Published:Updated:

அட்மிஷன் போட்டால் ₹1,000 ஊக்கத்தொகை, வகுப்பறையில் உண்டியல்; அசத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்!

மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை

விருதுநகரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு தனது சொந்தச் செலவில் இருந்து ரூ.1,000 பணத்தைக் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார் தலைமை ஆசிரியர் ஜெயகுமார் ஞானராஜ்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 18 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவரும், ஆசிரியை ஒருவரும் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை பெற்ற பெற்றோர்கள்
ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை பெற்ற பெற்றோர்கள்
கரூர்: `இந்த ஒவ்வொரு மரமும் எங்களுக்கு ஆசான்!' - குறுங்காடு அமைத்து அசத்தும் தலைமை ஆசிரியர்

மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு, `புதிதாகப் பள்ளியில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரூ.6,500 மதிப்புள்ள புதிய ஸ்மார்ட் மொபைல்போன் வழங்கப்படும்’ எனச் சொல்லி ஊக்கப்படுத்தினார் தலைமை ஆசிரியர் ஜெயகுமார் ஞானராஜ். அதேபோல, கடந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கும் புதிய ஸ்மார்ட் போன்களை வழங்கினார். இந்தாண்டும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகப்படுத்தும் விதமாக, `இப்பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயகுமார் ஞானராஜிடம் பேசினோம். ``இந்தப் படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்துல பிழைப்பைத் தேடி பெரும்பாலான மக்கள் வெளியூர்களுக்குப் போயிட்டாங்க. இப்போ மொத்தமே 60 குடும்பங்கள்தான் இருக்கு. அதுலயும் பல வீடுகள்ல வயசானவங்கதான் இருக்காங்க. பனைத்தொழில்தான் இப்பகுதி மக்களோட முக்கியத் தொழில்.

கடந்த ஆண்டு அட்மிஷனுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள்
கடந்த ஆண்டு அட்மிஷனுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள்

இந்த ஸ்கூல்ல ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரைக்கும் மொத்தமே 18 மாணவ, மாணவிகள்தாம் படிச்சுட்டு வர்றாங்க. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி அளிக்கப்படுது. கல்வி பயிலத் தேவையான எல்லா உதவிகளையும் அரசு வழங்கி வருது. ஆனா, இதைப் புரிஞ்சுக்காம பல பெற்றோர்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகள்ல சேர்க்குறாங்க. பிறகு, ஃபீஸ் கட்ட முடியாமல் கடன் வாங்கிக் கஷ்டப்படுறாங்க.

இந்தப் பள்ளியில பயிலும் 18 மாணவர்களுக்குமே கல்வியைத் தாண்டி நல்லொழுக்கம், பேச்சுப்பயிற்சி, எழுத்துப்பயிற்சி, தலைமைப்பண்பு, யோகா, மூச்சுப்பயிற்சி, சேமிப்பு உள்ளிட்ட பல பயிற்சிகளை அளிக்கிறோம். இதைக் கேள்விப்பட்டு 2 கி.மீ தொலைவுல உள்ள பக்கத்து ஊரைச் சேர்ந்த 2 மாணவர்கள் இப்பள்ளியில போன வருஷம் சேர்ந்தாங்க. அவங்களுக்கு தினமும் பள்ளிக்கு வந்துபோகும் ஆட்டோ செலவாக, மாதம் ரூ.800-ஐ எனது சொந்த நிதியிலிருந்தே கொடுக்கிறேன். தற்போதைய கொரோனா ஊரடங்கால இணையத்தின் மூலம் கல்வி கற்றுத்தரப்படுது.

மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை
முதலில் கதை சொல்லி... இப்போ பொம்மலாட்டம்.. கவனம் ஈர்க்கும் தலைமை ஆசிரியர்!

அதனால், போன வருஷம் பள்ளியில புதிதாகச் சேரும் எல்லா மாணவர்களுக்கும் இலவசமா புதிய ஸ்மார்ட் மொபைல்போன் வழங்கிட முடிவு செஞ்சேன். அதன் பலனா, 4 புதிய மாணவர்கள் சேர்ந்தாங்க. இந்த வருஷம், `அட்மிஷன் போட்டா ரூ.1,000 ஊக்கத்தொகை’னு சொன்னேன். இதுவரைக்கும் 5 மாணவர்கள் புதுசா சேர்ந்திருக்காங்க. தற்போதைய ஊரடங்குல, பெற்றோருக்கு சிறிய உதவியா இருக்குமேனு நினைத்துதான் ரூ.1,000-ஐ பணமாகக் கொடுத்தேன். என்றாலும், செல்போனுக்காகவோ, பணத்துக்காகவோ மட்டும் குழந்தைகளைப் பெற்றோர் இந்தப் பள்ளியில சேர்க்கலை. தனியார் பள்ளிக்கு இணையான தரத்தில் இங்க கல்வி கொடுக்குறோம்.

எங்களோட கற்றல் மற்றும் கற்பித்தல் முறைதான், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்க அழைத்து வர முக்கியக் காரணம். அதற்கு, இங்கிலீஷ் மீடியம்ல படிச்சிக்கிட்டிருந்த 3 மாணவர்கள் இங்கே சேர்ந்ததுதான் சாட்சி.

பள்ளி தொடங்கிய நாள்ல அனைத்து மாணவர்களுக்கும் உண்டியல் வழங்கப்படும். வகுப்பறையில ஒழுக்கம், தன் சுத்தம், வீட்டுப்பாடங்கள் முடித்தல், பிழையற எழுதுதல், எழுத்துப்பயிற்சி, மனப்பாடம் உள்ளிட்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் பாராட்டி மாணவர்களுக்கு ஒரு ரூபாய் வழங்குறேன்.

சேமிப்பு உண்டியல்களுடன் மாணவர்கள்
சேமிப்பு உண்டியல்களுடன் மாணவர்கள்

அதே நேரத்துல, இந்தப் பண்புகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தாலோ, வீட்ல பெற்றோருக்குக் கீழ் படியாமல் இருந்தாலோ அதில் இருந்து ஒரு ரூபாய் எடுக்கப்படும். அந்த மாணவர்கள் பள்ளியைவிட்டுச் செல்லும்போது உண்டியல்ல சேர்ந்துள்ள பணம் அந்தந்த மாணவரின் வளர்ச்சிக்காகப் பெற்றோரிடம் வழங்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளா செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள்கிட்ட கற்றல் மேம்பாடு நடந்திருக்கு.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் இதுபோன்ற பல திட்டங்களால, தற்போது பள்ளியில் மாணவர் சேர்க்கை படிப்படியா அதிகரிச்சிட்டு வருது” என்றார் உற்சாகத்துடன்.

நல்லாசிரியர்!

அடுத்த கட்டுரைக்கு