Published:Updated:

சைனிக் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விருப்பமா? நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அகில இந்திய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு 2022 - விண்ணப்பிப்பது எப்படி? ஒரு முழுமையான வழிகாட்டல்!

தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவைகளை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளி உட்பட இந்தியா முழுவதும் 33 இடங்களில் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு - 2022 (All India Sainik Schools Entrance Examination 2022) அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இடங்கள்

இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் 33 சைனிக் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிற்கான சேர்க்கையில் மாணவர்கள் - 2318 இடங்கள், மாணவிகள் – 350 இடங்கள் என்று மொத்தம் 2668 இடங்கள் இருக்கின்றன. இப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் மாணவியர் சேர்க்கை நடைபெறவிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, இந்தியா முழுவதும் சைனிக் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பில் காலியாக இருக்கும் 238 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

சைனிக் பள்ளி - உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகர்
சைனிக் பள்ளி - உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகர்
மேற்காணும் இடங்களில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் மாணவர்கள் – 84 இடங்கள், மாணவிகள் – 10 இடங்கள் என்று மொத்தம் 90 இடங்கள் இருக்கின்றன. இப்பள்ளியில் 9 ஆம் வகுப்பில் 18 இடங்கள் காலியாக இருக்கின்றன.

தகுதி

சைனிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்களுக்கு 31-3-2022 அன்று வயது 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 1-4-2010 முதல் 31-3-2012 ஆம் நாளுக்குள் பிறந்திருக்க வேண்டும். 9 ஆம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 31-3-2022 அன்று வயது 13 முதல் 15 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 1-4-2007 முதல் 31-3-2009 ஆம் நாளுக்குள் பிறந்திருக்க வேண்டும் மற்றும் அங்கீகாரம் பெற்ற பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் மாணவியர் சேர்க்கை இல்லை.

இட ஒதுக்கீடு

சைனிக் பள்ளியில் இருக்கும் மொத்த இடங்களில், பள்ளி அமைந்திருக்கும் மாநிலம் / ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 67% இடங்களும், பிற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 33% இடங்களும் என்று பொதுவான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு ஒதுக்கீட்டிலும் எஸ்சி பிரிவினர் 15%, எஸ்டி பிரிவினர் 7.5%, ஓபிசி பிரிவினர் 27% என்று மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும். மேற்காணும் அனைத்து இட ஒதுக்கீட்டிலும் பாதுகாப்புத்துறைப் பணியிலிருப்பவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் குழந்தைகளுக்கு என்று 25% இடங்கள் வழங்கப்படும்.

நுழைவுத்தேர்வு

சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வாக நடத்தப்பெறும், அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு - 2022 (All India Sainik Schools Entrance Examination – AISSEE 2022) இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் தேசியத் தேர்வு முகமையால் (National Testing Agency) நடத்தப்படுகிறது.
மாணவர்களின் தேர்வு
மாணவர்களின் தேர்வு
Representational Image

தேசியத் தேர்வு முகமை, விண்ணப்பங்களைப் பெறுதல், தேர்வினை நடத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல் மற்றும் தரப்பட்டியலை சைனிக் பள்ளிகள் கழகத்திற்கு வழங்கும் பணிகளை மட்டும் மேற்கொள்ளும். தேசியத் தேர்வு முகமை வழங்கிய தரப்பட்டியலைக் கொண்டு, சைனிக் பள்ளிகளே மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும்.

தேர்வு முறை

இந்த நுழைவுத் தேர்வானது பன்முகத் தெரிவு வினாக்கள் (Multiple Choice Questions) எனும் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும்.

6 ஆம் வகுப்பிற்கான கேள்வித்தாளில் கணிதம் தலைப்பில் சரியான விடைக்கு 3 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும்,

நுண்ணறிவு தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும்,

மொழி தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும்,

பொது அறிவு தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும்

என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கான 125 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

9 ஆம் வகுப்பிற்கான கேள்வித்தாளில் கணிதம் தலைப்பில் சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 200 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும்,

நுண்ணறிவு தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும்,

ஆங்கிலம் தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும்,

பொது அறிவியல் தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும்,

சமூக அறிவியல் தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும்

என்று மொத்தம் 400 மதிப்பெண்களுக்கான 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இத்தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு எதுவும் செய்யப்படாது.

