Published:Updated:

`தமிழ் எனக்குத் தடையாக இல்லை; படியாக இருக்கிறது!' - அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரின் அசத்தல் முயற்சி

ஆறுமுகம் எழுதி வைத்த வாசகங்கள்
ஆறுமுகம் எழுதி வைத்த வாசகங்கள் ( நா.ராஜமுருகன் )

அப்துல் கலாம் படித்தது, முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை படித்ததெல்லாம் தமிழ்வழியில் அரசுப் பள்ளிகளில்தான். நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன்.

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் இயங்கி வருகிறது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் பதவியேற்ற ஆறுமுகம் தனது அறையின் வாசல் நிலையின் மேலே உள்ள சுவர், பக்கவாட்டுச் சுவர்களில் அரசுப் பள்ளிகளின் அருமை பற்றியும் தமிழ்மொழி மீதான தனது பற்றுப் பற்றியும் எழுதி வைத்துள்ள வாசகங்கள்தான், பலரையும் புருவம் உயர வைத்துள்ளது.

குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
நா.ராஜமுருகன்
`வாய்ப்பாடு சொன்னால் ஒரு மணிநேரம் தலைமையாசிரியராகலாம்!' கரூர் அரசுப் பள்ளி ஆச்சர்யம்

தனது அறையின் வாசல்கதவின் மேல் உள்ள சுவரில், `இது எனது பள்ளி; இப்பள்ளியால் நான் உயர்ந்தேன். என்னால் இப்பள்ளி உயரட்டும்' என்று எழுதி வைத்து அசத்தியுள்ளார். அதேபோல், அவரது அறையின் பக்கவாட்டுச் சுவரில், `கல்வி என்னைக் கரை மட்டும் சேர்க்கவில்லை. நிலவு வரை சென்று சேர்த்திருக்கிறது. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்துதான் முன்னேறி இருக்கிறேன். தமிழ் எனக்குத் தடையாக இல்லை. படியாக இருக்கிறது' என்று எழுதி வைத்து, மாணவர்களுக்குப் புது நம்பிக்கையை விதைத்து வருகிறார்.

`வாழ்த்துகள்' சொல்லி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகத்திடம் பேசினோம். "எனக்கு சொந்த ஊர் இதே மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டிங்கிற கிராமம். மிகவும் பின்தங்கிய ஊர். அங்கிருந்து கஷ்டப்படும் குடும்பச்சூழலில் இருந்து படித்துதான், இன்றைக்கு ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அளவுக்கு உயர்ந்திருக்கிறேன். நான் பள்ளி, கல்லூரி படிப்புகள் அனைத்தையும் அரசு தொடர்புடைய இடங்களில்தான் படித்தேன். குறிப்பாக, தமிழ் வழியில்தான் படித்தேன். இன்றைய பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதை ஏதோ தீண்டத்தகாத விஷயமாகக் கருதுறாங்க. 'அரசுப் பள்ளியில் படிக்க வைத்தால் தங்கள் பிள்ளைகள் வீணாகப் போய்விடுவார்கள்... தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தால், பெரிய அறிஞராக, விஞ்ஞானியாக வருவாங்க'னு தப்பான கற்பிதத்தை உள்ளுக்குள் வளர்த்துக்கிறாங்க.

ஆறுமுகம் (தலைமை ஆசிரியர்)
ஆறுமுகம் (தலைமை ஆசிரியர்)
நா.ராஜமுருகன்

இதனால், கடன்மேல் கடன் வாங்கி தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறாங்க. அப்துல் கலாம் படித்தது, முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை படித்ததெல்லாம் தமிழ்வழியில் அரசுப் பள்ளிகளில்தான். நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். இதைப் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் உணர வைத்து, அவங்க மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி என் அறைக்கு முன்பு வாசகங்களை எழுதிப் போட்டிருக்கிறேன். இது நல்ல மனமாற்றத்தை பலரிடமும் ஏற்படுத்தியிருக்கு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு