Published:Updated:

இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்... - இல்லம் தேடிவரும் ஆசிரியர்கள்!

இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்
பிரீமியம் ஸ்டோரி
இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்

புளியங்கடை, செங்காடு பகுதியில் உள்ள பள்ளிகளின் ஆபத்தான நிலை குறித்து, தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன்

இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்... - இல்லம் தேடிவரும் ஆசிரியர்கள்!

புளியங்கடை, செங்காடு பகுதியில் உள்ள பள்ளிகளின் ஆபத்தான நிலை குறித்து, தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன்

Published:Updated:
இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்
பிரீமியம் ஸ்டோரி
இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்

தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த அரசு பள்ளிக் கட்டடங்களை மராமத்து செய்யவும், இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டவும் 250 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது அரசு. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தைப் பறை சாற்றியபடி நிற்கின்றன, இடிந்துவிழும் அபாயத்திலிருக்கும் ஏற்காடு மலைப்பகுதி அரசுப் பள்ளிகள்!

சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் 70 குக்கிராமங்கள் இருக்கின்றன. இங்குள்ள மலைவாழ் மக்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளிலேயே படிக்கிறார்கள். அதில் பல பள்ளிகள் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவை என்பதால், இடியும் தறுவாயில் இருப்பதாகச் சொல்கிறார்கள் மக்கள்.

இதையடுத்து புளியங்கடை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை நேரில் சென்று பார்த்தோம். அங்கே 70 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளிக் கட்டடமோ விரிசல் விட்டும், ஒரு பக்கச் சுவர் உள்வாங்கியும், கூரை ஓடுகள் சரிந்தும் ஆபத்தான நிலையில் இருந்தன.

இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்... - இல்லம் தேடிவரும் ஆசிரியர்கள்!

“கல்வித்துறையைவிட இந்த ஸ்கூல் மேல அதிக அக்கறை வெச்சுருக்கோங்க நாங்க” என்றபடி பேசத் தொடங்கிய ரமேஷ்குமார், “எங்க ஊர்க் குழந்தைங்க 5-ம் வகுப்புவரை கண்டிப்பா இங்கேதான் படிக்கணும்; வெளியூர் ஸ்கூலுக்குப் போகக் கூடாதுன்னு கட்டுப்பாடே விதிச்சிருக்கோம். ஆனா, அந்த அக்கறையில பாதிகூட கல்வி அதிகாரிங்களுக்கு இல்லை. 10 வருஷமா பள்ளிக் கட்டடத்தைப் பராமரிக்கலை. அதனாலதான் மோசமா பழுதடைஞ்சு, இடிஞ்சு விழுற நிலைமைக்குப் போயிடுச்சு. மழைக்காலத்துல இன்னும் மோசம்... உள்ள யாரும், உக்காரக்கூட முடியாது. ஆசிரியர்களே பாதுகாப்புக்காக எங்க வீட்டுக்குத்தான் வர்றாங்க. பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பவே பயமா இருக்கு. நாங்களும் கல்வி அதிகாரி, எம்.எல்.ஏ-ன்னு எல்லார்கிட்டேயும் மனு கொடுத்துப் பார்த்துட்டோம். யாரும் பள்ளிக்கூடத்தை எட்டிக்கூடப் பார்க்கலை’’ என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

செங்காடு கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியையும் பார்த்தோம். அந்தக் கட்டடமும் மோசமாக இருந்தது. “இந்த ஒரு பள்ளிக்கூடத்துல மட்டும் 100 குழந்தைங்க படிக்குறாங்க. பிள்ளைங்க படிப்பைவிட, அவங்க பத்திரமா வீடு திரும்புவாங்களான்னுதான் நாங்கல்லாம் கவலைப்படுறோம்” என்றனர் சில பெற்றோர்.

இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்... - இல்லம் தேடிவரும் ஆசிரியர்கள்!

இதுகுறித்து மாவட்டத் தலைமை கல்வி அதிகாரி முருகனிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட பள்ளிகளை நேரில் சென்று பார்வையிட அதிகாரிகளுக்கு உடனே உத்தரவிடுகிறேன். மாணவர்கள் படிப்பதற்கு தற்காலிக மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, ஆணையர் நந்தகுமார் ஆகியோரைத் தொடர்பு கொண்டோம். குறுஞ்செய்தியும் அனுப்பினோம். ஆனால், நமது அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை.

ரமேஷ்குமார்
ரமேஷ்குமார்

ஏற்காடு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சித்ராவிடம் பேசியபோது, “புளியங்கடை, செங்காடு பகுதியில் உள்ள பள்ளிகளின் ஆபத்தான நிலை குறித்து, தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும் புதிய கட்டடம் உடனே கட்டப்படும்’’ என்றார்.