ஸ்டான்ஃபோர்ட், எம்.ஐ.டி முதலிய உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சி மையத்தை நிறுவ உள்ளது ஐஐடி மெட்ராஸ். செயற்கை நுண்ணறிவு தொடர்பான எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு இந்த மையம் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் செயல்பாட்டிற்காக சுமார் 1 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது கூகிள் நிறுவனம். இந்தியாவின் முதல் பல்துறை மையமாக இதை தாங்கள் கருதுவதே இந்த முதலீட்டுக்கான காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள், Domain வல்லுநர்கள் மற்றும் டெவலப்பர்கள் முதல் சமூக உறுப்பினர்கள், கொள்கை வகுப்பாளர்கள் வரை என பலரையும் ஒன்றிணைக்க இந்த ஆராய்ச்சி மையம் பெருந்தளமாக அமையும் எனக் கருதப்படுகிறது. இதுதொடர்பாக ஐஐடி மெட்ராஸின் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ராபர்ட் போஷ் மையத்தின் தலைவர் பி ரவீந்திரன் கூறுகையில் " இம்மையத்தின் பல்துறை தரம் அதைத் தனித்துவமானதாக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் AI தொடர்பான இந்தியாவின் அணுகுமுறைக்கு மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டுவரவும் உதவும்.
இந்த மையத்தை ஆதரிக்கும் பெரிய தொழில் நிறுவனங்களில் தற்போது கூகிள் முதன்மையாக இருக்கிறது என்றாலும்,மற்ற பெரிய தொழில்துறை நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட நாங்கள் ஆர்வமாகவே உள்ளோம். அரசின் NITI ஆயோக் அமைப்பும் இதில் ஈடுபட விருப்பம் தெரிவித்திருக்கிறது” என்றார் அவர். செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அரசாங்கம் மற்றும் தொழில்துறைகளில் அதி வேகத்தில் வளர்ந்துவரும் நிலையில் இதுபோன்ற ஆராய்ச்சி மையங்கள் இதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.