விண்ணப்பம் | Application Form
விண்ணப்பம் | Application Form

விண்ணப்பம்

அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு - 2022 (All India Sainik Schools Entrance Examination – AISSEE 2022) எழுத விரும்புபவர்கள், தேசியத் தேர்வு முகமையின் https://aissee.nta.nic.in எனும் இணைய முகவரிக்குச் சென்று, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் குறிப்பேட்டை முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, அதன் பிறகு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் சேர்க்கை பெற விரும்பும் ஏதாவதொரு சைனிக் பள்ளி ஒன்றை மட்டும் தேர்வு செய்து குறிப்பிட வேண்டும். இதேபோன்று, தகவல் குறிப்பேட்டில் தரப்பட்டிருக்கும் தேர்வு மையங்களிலிருந்து நான்கு மையங்களை வரிசைப்படி குறிப்பிட வேண்டும்.

பொதுப்பிரிவினர் ரூ.550/- எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.400/- என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 26-10-2021, மாலை 5.00 மணி. விண்ணப்பக் கட்டணத்தை 26-10-2021, இரவு 11.50 மணிக்குள் செலுத்திட வேண்டும்.
இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் பிழைகள் ஏதாவது இருப்பின், 28-10-2021 முதல் 2-11-2021 வரையிலான நாள்களில் திருத்தம் செய்து கொள்ள முடியும்.
பள்ளி மாணவர்களுக்கான இந்திய தேசிய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வுகள்... விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு மையம் மற்றும் தேர்வு நாள்

இந்த நுழைவுத்தேர்வுக்கான அனுமதி அட்டை https://aissee.nta.nic.in எனும் இணையதளத்தில் தேர்வு நாளுக்கு 15 நாள்களுக்கு முன்பாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். தேர்வுக்கு முன்பாக இந்த அனுமதி அட்டையினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் அமராவதி நகர், சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை என்று 5 தேர்வு மையங்கள் உட்பட இந்தியா முழுவதும் இத்தேர்வுக்கு 176 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேர்வு மையத்தில் தேர்வினை எழுதலாம்.

தேர்வு மையம்
தேர்வு மையம்
இந்தியா முழுவதும் 9-1-2022, ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெறவிருக்கும் இந்த நுழைவுத் தேர்வானது, 6 ஆம் வகுப்புக்குப் பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 மணி வரை 150 நிமிடங்கள் எனும் கால அளவிலும், 9 ஆம் வகுப்புக்குப் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை 180 நிமிடங்கள் எனும் கால அளவிலும் நடைபெறும்.

தேர்வு முடிவுகள்

இத்தேர்வுக்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வினை நடத்தும் தேசியத் தேர்வு முகமை, சைனிக் பள்ளிகள் கழகத்திற்குத் தேர்வு முடிவுகளை அனுப்பி வைத்துவிடும். 6 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர், மாணவிகள் எனத் தனித்தனியாகவும், பள்ளிகள் வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் தரப்பட்டியல் தயாரித்து அனுப்பி வைத்துவிடும். 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்களுக்குப் பள்ளிகள் வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் தரப்பட்டியல் தயாரித்து அனுப்பி வைத்துவிடும்.

மாணவர் சேர்க்கை

தேசியத் தேர்வு முகமை வழங்கிய தரப்பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு சைனிக் பள்ளியின் இணையதளத்திலும் மாணவர் சேர்க்கைக்கு அழைக்கப்படும் மாணவர்கள் பட்டியல் வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்குப் பள்ளியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு, மருத்துவப் பரிசோதனையில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

சைனிக் பள்ளி
சைனிக் பள்ளி
இறுதிப்பட்டியலில் மாணவர் சேர்க்கை கிடைக்கப் பெற்றவர்கள் 2022-2023 ஆம் கல்வியாண்டில் குறிப்பிட்ட சைனிக் பள்ளிகளில் சேர்ந்து தங்களது படிப்பைத் தொடரலாம். சைனிக் பள்ளிகளுக்கும், தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூடுதல் தகவல்கள்

இத்தேர்வுக்கான கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் www.nta.ac.in அல்லது https://aissee.nta.nic.in எனும் இணையதளங்களில் ஒன்றைப் பார்வையிடலாம் அல்லது 011 - 40759000, 69227700 எனும் தொலைபேசி எண்களிலோ அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு