https://appsgate.iitd.ac.in/ எனும் இணையதளத்தப் பார்க்கலாம் அல்லது தமிழ்நாட்டுக்கான மண்டல அலுவலகமாக இருக்கும் சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அல்லது

044-22578200 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோ தெரிந்துகொள்ளலாம்.