Published:Updated:

தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி; கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்ப்பது எப்படி?

School Student (Representational Image)
School Student (Representational Image) ( Nikhita S on Unsplash )

கொரோனா காரணமாகக் கடந்த கல்வியாண்டில் இலவச கல்விச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை விகிதமானது சரிந்து விட்டதை அடுத்து, தற்போது நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கத் தமிழக பள்ளிக்கல்வித்துறை முனைப்புக் காட்டி வருகிறது.

கல்வி, இருள் சூழ்ந்த சமூகத்தை ஒளி பாய்ச்சி மீட்டெடுக்கும் மகத்தான ஆயுதம். ஆனால், அது இங்கே பலருக்கும் எட்டாக்கனியாகவே தற்போதும் இருக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் என இந்த மூன்றை மட்டுமே தங்கள் அடிப்படைத் தேவை எனக் கருதி காலச் சக்கரத்தில் சுழன்றோடி விட்ட கடைநிலை மக்கள் மத்தியில் தற்போதுதான் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, தலைமுறை தலைமுறையாய் தங்களுக்குக் கிடைக்காமல் போன, மறுக்கப்பட்ட கல்வி தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைத்தாக வேண்டும் என்பதில் இந்தக் காலத்து பெற்றோர்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

அதே போல், குடும்பச் சூழல் காரணமாகவும், சாதியைக் காரணம் காட்டியும் எந்த ஒரு குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக 2009-ல் இந்திய நாடாளுமன்றத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றி ஒரு சட்டத்தை இயற்றியது. அந்தச் சட்டம், `குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009' (Right to Education Act 2009). இந்தச் சட்டத்தை அமைச்சரவையில் முன்மொழிந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ``நாம் அனைத்து குழந்தைகளுக்கும், பாலினம் மற்றும் சமூக வேறுபாடின்றி கல்வி அளிக்க வேண்டும். ஒரு கல்வி அவர்களைப் பொறுப்பான மற்றும் நல்ல குடிமக்கள் ஆகத் தேவையான திறமைகள், அறிவு, மதிப்பு மற்றும் மனப்போக்கு பெறுவதற்கு உதவ வேண்டும்" என்றார். எந்த ஒரு காரணத்தாலும் இந்தியாவில் ஒரு குழந்தையின் அடிப்படைக் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் இந்தச் சட்டத்தின் சாராம்சம்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்த இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்து விரிவாகப் பார்க்கலாம்

* கல்வி அடிப்படை உரிமை!

இந்தச் சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய அடிப்படைக் கல்வியை உறுதி செய்கிறது. 2009-ல் இயற்றப்பட்ட இந்தச் சட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 2010-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் மூலம், குழந்தைகளுக்குக் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றிய நாடுகளின் பட்டியலில் 135-வது நாடாக இந்தியாவும் இணைந்தது. கல்வியை அடிப்படை உரிமையாகக் கருதி இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் தொடக்கக் கல்வி முடியும் வரையிலும், குழந்தைகளைப் பள்ளி நிர்வாகங்கள் கல்வி கற்கத் தடை விதிக்கவோ, வெளியேற்றவோ அல்லது தேர்வுகளில் தோல்வியுறவோ செய்ய முடியாது. எந்த ஒரு குழந்தைக்கும் கல்வி என்பது எட்டாக்கனியாகிவிடக் கூடாது என்பதே இந்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மிக முக்கிய நோக்கம்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம்!

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் 2009-ன் படி இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்று இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு LKG மற்றும் 1-ம் வகுப்புகளில் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்தச் சட்டம் ஏழை, எளிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த ஒரு தனியார் பள்ளியிலும் நன்கொடை அளிக்காமலும், பள்ளி நிர்வாகத்தின் மூலம் நேரடி நேர்காணல் செய்யப்படாமலும் சேர்க்க வழிவகை செய்கிறது. தொடக்கக் கல்விக்கே லட்சங்களில் கட்டணம் வசூலித்துக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய குழந்தைகளும் சேர்ந்து கல்வி கற்க முடியும் என்ற நிலை இந்தச் சட்டத்தின் மூலம் சாத்தியமாகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளைப் பள்ளி நிர்வாகங்கள் தடுத்து நிறுத்தவோ, பள்ளியிலிருந்து வெளியேற்றவோ முடியாது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் யார்?

1. பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்

* பின்தங்கிய வகுப்பு (BC)

* மிகவும் பின்தங்கிய வகுப்பு (MBC)

* பட்டியல் பழங்குடியினர் (ST)

* பட்டியல் இனத்தவர்கள் (SC)

2. நலிவடைந்த பிரிவினர்

ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்துக்குக் குறைவாக உள்ள அனைவரும் நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

3. பின்தங்கிய பிரிவு - சிறப்பு வகை

* ஆதரவற்ற குழந்தைகள்

* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்

* மாற்றுத்திறனாளி குழந்தைகள்

* திருநங்கைகள்

* எச்.ஐ.வி நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள்

மேற்குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் இந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

Students (Representational Image)
Students (Representational Image)
AP Photo/Altaf Qadri

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிப்பது?

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ன் கீழ் 3 முதல் 4 வயதுக் குழந்தைகளைப் பெற்றோர் LKG வகுப்பிலும் 1-ம் வகுப்பிலும் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். முன்பெல்லாம், நேரடியாகச் சென்று மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் விண்ணப்பிக்க முடியும். ஆனால், பெற்றோர்களின் வசதிக்காகத் தற்போது இணைய வழியிலேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது சேர்க்கை மற்றும் தேர்வு நடைமுறைகளுக்கும் பொருந்தும். விண்ணப்பதாரர் மேற்குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியம். அதே போல், விண்ணப்பதாரரின் வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒரு குழந்தை குறைந்தது 1 பள்ளியிலிருந்து அதிகபட்சம் 5 பள்ளிகள் வரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

பள்ளியில் சேர்ப்பதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் ஆவணங்கள் அவசியம்

* குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

* பெற்றோர் வருமானச் சான்றிதழ்

* சாதிச் சான்றிதழ்

* இருப்பிடச் சான்று

இருப்பிட முகவரியை நிரூபிக்க கீழ்க்காணும் ஆதாரங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்

* குடும்ப அட்டை

* ஆதார் அட்டை

* வாக்காளர் அட்டை

* ஓட்டுநர் உரிமம்

* வங்கிக் கணக்குப் புத்தகம்

* பான் கார்டு

* தொலைப்பேசி கட்டண ரசீது

* மத்திய/மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை

* கிராம நிர்வாக அதிகாரியால் வழங்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகள் தேர்வுசெய்யப்படும் முறை

இலவசக் கல்வி பெற விண்ணப்பித்த குழந்தைகள் தங்களது தேர்வு நிலையை இணைய வழியாகத் தெரிந்துகொள்ளலாம். இலவச கல்விக்கான விண்ணப்ப தேதி முடிந்த பிறகு, விண்ணப்பங்கள் அரசால் முறையாகச் சரிபார்க்கப்பட்டு, உண்மை தகவல்களைக் கொண்டு விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுக் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதே போல், மேற்குறிப்பிட்டுள்ள பின்தங்கிய சிறப்புப் பிரிவு குழந்தைகள் மட்டும் குலுக்கல் முறைக்கு அப்பாற்பட்டு முன்னதாகவே அவரவர் விண்ணப்பித்த பள்ளிகளிலேயே சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பெயர்கள் அவரவர் விண்ணப்பித்த தனியார்ப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, பெற்றோர் முறையாகக் கொடுக்கப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

தமிழ்நாடு கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011

2009-ல் மத்திய அரசால் இயற்றப்பட்ட `குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்' தொடர்பாகத் தமிழக அரசு 2010-ல் அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு தமிழக குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி விதிமுறைகள் சட்டத்தை 12 அரசாணைகளை வெளியிட்டு நிறைவேற்றியது. மாநிலங்களின் பொறுப்பில் மத்திய அரசு இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை விட்டுள்ளதால், மாநிலங்கள் அதற்கென தனி நிர்வாகக் குழுக்கள் நிறுவி 25% இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முனையமாகச் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், மக்கள் மத்தியில் இந்த இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் போனதால், மக்களிடையே இந்தச் சட்டத்தின் சாரங்களைக் கொண்டு சேர்த்து தனியார்ப் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவிகித இடங்களை முழுமையாக நிரப்ப, மாவட்ட கல்வி இயக்கங்கள் மூலம் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

School Students
School Students
Photo: Vikatan / Balasubramanian.C

தமிழகத்தில் 25% இட ஒதுக்கீட்டின் நிலை என்ன?

இந்தியா முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 22 லட்சம் இடங்கள் இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணத்தால் அதில் பாதிக்கும் குறைவாகவே நிரப்பப்படுகின்றன. இட ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள் தனியார்ப் பள்ளிகளால் பொதுப்பிரிவிலான சேர்க்கையின் கீழ் நிரப்பப்பட்டு வருகிறது. கல்வியறிவில் முதன்மை மாநிலமாகத் திகழும் கேரளாவில் தொடங்கி பீகார் வரையிலும் இதே நிலைதான் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்திலும் இதே நிலைதான். தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சுமார் 1,20,000 இடங்கள் ஒதுக்கப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதில் 50 முதல் 60 சதவிகிதம் இடங்களே நிரப்பப்படுகின்றன. இந்த எண்ணிக்கையானது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்கு மேல்தான் என்றாலும் விழிப்புணர்வு இல்லாததால் மீதமுள்ள இடங்கள் தனியார் பள்ளிகளால் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படுகிறது.

அதே போல், தமிழகத்தில் 2018-2019 கல்வியாண்டு வரையிலும் நேரடியாக மட்டுமே பெற்றோர் விண்ணப்பங்களைத் தனியார்ப் பள்ளிகளில் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. அதில் அணுகுமுறை சிக்கல்கள் காரணமாக ஏராளமானோர் விண்ணப்பிக்கத் தயக்கம் காட்டி தவிர்த்தனர். அதன் காரணமாக, கடந்த கல்வியாண்டு (2019-2020) முதல் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் முறையைத் தமிழக அரசு இணையவழிக்கு (Online) மாற்றி, விண்ணப்பிக்கும் முறையை எளிமையாக்கியது.

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை

2018-2019 கல்வியாண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட 1,27,137 காலி இடங்களில் 63,309 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு 49% நிரப்பு விகிதமாக இருந்தது.

2019-2020 கல்வியாண்டில் 1,24,350 ஒதுக்கப்பட்டு அதில் 73,504 இடங்கள் நிரப்பப்பட்டு நிரப்பு விகிதம் 59 சதவிதமாகப் பதிவானது.

கடந்த (2020-2021) கல்வியாண்டில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாகத் தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இணைய வழி சேர்க்கை கால தாமதமானது. மேலும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாததால் கடந்தாண்டு நவம்பர் மாதம் வரையிலும் இணையத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால், பொதுப் பிரிவு மாணவர்களுக்குக் கடந்தாண்டு ஜூன் மாதமே இணையவழி வகுப்புகள் தொடங்கி விட்டன. அதனால், கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார்ப் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தாண்டும் நடப்பு கல்வியாண்டிற்கான (2020-2021) மாணவர் சேர்க்கை அறிவிப்பும் தாமதமாகவே வெளியாகியிருக்கிறது. தமிழக அரசு இம்மாதம் (ஜூலை) 5-ம் தேதிதான் இலவச கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையைத் தொடங்கியிருக்கிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க ஆகஸ்ட் 3-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற அரசு இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். அதே போல், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார அலுவலகங்களிலும் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகு, சரிபார்க்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கொரோனா காரணமாகக் கடந்த கல்வியாண்டில் இலவச கல்விச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை விகிதமானது சரிந்து விட்டதை அடுத்து, தற்போது நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கத் தமிழக பள்ளிக்கல்வித்துறை முனைப்புக் காட்டி வருகிறது.

RTE
RTE

இலவச கல்வி உரிமைச் சட்டம் குறித்த தமிழக தனியார்ப் பள்ளிகளின் பார்வை எப்படியாக இருக்கிறது?

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் மூலம் ஏராளமான குழந்தைகள் பயனடைந்து கொண்டிருக்கின்றனர். தனியார்ப் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான அரசின் 25% இட ஒதுக்கீட்டிற்கு வருடந்தோறும் அந்தந்த மாநில அரசுகள் குறிப்பிட்ட தொகையினை தனியார்ப் பள்ளிகளுக்குச் செலுத்தி வருகின்றன. ஆனால், இலவச கல்வித் திட்டத்தின் கீழ் அரசுகள் முறையாக நிதித் தவணைகளைச் செலுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் கடந்த சில வருடங்களில் அதிகளவில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதைப் பற்றி அறிந்துகொள்ள தமிழ்நாடு தனியார்ப் பள்ளிகள் சங்கத்தின் ஆசிரியர் (Tamilnadu Private Schools Association - School Voice), மற்றும் வழக்கறிஞர் ஜான் ஆரோக்கிய பிரபுவை தொடர்பு கொண்டு பேசினோம். ``இலவசக் கல்விச் சட்டத்தின் மூலம் கல்வி அனைவருக்கும் அவசியம் மற்றும் அடிப்படையாக மாறியிருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழந்தைகளின் தொடக்கக்கல்வி எந்த வித தடையுமின்றி தொடர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து கொண்டிருக்கின்றனர். அரசின் இந்தச் சட்டத்தின் படி பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ எனத் தனியார்ப் பள்ளிகளில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒரு தனியார்ப் பள்ளியில் 100 இடங்கள் இருக்கிறதென்றால் அதில் 75 இடங்கள் பொதுப்பிரிவாகக் கருதப்படுகிறது. மீதமுள்ள 25 இடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.

மாநில அரசால் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு தகுதியான மாணவர்களின் விவரங்கள் தனியார்ப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். தமிழ்நாட்டில் 10,400 பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள், 4,100 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் 1,300 சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்விச் சட்டம் பொருந்தும். தனியார்ப் பள்ளிகளில் (1-8ம் வகுப்பு) பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30,000 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறதென்றால், இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால், நோட்டு - புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட இதர சேவை கட்டணங்கள் அவர்களுக்கும் பொருந்தும். இந்த இலவசக் கல்விச் சட்டத்தால் தனியார்ப் பள்ளிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் விதமாக வருடந்தோறும் மத்திய, மாநில அரசுகள் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிகளுக்கு வழங்குகின்றன. ஒரு மாணவருக்கு இவ்வளவு ரூபாய் என்று கணக்கிட்டு எத்தனை மாணவர்கள் படிக்கிறார்களோ அதற்கேற்றதுபோல் அரசால் வழங்கப்படும்.

இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில், ஒரு மாணவருக்கான கல்விக் கட்டணமாக வருடத்திற்கு 27,000 ரூபாய் வரை தனியார்ப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கில் அந்த தொகையானது குறைந்து குறைந்து, தற்போது வருடத்திற்கு ஒரு மாணவருக்கு 10,000 முதல் 12,500 வரைதான் கல்விக் கட்டணமாக அரசு தரப்பில் வழங்கப்படுகிறது.

அரசாணையின் படி வருடத்திற்கு இரண்டு தவணைகளில் தனியார்ப் பள்ளிகளுக்கு இந்த இட ஒதுக்கீடு கல்விக்கட்டணம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் தவணையும், மார்ச் மாதத்தில் 2-வது தவணையும் செலுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த சில வருடங்களாக மாநில அரசு முறையாகச் செலுத்துவதில்லை. 2018-2019 மற்றும் 2019-2020 கல்வியாண்டுகளுக்கான கட்டண பாக்கியை இழுத்தடித்துக் கொண்டிருந்தது. பிறகு, நீதிமன்றம் எச்சரித்து அவகாசம் வழங்கியதும் நிலுவைத் தொகையைச் செலுத்தியது. கடந்த கல்வியாண்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணமாக 34,000 கோடிகளை ஒதுக்கி அளித்தது. அதில், 60% பங்களிப்பு மத்திய அரசினுடையது.

school (Representational Image)
school (Representational Image)
AP Photo/Altaf Qadri
`கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி

இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அரசு அனைத்து தனியார்ப் பள்ளிகளுக்கும் ஒரே குறிப்பிட்ட தொகையைத்தான் வழங்கி வருகிறது. இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சிறிய தனியார்ப் பள்ளியில் பொதுவாக வருடத்திற்கு 20,000 ரூபாய் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படும் பட்சத்தில், இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேரும் போது அவர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாணவருக்குத் தோராயமாக 10,000 முதல் 15,000 ரூபாய் வழங்கப்பட்டு விடும். அதனால் சிறிய தனியார்ப் பள்ளிகளுக்குப் பெரிதான வருவாய் இழப்பு என்பது நேரிடாது. ஆனால், வருடத்திற்கு லட்சக்கணக்கில் கல்விக்கட்டணம் வசூலிக்கும் பெரிய பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு அரசு அதே 10,000 முதல் 15,000 ரூபாயினை வழங்குவதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

அரசாங்கம் 1-8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்தச் சட்டத்தின் கீழ் எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் ஒரே தொகையைத்தான் நிர்ணயித்து வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், சிறிய தனியார் பள்ளிக்கூடங்களுக்குப் பிரச்னை இல்லை. பெரிய பள்ளிக்கூடங்கள் வருவாய் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றன. இது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை தனியார்ப் பள்ளிகள் கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பல தனியார்ப் பள்ளிகள் இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அரசும் செலுத்த வேண்டிய தொகையை முறையாகச் செலுத்துவதில்லை. பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால் ஊரடங்கு காரணமாகப் பொதுப்பிரிவு மாணவர்களின் பெற்றோர்களும் பெரும்பாலும் கல்விக் கட்டணம் செலுத்துவதில்லை.

எனவே, அரசு இந்த இக்கட்டான நேரத்தில், அரசு செலுத்த வேண்டிய தொகையை முறையாகச் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்" என்றார்.

School Students (Representational Image)
School Students (Representational Image)

அரசு தரப்பு விளக்கம் என்ன?

இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணம் முறையாகச் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவது தொடர்பாகத் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலகத்தின் முதன்மை செயல் அதிகாரி வெற்றிச்செல்வியிடம் பேசினோம்.

``திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 351 மெட்ரிக் பள்ளிகள், 350 நர்சரி பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த கல்வியாண்டைக் காட்டிலும் இந்தக் கல்வியாண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வை மாவட்ட கல்வி அதிகாரிகளின் மூலமாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கையானது தற்போது தொடங்கி விட்டது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்த வரையில் இந்த முறை மாணவர் சேர்க்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

Fact Check: மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்ற TC தேவையில்லையா?

தனியார்ப் பள்ளிகளில் இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ் படிக்கும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாநில அரசு முறையாகத் தனியார்ப் பள்ளிகளுக்கே நேரடியாகச் செலுத்தி வருகிறது. அதில் சிறிது தாமதம் ஏற்படலாம். ஆனால், முறையாக தற்போது வரையிலும் செலுத்தப்பட்டு வருகிறது. நடப்புக் கல்வியாண்டிற்கான தவணை நேரம் வந்தவுடன் அரசு சரியாக இட ஒதுக்கீடு மாணவர்களின் கல்விக்கட்டண தொகையைச் செலுத்தி விடும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் தனியார்ப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு குறித்து அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால்தான், ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாகவே இருந்து கடைசியில் பொதுப்பிரிவிற்கு மாற்றப்பட்டு இடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே, இந்தமுறை மாநிலம் முழுவதும் 25% இட ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை பள்ளிகளைத் தவிர்த்து நர்சரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ என அனைத்து தனியார்ப் பள்ளிகளிலும் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான கல்வியாண்டு மட்டும் மாறும் என்பதால் அந்தப் பள்ளிகளில் விண்ணப்பிப்பவர்கள், அது தொடர்பான பள்ளியின் அறிவிப்புகளை பின்தொடர வேண்டும், பள்ளி நிர்வாகத்திடம் கேட்டறிய வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு