Published:Updated:

ரசிய மொழியை குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ளலாம்... அதற்கான தனிப்பயிற்சி மையங்களில் இணைவது எப்படி?!

மதுரையிலுள்ள ரசிய மொழிப் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கிராவட்ஸ் ஜோயா விளாடிமிர்ரொவ்னா அவர்களைச் சந்தித்த போது அவர் சொன்ன தகவல்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சோவியத் ஒன்றியம் (Soviet Union) என்று அழைக்கப்பட்டு வந்த சோவியத் ஒன்றிய அரசுடன் இந்திய அரசுக்கு நெருக்கமான நட்புறவு இருந்துவந்த நிலையில் இரு நாடுகளுக்குமிடையில் அரசியல், வணிகம் மட்டுமன்றி, கல்வி, கலை மற்றும் பண்பாடுகள் தொடர்பான உறவுகளும் மேலோங்கி இருந்தன. 1991ஆம் ஆண்டின் இறுதியில் சோவியத் ஒன்றியம் 15 தன்னாட்சிக் குடியரசு நாடுகளாகப் பிரிந்துவிட்ட நிலையில், இந்தியா, சோவியத் ஒன்றியத்துக்கிடையிலான உறவில் சிறிது தளர்வு ஏற்பட்டது. பின்னர், பன்னாட்டு அரசியல் சட்டப்படி சோவியத் ஒன்றியத்தின் முதன்மை அரசாக இருந்த ரசியா, ரசியக் கூட்டமைப்பு (Russian Federation) எனப் பெயர் மாற்றம் பெற்றது.

ரசியா மற்றும் பழைய சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த சில நாடுகளில்தான் உலகிலேயே மிகக் குறைந்த செலவில் மருத்துவக் கல்வியைப் பெற முடிகிறது. இந்தியாவில் மருத்துவக் கல்வியில் (MBBS) இடம் கிடைக்காத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், தங்களது மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கிட ரசியா மற்றும் அதனருகிலுள்ள பழைய சோவியத் ஒன்றியத்திலிருக்கும் குறிப்பிட்ட சில நாடுகளையே தேர்வு செய்கின்றனர். ரசியா உள்ளிட்ட அந்நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ரசிய மொழிப்பயிற்சி அவசியத் தேவையாக இருக்கிறது.

ரஷ்யா
ரஷ்யா
`ரசிய மொழியை எங்கே போய்க் கற்றுக்கொள்வது? அம்மொழியினைக் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கெனத் தனிப்பயிற்சி மையங்கள் ஏதாவது இருக்கிறதா?’ என்று தேடியபோது, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் ரசிய மொழிப்பயிற்சியளிக்கும் சிறப்பு மையங்கள் செயல்பட்டுவருவது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, மதுரையிலுள்ள ரசிய மொழிப் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கிராவட்ஸ் ஜோயா விளாடிமிர்ரொவ்னா அவர்களைச் சந்தித்தபோது அவர் சொன்ன தகவல்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன.

பெண் குழந்தைகளுக்கான இந்திராகாந்தி உதவித்தொகை குறித்த தகவல்கள் கிடைக்குமா?| Doubt of Common Man

ரசிய அறிவியல் மற்றும் பண்பாட்டு மையம்

ரசியா (Russian Federation) மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான அறிவியல் மற்றும் கலை, பண்பாடுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக, இந்தியாவில் புதுடெல்லி, கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் ரசிய அறிவியல் மற்றும் பண்பாட்டு மையங்கள் (Russian Centre of Science and Culture) ரசிய நாட்டு அரசால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ரசிய மொழிப் பயிற்சிகள்
ரசிய மொழிப் பயிற்சிகள்

மூன்று வகைப் பயிற்சிகள்

சென்னையில் அமைந்திருக்கும் இம்மையத்தின் மூலம், தென்னிந்தியாவில் சென்னை, மதுரை, பெங்களூரு ஆகிய நகரங்களில் ரசிய மொழித் தொடக்கப் பயிற்சி (Elementary Course in Russian), ரசிய மொழிக்கான அடிப்படைப் பயிற்சி (Basic Course in Russian) மற்றும் சிறப்பு நோக்கங்களுக்கான திட்டங்கள் (Specially Oriented Programmes) எனும் மூன்று வகையான ரசிய மொழிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன.

ரசிய மொழித் தொடக்கப் பயிற்சி

ரசிய மொழித் தொடக்கப் பயிற்சி (Elementary Course in Russian) என்பது முதல் நிலை 1 (Level 1) மற்றும் இரண்டாம் நிலை 2 (Level 2) எனும் இரண்டு நிலைகளைக் கொண்டது. இப்பயிற்சியானது ரசிய மொழியின் அடிப்படை மற்றும் உச்சரிப்புகளை உள்ளடக்கியது. இப்பயிற்சியில் ரசிய மொழியின் அடிப்படை உரையாடலுக்குத் தேவையான சாதாரண ஒலி வேறுபாடு உருப்படிமம் (Simple Intonation Patterns), இலக்கணம் (Grammar), படித்தல் (Reading), எண்ணூறு முதல் ஆயிரத்து இருநூறு சொற்கள் (Vocabulary of 800 -1200 words) போன்றவை இடம் பெற்றிருக்கும். இப்பயிற்சியை நிறைவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட இடங்களில் / நேரங்களில் ரசிய மொழியிலான தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியும்.

Mrs. Kravets Zoya Vladimirovna | கிராவட்ஸ் ஜோயா விளாடிமிர்ரொவ்னா
Mrs. Kravets Zoya Vladimirovna | கிராவட்ஸ் ஜோயா விளாடிமிர்ரொவ்னா

ரசிய மொழிக்கான அடிப்படைப் பயிற்சி

ரசிய மொழிக்கான அடிப்படைப் பயிற்சி (Basic Course in Russian) என்பது மூன்றாம் நிலை (Level 3) பயிற்சியாகும். இப்பயிற்சியானது ரசிய மொழியைப் படித்தல், பேசுதல், புரிந்துகொள்ளல் போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது. இப்பயிற்சியில் ரசிய மொழியில் கூடுதல் இலக்கணங்கள் மற்றும் அதிகப்படியான ரசியச் சொற்கள் போன்றவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்பு நோக்கங்களுக்கான திட்டங்கள்

தொழில் நெறிஞர்கள் (Professionals), மாணவர்கள் (Students) மற்றும் மொழி ஆர்வலர்கள் (Language Enthusiasts) போன்றவர்களுக்குத் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாள்களில் (Week Days) சிறப்பு நோக்கத் திட்டப் பயிற்சிகள் (Specially Oriented Programmes) அளிக்கப்படுகின்றன. குறிப்பாக, ரசியப் பல்கலைக்கழகங்களில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு ரசியப் புறப்பாட்டுக்கு முந்தைய பயிற்சி (Pre-Departure Russian) அளிக்கப்படுகிறது.

இவை தவிர, ரசியாவிலுள்ள சில குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் வணிக நோக்குடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள், ரசியாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் போன்றவர்களுக்குக் குறிப்பிட்ட தேவைகளுக்கான ரசிய மொழிச் சொற்களுடன் கூடிய சில சிறப்புப் பயிற்சிகளும் தனிப்பட்ட நபர்களுக்கான பயிற்சிகளாக அளிக்கப்படுகின்றன.

ரசிய மொழிப் பயிற்சிகள்
ரசிய மொழிப் பயிற்சிகள்

பயிற்சிக் காலம்

இப்பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாள்களில் (Week Days) காலை 8.00 மணி முதல் 10.30 மணி வரை என இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் வீதம் நான்கு வாரங்களுக்கு 60 மணி நேரமும், வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் வீதம் பத்து வாரங்களுக்கு 60 மணி நேரமும் எனக் கொண்டு வழங்கப்படுகிறது. சில வேளைகளில் மாலை நேரப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

பயிற்சிச் சான்றிதழ்கள்

இந்த மையம் ரசிய நாட்டு அரசு அமைப்பாகச் செயல்பட்டு வருவதால், இப்பயிற்சி வகுப்புகள் அனைத்தும் வணிக நோக்கமின்றி, குறைவான கட்டணத்தில் விரைவான மொழிப் பயிற்சியினை அளிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. மதுரை மையத்தில், பிற மையங்களைக் காட்டிலும் மிகக் குறைவான கட்டணமே பெறப்படுகிறது. இம்மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரசிய நாட்டுத் தூதரகத்தின் பயிற்சிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், இச்சான்றிதழுக்கு ரசியா மட்டுமன்றி, பிற நாடுகளிலும் உரிய மதிப்பளிக்கப்படுகிறது.

செவனிங் திட்டத்தில் முழு உதவித்தொகை - இங்கிலாந்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

பயிற்சிக்கான வழிமுறைகள்

ரசிய மொழிப் பயிற்சிக்கான வகுப்புகளில் சேர்வதற்குக் குறைந்தபட்சக் கல்வித்தகுதி, வயது, கால வரையறை என்று எதுவும் இல்லை. இப்பயிற்சியில் குறைந்தது ஆறு நபர்கள் சேர்க்கை பெற்றாலே அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். வெளிநாடுகளில் உயர்கல்வி பெற வழிகாட்டும் கல்வி அமைப்புகள் / தனிப்பயிற்சி நிறுவனங்கள் போன்றவை, தங்களுடைய அமைப்பில் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் ரசிய மொழிப் பயிற்சி அளிக்க வேண்டினால், அதற்கான சலுகைகள் வழங்கப்பட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ரசிய மொழிப் பயிற்சிகள்
ரசிய மொழிப் பயிற்சிகள்

கூடுதல் தகவல்கள்

ரசிய மொழிப் பயிற்சி குறித்த மேலும் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள இம்மையத்தின் இணையதளத்தைப் பார்வையிடலாம். சென்னையிலிருப்பவர்கள் “Russian Centre of Science and Culture, 74 (old 27), Kasturi Ranga Road, Chennai-600018” எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது india_chennai@rs.gov.ru எனும் மின்னஞ்சல் முகவரியிலோ, அல்லது, 044 - 24990050 எனும் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெறலாம். மதுரை பயிற்சி மையம் குறித்த தகவல்களுக்கு திருமதி. கிராவட்ஸ் ஜோயா விளாடிமிர்ரொவ்னா அவர்களின் 9487009015 எனும் தொடர்பு எண்ணிலும், பெங்களூரு பயிற்சி மையம் குறித்த தகவல்களுக்கு திருமதி. நர்கிஸ் பகிரோவா அவர்களின் – 9513011917 எனும் தொடர்பு எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு