Published:Updated:

`பெற்றோர்கள் ஏன் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்?'- காரணத்தைப் புரியவைத்த அரசுப்பள்ளி

குழந்தைகள் தின விழாவில் கலந்துகொள்ள பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள், செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தனர். ஒரு நாள் முழுவதும் தங்கள் பிள்ளைகளுடன் ஆடிப்பாடி, விளையாடி மகிழ்ந்தனர்.

 பெற்றோர்களுடன் ஓடி விளையாண்ட மாணவர்கள்
பெற்றோர்களுடன் ஓடி விளையாண்ட மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள உருவம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த வருடம் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா, வழக்கமான விழாவாக இல்லாமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஒரு கூட்டுக் குடும்ப விழாவாக, ஆடல், பாடல், நடனம், நொண்டி,பல்லாங்குழி எனப் பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகளுடன் இனிதே நடைபெற்றது. முன்னதாக, இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் பெற்றோர்கள், செல்போன்களை எடுத்துவரக்கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உறுதிமொழி எடுத்துக்கொண்ட பெற்றோர்கள்
உறுதிமொழி எடுத்துக்கொண்ட பெற்றோர்கள்

ஆசிரியர்களின் இந்த உத்தரவை ஏற்ற பெற்றோர்கள் பலரும் செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தனர். எடுத்துவந்த சிலரும் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டனர். அப்போது, பெற்றோர்களிடம் பேசிய ஆசிரியர்கள், நாங்கள் எங்கள் பிள்ளைகளோடு தினமும் 1 மணி நேரம் ஒதுக்க முடியுமா என்றால், நிச்சயமாக பலருக்கும் முடியாது. ஆனால் நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்காக டி.வி, மொபைல் போன் இல்லாமல் ஒரு மணி நேரத்தை முற்றிலும் ஒதுக்குங்கள். அதைத்தான் பிள்ளைகளும் விரும்புகின்றனர்.

அந்த நேரத்தில், குழந்தைகளுக்குப் பழைய கதைகளைச் சொல்லிக்கொடுங்கள். பிள்ளைகளை ஆடிப்பாடி மகிழவைத்து அவர்களுடன் சேர்ந்து நீங்களும் மகிழுங்கள்" என்று பேசினர். தொடர்ந்து, பள்ளியில் ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, நொண்டி ஆட்டம், தாயம் உள்ளிட்ட பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

 பெற்றோர்களுடன் ஓடி விளையாண்ட மாணவர்கள்
பெற்றோர்களுடன் ஓடி விளையாண்ட மாணவர்கள்

இதுபற்றி நம்மிடம் பேசிய உருவம்பட்டி பள்ளி ஆசிரியர்கள், " பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளிடம் சிறிது நேரம் ஒதுக்குவதற்குக்கூட நேரம் இல்லை என்று கூறி, ஓடி ஓடி உழைக்கின்றனர். பல பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டால் போதும், நல்லதோ கெட்டதோ ஆசிரியர்களே அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள் என்று விட்டுவிடுகின்றனர். அது மிகவும் தவறு. நாங்களும், கற்பித்தல் நேரம் அல்லாத நேரங்களில் அவர்களை மகிழ்விக்கிறோம்.

அதேபோல், பெற்றோர்களும் சில மணி நேரங்களை அவர்களுக்காகச் செலவிட்டால், மேலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நாங்கள், புதிதாகத் திட்டம் ஏதும் போடவில்லை. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் திட்டம்தான் இது. தினமும் பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுடன் 1 மணி நேரம், அதாவது மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை தங்களது செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களை அணைத்து வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் ஆடிப்பாடி மகிழ வேண்டும் என்று கூறியுள்ளனர்.

உறுதிமொழி எடுத்துக்கொண்ட பெற்றோர்கள்
உறுதிமொழி எடுத்துக்கொண்ட பெற்றோர்கள்

இப்படிச் செய்யும்போது, பெற்றோர்- குழந்தைகள் இடையேயான உறவு வலுப்படும். பிள்ளைகளும் அதைத்தான் விரும்புகின்றனர். ஆனால், பெற்றோர்கள்தான் அதைப் புரிந்துகொள்வதில்லை. பெற்றோர்கள்-பிள்ளைகளுக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கவே இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தினோம். எங்கள் பிள்ளைகளின் பெற்றோர்கள், எந்தத் திட்டம் கொண்டுவந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். அதனால், பல திட்டங்களைப் பள்ளியில் எளிதாகச் செயல்படுத்த முடிகிறது" என்றனர்.