Published:Updated:

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகள்: அரசு இன்னும் எப்படி எளிமையாக்கலாம்? - ஒரு வழிகாட்டல்

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா மூன்றாவது அலையும் வரலாம் என்று மருத்துவர்கள் சொல்வதால், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை இன்னும் எப்படி எளிதாக்குவது என்று கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் கேட்டோம்.

கொரோனா காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைனில் நடக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தேர்வுகளும் ஆன்லைனில்தான் நடக்கின்றன. ஆன்லைனில் அனுப்பப்படும் கேள்விகளுக்கு வெள்ளைத்தாளில் பதில்களை எழுதி, பெற்றோர் கையெழுத்துடன் சீல் செய்த கவரில் வைத்து, அதே நாளில் விரைவு தபால் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். தேர்வு எழுதி முடிக்கும் நேரமும், லாக்டெளன் காரணமாகத் தபால் அலுவலகங்கள் மூடும் நேரமும் ஒன்றாக இருந்ததால், மாணவர்கள் அரை மணிநேரம் முன்னதாகவே தேர்வை முடித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தப் பிரச்னையை திருப்போரூரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜியிடம் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விடைத்தாள்களைத் தனியார் கூரியர் மூலமும் அனுப்பலாம் என்று உத்தரவிட, இது உடனடியாக மாணவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. கூரியர் மூலமும் அனுப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கையில் இருப்பதைத் தனியார் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களுக்கு தெரிவிக்காமல் விட்டதன் விளைவுதான் மேலே சொன்னவை. இவை அனைத்தும் சில தினங்களுக்கு முன்னால் நடந்தவை. கொரோனா மூன்றாவது அலையும் வரலாம் என்று மருத்துவர்கள் சொல்வதால், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை இன்னும் எப்படி எளிதாக்குவது என்று கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் கேட்டோம்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

``தபால், கூரியர் என்பதற்குப் பதில், தமிழ்நாடு முழுக்க இருக்கிற அத்தனை மாவட்டங்களிலும் இருக்கிற சில பொறியியல் கல்லூரிகளில் கலெக்‌ஷன் சென்டர்களை ஏற்படுத்தலாம். அங்கு ஒரு டிராப் பாக்ஸ் வைத்து, மாணவர்கள் எழுதிய பதில் தாள்களை அதற்குள் போடும்படி அறிவுறுத்தலாம். சில ஆசிரியர்களை நியமித்து அந்த டிராப் பாக்ஸில் இருக்கிற பதில் தாள்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். இதுவொரு வழிமுறை.

இன்னொரு வழிமுறையில், மாவட்டங்களில் இருக்கிற குறிப்பிட்ட சில பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் ஆசிரியர்களை நியமித்து அவர்களையே மாணவர்களின் பதில் தாள்களை கலெக்ட் செய்யும்படியான வழிமுறையை ஏற்படுத்தலாம். கிராமப்புறங்களிலிருந்து பொறியியல் கல்லூரிகள் தொலைதூரத்தில் இருந்தால், அங்கிருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையோ, பள்ளிக்கூடங்களையோ கலெக்‌ஷன் சென்டர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கிருந்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அல்லது நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்று சேர்க்க வேண்டியது கலெக்‌ஷன் சென்டர்களில் இருக்கிற ஆசிரியர்களின் பொறுப்பு. எல்லா பொறியியல் கல்லூரிகளுமே அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்தான் வருகின்றன என்பதால், இந்த வழிமுறையைக் கடைப்பிடிப்பது சுலபமாகவே இருக்கும்.

கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்

அந்தந்த மாவட்டங்களில், ஏரியாக்களில் இருக்கிற கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளிகளிலும்கூட கணினிகள் இருக்கின்றன. வீட்டில் தேர்வு எழுத வசதியில்லாத மாணவர்களை இந்த இடங்களுக்கு வரவழைத்துத் தேர்வு எழுத வைக்கலாம். மொத்த பொறியியல் கல்லூரி மாணவர்களையும் சேர்த்துப் பார்த்தால், இப்படிப்பட்ட மாணவர்கள் 20 சதவிகிதம் மட்டுமே இருப்பார்கள். அவர்களையும் மாவட்டங்களின் கீழ் பிரித்தால் மிகக்குறைவான மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள். இவர்களுடைய டேட்டாவை எடுத்து, அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிக்கூடத்திலோ, கல்லூரியிலோ உட்கார வைத்துத் தேர்வு எழுத வைப்பது சுலபம்தான். இது மூன்றாவது வழி. தேவைப்பட்டால் கணினி தவிர, கையால் எழுதுவதற்கும் அனுமதிக்கலாம்.

தொலைதூர கிராமங்களில் இருக்கிற மாணவர்களைக் கண்டறிய கூகுள் மேப்பை பயன்படுத்தலாம். இதன் மூலம் எந்தெந்த கிராமங்களுக்கு ரீச் இல்லை என்பதைக் கண்டறிந்து, அங்கிருக்கிற மாணவர்களின் லொகேஷன்களைத் தெரிந்துகொள்ளலாம். கூகுள் மேப்பில், அவர்களின் அருகிலிருக்கும் பள்ளி, கல்லூரிகளைக் கண்டறிந்து, அங்கு ஆசிரியர்களை அனுப்பி, அந்த மாணவர்களைத் தேர்வு எழுத வைக்கலாம். இது நான்காவது வழி.

இந்தப் பெருந்தொற்று இன்னும் எத்தனை காலம் இருக்குமென்பது தெரியவில்லை. அதனால், அண்ணா பல்கலைக்கழகம், இதற்கென ஆப்பை டெவலப் செய்து அல்லது சாஃப்ட்வேர் வெப்சைட்டை உருவாக்கி, யாருக்கு கணினி இல்லை, இணையம் இல்லை என்பதைக் கண்டறிந்து, அவர்கள் தேர்வு எழுதுவதற்கான வழிவகைகளையும் செய்து தரலாம்.

பொறியியல் படிப்பு
பொறியியல் படிப்பு
அட்மிஷன் போட்டால் ₹1,000 ஊக்கத்தொகை, வகுப்பறையில் உண்டியல்; அசத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்!

பெற்றோர் இருவருமே வேலைபார்ப்பவர்கள் என்றால், மதியம் ஒரு மணிக்கு அவர்களால் கையெழுத்து போட்டுத் தர முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். அதற்குப் பதிலாக பதில் எழுதும் தாளின் முதல் பக்கத்திலேயே கையெழுத்து போட்டுத்தரச் சொல்லலாம்.

படிப்பும் தேர்வும் அவசியம்தான். ஆனால், தபால் அலுவலகம், கூரியர் அலுவலகம் என்று மாணவர்களை அலைமோத விடுவதைத் தவிர்க்க வேண்டும். கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் செலுத்தியதோடு கூரியருக்கும், கூரியர் அலுவலகம் செல்வதற்கு பெட்ரோல் செலவு என்று பெற்றோர்களுக்கு இன்னமும் கஷ்டம் கொடுக்க வேண்டாம். நம் நாட்டில் இதற்கு வசதியில்லாத பெற்றோர்களும் இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரியுமே!’’ என்கிறார் நெடுஞ்செழியன்.

அடுத்த கட்டுரைக்கு