Published:Updated:

10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டுதல்! #SSLCExam

மாணவர்கள் மனஅழுத்தம்
மாணவர்கள் மனஅழுத்தம்

இனி அனைவரும் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், கடைசி 15 நாள்களில் மாணவர்கள் தேர்வுக்கு எப்படித் தயாராகலாம்?

'கொரோனா' நம் சமூகத்தின் வேர்வரை சென்று அனைத்தையும் மாற்றி அமைத்திருக்கிறது. இதுவரை நாம் சிந்தித்தும் பார்க்காத பல மாற்றங்கள் இந்த 2 மாதங்களில் நடந்தேறியுள்ளன. பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஜூன் - 1ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த அறிவிப்பு எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான உணர்வைத் தந்திருக்க வாய்ப்பில்லை. நோயின் தீவிரம் குறையவில்லை. 'லாக்டெளன்' எப்போது முடியும் எனத் தெரியாத சூழலில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு அறிவிப்பு அதிர்ச்சிகரமானதாக இருக்கும்.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்கள். ஆனால் மெல்ல கற்கும் மாணவர்கள் குறிப்பாக, கிராமப்பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள். பெற்றோரின் வேலையிழப்பால் வீட்டில் அசாதாரணச் சூழல் நிலவுகின்ற மாணவர்களுக்கும் இந்தத் தருணம் மோசமானது. எப்படி இருப்பினும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது. இனி அனைவரும் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் கடைசி 15 நாள்களில் மாணவர்கள் தேர்வுக்கு எப்படித் தயாராகலாம் என விஜயலட்சுமியிடம் பேசினோம்.

’இன்ஜினீயரிங் படிக்கலாமா?’ -மாணவர்களின் பல கேள்விகளுக்கு விடைதந்த  விகடன் கல்வி வெபினார்! 2-ம் நாள்

மாணவர்களுக்கு அவர் கொடுத்த ஆலோசனைகள்:

1. தமிழ்ப் பாடத்தைப் பொறுத்தவரை ஒருமதிப்பெண் வினாக்கள், மனப்பாடப் பகுதி, படத்திற்கேற்ற கவிதை மற்றும் கருத்துகளை எழுதப் பழகுதல், அலகிட்டு வாய்ப்பாடு, படிவம் நிரப்புதல், கடிதம் எழுதுதல் ஆகியவற்றை பயிற்சி செய்து பார்க்கவேண்டும்.

‌2. ஆங்கிலப் பாடத்தைத் திருப்புதல் செய்யும்போது, முதலில் வரும் 14 ஒரு மதிப்பெண் வினாக்களை நன்கு பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு ஆங்கிலப் புத்தகத்தை முழுமையாக ஓரிரு முறை படித்துப் பார்ப்பது நலம். Spot the errors, Notice, Letter writing, Poem Comprehension, Poem appreciation - Figure of speech ஆகிய பகுதிகளை பழைய வினாத்தொகுப்புகளை வைத்துப் பயிற்சி செய்வதுடன், supplementary Reader-ல் வரும் கதைகள், கதாபாத்திரங்கள் அனைத்தையும் பலமுறை படித்து மிகத்துல்லியமாக மனதில் இருத்தவும்.

‌3. கணிதப் பாடம் எனில் Geometry, Graph ஆகியவற்றை மீண்டும் ஒருமுறை தெளிவாகச் செய்து பார்க்க வேண்டும். ஏற்கெனவே பலமுறை செய்திருக்கிறோமே, நினைவுக்கு வரும் என்று நேரடியாக தேர்வறைக்குச் சென்றுவிடக் கூடாது. நிச்சயமாக சில கணக்குகளைச் செய்து பார்த்துவிட்டுத்தான் செல்லவேண்டும்.

‌4. அறிவியல் பாடத்தில் ஆசிரியர் முக்கியம் எனப் பயிற்றுவித்திருந்த வினாக்களையும், படங்கள் இருப்பின் அவற்றையும் வரைந்து பார்த்துப் படிக்கவும்.

‌5. சமூக அறிவியலைப் பொறுத்தவரை காலக்கோடு மிக முக்கியம். அதை நிகழ்வுகளுடன் ஆண்டுகளையும் நன்கு வரைந்து பார்த்து பயிற்சி செய்யவேண்டும். அதனுடன் நிலவரைபடங்களையும் முக்கிய இடங்களை குறித்துப் பார்த்து பயிற்சி செய்ய வேண்டும்.

6. எல்லாவற்றிலும் மேலாக, உங்களிடம் இருக்கும் அரையாண்டு, முதல் திருப்புதல், இரண்டாம் திருப்புதல், மூன்றாம் திருப்புதல் வினாத்தாள்கள் அனைத்தையும் வைத்துப் பாடங்களை ஒருமுறை படித்துவிடுங்கள்.

5 நண்பர்களை Conference call மூலம் இணைத்துக்கொண்டு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு பாடத்தின் முக்கியமான வினாக்களைத் திருப்புதல் செய்யும்போது ஒரே நேரத்தில் 5 பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
விஜயலட்சுமி, ஆசிரியை
Mental Pressure
Mental Pressure

‌7. படிக்கும்போது குறிப்புகள் எடுத்து வைத்துக்கொண்டு, தனியாக அமர்ந்து அவற்றைக் கொண்டு பாடப்பகுதிகளை நினைவுப்படுத்திப் பார்க்கவேண்டும். நினைவுக்கு வரவில்லை எனில் தடுமாற்றம் ஏற்பட்ட பாடப்பகுதியை மீண்டும் சிலமுறை ஆழ்ந்து படிக்க வேண்டும்.

8. சந்தேகங்கள் இருக்கும்பட்சத்தில் ஆசிரியர்களிடம் அலைபேசியில் அழைத்துப் பேசுங்கள். இன்னும் பூரண தெளிவு கிடைக்கும். ‌நண்பர்களுடன் உரையாடுவதன் மூலமும் கடினமான பகுதிகளை எளிதாக மனதில் இருத்திக் கொள்ளமுடியும்.

‌9. 5 நண்பர்களை Conference call மூலம் இணைத்துக்கொண்டு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு பாடத்தின் முக்கியமான வினாக்களை திருப்புதல் செய்யும்போது ஒரே நேரத்தில் 5 பாடங்களை எளிதாக திருப்புதல் செய்து விட முடியும்.

‌10. கடினமான பாடப்பகுதிகளை படங்களாக வரைந்து கண்ணில் படும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதால் அது நம்மையறியாமல் நம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ‌தொடர்ந்து ஒரே பாடத்தைப் படிக்காமல் மாற்றி மாற்றிப் படிக்கும் போது நினைவின் வீச்சு அதிகரிக்கும்.

11. ஆசிரியர் பள்ளிக்குச் சென்றபோது மிக முக்கியம் எனக் கொடுத்திருந்த 'Materials'- ஐ எல்லாம் திரும்பவும் ஒரு முறை பொறுமையாகப் படிக்கவேண்டும்.

ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் மாணவர்கள் உளவியல் ரீதியாகத் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்வது என உளவியல் நிபுணர் அபி சங்கரியிடம் பேசினோம்.

"இந்த லாக்டெளனில் மாணவர்களும் சரி, பெற்றோர்களும் சரி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பர். ஒருவித பயமும் , பாதுகாப்பற்ற உணர்வும் அவர்களிடத்தில் இருக்கும். கொரோனா தொற்று குறித்த பயம் ஒருபுறம், இயல்பு வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பது மறுபுறம் எனச் சுழன்று கொண்டிருக்கும். பல பெற்றோர்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பர். பொருளாதாரச் சூழல் வீட்டிலிருக்கும் மாணவர்களையும் பாதித்திருக்கும். இந்தச் சூழலைக் கையாண்டு மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

அபி சங்கரி
அபி சங்கரி
தூக்கம் மிகவும் அவசியமானது. தூக்கம்தான் படித்ததை நினைவில் நிறுத்த உதவும்.
அபி சங்கரி, உளவியல் நிபுணர்

இவ்வளவு நாள்கள் தேர்வு எப்போது எனத் தெரியாமல் இருந்திருப்பார்கள். வேறு சிந்தனையில் இருந்திருப்பார்கள். தற்போது தேர்வு நாள் அறிவிக்கப்பட்டதும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். தேர்வு எழுதச் செல்கையில் தங்களுக்கு 'கொரோனா' தொற்று வந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கும். இவ்வளவு நாள் பள்ளிகளில் இல்லாமல் வீட்டுச் சூழலில் இருந்ததால் மாணவர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி முறைகளில் தடை இருக்கும். அதைத் தவிர்க்கப் பயிற்சிக்கான அட்டவணையை உருவாக்கிவைத்து பயிற்சி எடுக்கலாம். தேர்வுக்குப் படிக்கும்போது நீண்ட நேரம் படிக்காமல் 1 மணி நேரத்துக்கு 10 நிமிடங்கள் இடைவெளி என எடுத்துக்கொள்ளலாம். மிகுந்த அழுத்தத்துடன் நிறைய நேரம் படிப்பதும் தவறு. மிகக் குறைவான நேரம் படிப்பதும் தவறு.

40 நாள்களாக எதுவும் எழுதாமல் இருந்திருந்தால், ஒரு சிறிய தேர்வுபோல மாணவர்களே எழுதிப் பார்க்கலாம். மனதளவில் அது தேர்வுக்குத் தயார் செய்யும். மேலும் நேரத்தைச் சரியான முறையில் கையாள உதவும். மனதளவில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவது மிக முக்கியமான ஒன்று. தூக்கம் மிகவும் அவசியமானது. தூக்கம்தான் படித்ததை நினைவில் நிறுத்த உதவும். நல்ல உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். காலை, மாலை என அவர்களுக்கு உகந்த நேரத்தில் எந்தப் பாடத்தைப் படிப்பது அவர்களுக்கு எளிமையாக இருக்கும் எனத் தேர்வுசெய்து படிப்பது சரியானது.

மனஅழுத்தம்
மனஅழுத்தம்
`விகடன் கல்வி வெபினாரி’ல் மாணவர்கள் கேட்ட கேள்விகள்... நிபுணர்களின் பதில்கள் - பகுதி- 3

கொரோனா குறித்த ஒருவித அச்சம் இருக்கும் அதே வேளையில் வீட்டில் சில பெற்றோர்கள் இந்த நேரத்தில் நன்றாகப் படிக்கவேண்டும் என அழுத்தமும் கொடுப்பர். பெற்றோர் அதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் மனதை அழுத்தமில்லாமல் பெற்றோர்கள் உணரவைக்க வேண்டும். பயம், பதற்றம் போன்றவற்றைத் தவிர்க்க 'Breathing Exercise' எடுக்கலாம். ஆசிரியர்களிடம், பெற்றோர்களிடம், மூத்தவர்களிடம் பேசலாம். அது பயத்தைப் போக்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு தைரியமாக தேர்வு எழுதச் செல்லலாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு