NEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள்! - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டிருக்கும் தேசியத் தேர்வு முகமையே (National Testing Agency) நீட் தேர்வுக்கு பொறுப்பேற்றுள்ளது.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், `மருத்துவப் படிப்புக்கான நீட்தேர்வு (NEET UG -2020) எப்போது நடக்கும், அத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?` என்ற கேள்வியை எழுப்பியிருந்தார், வாசகர் பாலசந்தர். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS) மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளில் (BAMS/BSMS/BUMS/BHMS) 2020-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான `தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) (National Eligibility Cum Entrance Test (UG) – 2020)' (NEET) அறிவிப்பை தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) தற்போது வெளியிட்டிருக்கிறது.
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டிருக்கும் தேசியத் தேர்வு முகமையே (National Testing Agency) நீட் தேர்வுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளில் இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றிருக்கும் எம்.பி.பி.எஸ் (M.B.B.S), பிடிஎஸ் (B.D.S) மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட (B.A.M.S/B.S.M.S/B.U.M.S/B.H.M.S) இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற விரும்புபவர்கள், இத்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றிடவேண்டும். இதேபோன்று, வெளிநாடுகளில் சென்று எம்.பி.பி.எஸ் (M.B.B.S) படிக்க விரும்புபவர்களும் இத்தகுதித் தேர்வை எழுதித் தகுதிபெற்றிட வேண்டும்.

அகில இந்திய அளவிலான 15% மருத்துவ ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் / மத்தியப் பல்கலைக்கழகங்கள் / தொழிலாளர் காப்பீட்டு மருத்துவக் கல்லூரி, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள், இத்தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வுமூலம் நிரப்பப்படும். பிற மாநிலங்கள் / பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கும் அந்தந்த மாநில / பல்கலைக்கழக / நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டு, இத்தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள், மருத்துவக்கல்வி சேர்க்கையின்போது 17 வயதை நிறைவுசெய்திருக்க வேண்டும். அல்லது 31-12-2020 அன்று 17 வயது நிறைவடைவதாக இருக்க வேண்டும்.

மத்திய / மாநில அரசுகளின் பிற படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்குத் தேவையெனில், இந்த தகுதித்தேர்வு மதிப்பெண்களை விதிமுறைகளின்படி பயன்படுத்திக்கொள்ள முடியும். கலந்தாய்வின்போது, தேவையான தகுதிகள், சுய உறுதிமொழி மற்றும் தேவையான ஆவணங்களை உரிய அதிகாரிகள் மற்றும் கல்லூரிகள் சரிபார்த்து, மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் காலத்தில், பதிவேற்றம் செய்த தகவல்கள் / ஆவணங்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மைக்கு தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) எவ்வகையிலும் பொறுப்பேற்காது. தேசியத் தேர்வு முகமை விண்ணப்பங்களைப் பெறுதல், நுழைவுத்தேர்வு நடத்துதல், முடிவுகளை வெளியிடல், அகில இந்திய தரப்பட்டியலை இந்திய அரசின் உடல்நலம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உடல்நலச் சேவைகளுக்கான பொது இயக்குநரகத்துக்கு (Directorate General of Health Services) வழங்கும் பணியினை மட்டும் செய்கிறது.

கல்வி மற்றும் வயதுத்தகுதி
நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள், மருத்துவக்கல்வி சேர்க்கையின்போது 17 வயதை நிறைவுசெய்திருக்க வேண்டும். அல்லது 31-12-2020 அன்று 17 வயது நிறைவடைவதாக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். ஓபிசி / எஸ்சி / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுடன், ஆங்கிலப் பாடத்தையும் எடுத்து படித்திருக்க வேண்டும். (மேலும் தகுதியுடைய சில படிப்புகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள, தகவல் குறிப்பேட்டைப் படிக்கலாம்) இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பப் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் ( EWS) பிரிவினர் இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பம் பாடங்களில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இந்த ஆண்டில், மேற்காணும் +2 அல்லது அதற்கு இணையான தேர்வை எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம்
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், https://ntaneet.nic.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இத்தளத்திலிருக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாக படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இணைய வழியிலான விண்ணப்பத்தில், நான்கு படிநிலைகள் (Steps) இருக்கின்றன. முதல் நிலையில், மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றைக் கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இரண்டாம் நிலையில், விண்ணப்பத்தை நிரப்பி, கணினி மூலம் உருவாக்கப்படும் விண்ணப்ப எண்ணை குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாம் நிலையில், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அஞ்சல் அட்டை (Post Card) அளவிலான படம், விண்ணப்பதாரரின் கையொப்பம், இடதுகைப் பெருவிரல் ரேகை (Left Thumb Impression) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். நான்காம் நிலையில், கொடுக்கப்பட்டிருக்கும் ஏதாவதொரு வழிமுறையைப் பின்பற்றி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திட வேண்டும்.
பொது – ரூ.1,500/- ஓ.பி.சி மற்றும் பொது - ஈடபிள்யூஎஸ் ( EWS) பிரிவினர் ரூ.1,400/- எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர், ரூ.800/- என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 31-12-2019. விண்ணப்பக் கட்டணம் செலுத்திடக் கடைசி நாள்: 1-1-2020. விண்ணப்பத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால், 15-1-2020 முதல் 31-1-2020 வரை செய்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதும் மொத்தம் 155 நகரங்களில் 3-5-2020 அன்று மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த தகுதித் தேர்வு நடைபெறும்.
வழிகாட்டல் நெறிமுறைகள்
விண்ணப்பம் நிரப்புவதற்கான வழிமுறைகள், தேர்வு அறை நெறிமுறைகள், சிறப்புப் பட்டியல் மற்றும் தகுதிகள், கலந்தாய்வு நடைமுறைகள், பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கான தகவல்கள், தடுக்கப்பட்டவை மற்றும் உடை கட்டுப்பாடுகள், விண்ணப்பம் நிரப்புவதற்கான பொதுச்சேவை மையங்கள் மற்றும் அதற்கான கட்டணங்கள், பாடத்திட்டம், விண்ணப்பத்துடன் இணைப்பதற்கான படிவங்கள் எனப் பல்வேறு செய்திகள் தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 11 மொழிகளில் இத்தேர்வை எழுத முடியும். அனைத்துத் தேர்வு மையங்களிலும் ஆங்கிலம், இந்தி மற்றும் உருது மொழிகளில் இத்தேர்வை எழுத முடியும். தமிழ்நாட்டிலுள்ள மையங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் எழுத முடியும்.
நுழைவுத் தேர்வு
விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்கள் அனைவரும் 27-3-2020-ம் தேதி நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையை https://ntaneet.nic.in/ இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 14 நகரங்கள் உட்பட, இந்தியா முழுவதும் மொத்தம் 155 நகரங்களில் 3-5-2020 அன்று மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த தகுதித் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் 4-6-2020 அன்று வெளியிடப்படும்.
கூடுதல் தகவல்கள்
இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள், https://ntaneet.nic.in/ மற்றும் https://nta.ac.in/ ஆகிய இணையதளங்களைப் பார்வையிடலாம். அல்லது neetug-nta@nic.in, neet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்புகொள்ளலாம். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை Help Desk 0120-6895200 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!