கல்லூரி மாணவர்களுக்கு ஓஎன்ஜிசி ஸ்காலர்ஷிப்... எப்படி விண்ணப்பிப்பது?

ஒவ்வொரு பகுதிக்கும் 200 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுத்து கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களில் 1,000 பேருக்கு இந்த உதவித்தொகையை வழங்கிடத் திட்டமிட்டிருக்கிறது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation Limited) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறப்பு மிக்க மாணவர்களுக்கு (SC/ST Meritorious Students) மாதம் ரூ.4,000 வீதம் ஆண்டுக்கு ரூ48,000 உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
உதவித் தொகை எண்ணிக்கை!
இந்த நிறுவனம் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கி வடக்கு, மேற்கு, வடகிழக்கு, கிழக்கு, தெற்கு என்று ஐந்து பகுதிகளாகப் (Zone) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் 200 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுத்து கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களில் 1,000 பேருக்கு இந்த உதவித்தொகையை வழங்கிடத் திட்டமிட்டிருக்கிறது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
நான்காண்டுக் கால பொறியியல் படிக்கும் மாணவர்கள் (B.E / B.Tech) - 494
மருத்துவ (MBBS) மாணவர்கள் - 90
இரண்டாண்டு கால முதுநிலை வணிக மேலாண்மை (MBA) படிக்கும் மாணவர்கள் - 146

முதுநிலை புவியியல் / புவி இயற்பியல் படிக்கும் மாணவர்கள் (M.SC – Geology / Geophysics) – 270
உதவித்தொகை வழங்கப்படும் மொத்த மாணவர்களில் 50% பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தகுதிகள்
இந்த உதவித்தொகை இந்தியாவில் படிக்கும், இந்தியக் குடியுரிமையுடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
நான்காண்டுக் கால அளவிலான பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் முதல் வருடம் படிக்கும் மாணவர்களும் இரண்டாண்டுக் கால அளவிலான புவியியல் / புவி இயற்பியல் மற்றும் வணிக மேலாண்மை முதுநிலைப் படிப்புகளில் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் வழக்கமான முறையில் சேர்ந்து முதல் வருடம் படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு, ப்ளஸ் டூ தேர்வில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமலும், முதுநிலை புவியியல் / புவி இயற்பியல் மற்றும் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளுக்கு, இளநிலைப் பட்டப்படிப்பில் அனைத்து வருடங்களையும் சேர்த்து 60% மதிப்பெண்களுக்குக் குறையாமலும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்களுக்கான பகுதி (Zone), மாணவர்கள் படிக்கும் கல்லூரி / பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனம் அமைந்திருக்கும் இடத்தைக் கொண்டு முடிவு செய்யப்படும்.
விண்ணப்பதாரர்களின் மொத்தக் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 4.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயது 1.10.2019 அன்று 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
அரசு மற்றும் பிற நிதி அமைப்புகளிலிருந்து இப்படிப்புக்காக வேறு உதவித்தொகை எதுவும் பெறாதவராக இருக்க வேண்டும்.

உதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த விவரங்கள் 10.12.2019 அன்று www.ongcindia.com/ எனும் இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஒவ்வொரு வருடமும் தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டு, தொடர்ச்சியாக உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் நடத்தப்பெற்ற தேர்வுகளில் குறைந்தது 50 சதவிகித (புள்ளிக் கணக்கில் 5.0) மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை பெறும் மாணவர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் இதைக் கொண்டு வேலைவாய்ப்புக்கான உரிமையைக் கோர முடியாது.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் https://www.ongcindia.com/wps/wcm/connect/en/career/recruitment-notice/advertisement-for-meritorious-sc-st-students எனும் இணையப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் ‘Application format’ எனுமிடத்தில் சொடுக்கி, உரிய விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அதை முழுமையாக நிரப்பி, விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சான்றிதழ் நகல்களுடன், படிக்கும் கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது தலைவர் வழியாக விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரிக்கு 15.10.2019 தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்றடையக் கடைசிநாள்: 15.10.2019
கூடுதல் தகவல்களுக்கு
இந்த உதவித்தொகை குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் http://www.ongcindia.com/ எனும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது இந்நிறுவன அலுவலகத்தின் 0135-2792634/56/25 எனும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு பெறலாம்.