Published:Updated:

3 லட்சம் விண்ணப்பங்கள்; 597 பேர் தேர்வு!- வனக் காவலர் பணிகளை நிரப்பிய இன்ஜினீயர்கள்

தமிழகத்தில் நடந்த வனக் காவலர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், பெரும்பாலான இன்ஜினீயர்கள் தேர்வாகியுள்ளனர்.

காடு
காடு

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டேவருகிறது. இந்தக் கல்வியாண்டில், பி.காம், பி.எஸ்சி போன்ற படிப்புகளில் சேர ஆர்வம் காட்டிய மாணவர்கள், பொறியியலைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

வனத்துறை
வனத்துறை
tn.forests.in

இதேபோல், கடந்த ஆண்டுகளில் பொறியியல் முடித்த மாணவர்கள், தங்கள் துறைகளுக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் திண்டாடிவருகின்றனர். பொறியியல் துறை அல்லாது பிற துறைகளில் இன்ஜினீயரிங் மாணவர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். இதற்குச் சான்றாக, தற்போது மற்றுமொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்னர், தமிழகத்தில் வனக் காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. 300 வன அதிகாரிகள், 762 வனக் காவலர்கள், ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய 152 வனக் காவலர்கள் ஆகிய காலியிடங்களுக்கு 3.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 2.2 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வாகி, 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 597 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

வனத்துறை தேர்வு
வனத்துறை தேர்வு
tn.forests.in

தேர்ச்சிபெற்ற 597 பேருக்கு, கோவையில் உள்ள தமிழக வன அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு பயிற்சி பெற்றவர்களில் 257 பேர், அதாவது 40 சதவிகிதத்தினர் பி.இ மற்றும் எம்.இ முடித்தவர்கள். 21-30 வயதுள்ள பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள், இந்த வனக் காவலர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நிலையில், இதற்கு 257 இன்ஜினீயரிங் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

எம்.இ, எம்.டெக் படிப்பு மட்டும் போதாது! பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்குப் புதிய தகுதிப் படிப்பு

இன்ஜினீயரிங் இல்லாமல் பி.எஸ்சி, எம்.எஸ்சி போன்ற படிப்புகளை முடித்த 150 பேரும், எம்.பி.ஏ, எம்.ஃபில், பி.பார்ம், பி.காம் மாணவர்களும் இந்தப் பணிக்குத் தேர்வாகியுள்ளனர். இதில் மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த வருடம் வனக் காவலர்கள் பணிக்குப் பெண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 597 பேரில் 190 பேர் பெண்கள். வனக் காவலர்கள் பணி சற்று சவாலானது.

வன காவலர் பணி தேர்வு
வன காவலர் பணி தேர்வு
tn.forests.in

இவை அனைத்துக்கும் ஏற்றவாறு, காவலர்கள் தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காகவே பயிற்சி அளிக்கப்படுகிறது. தாங்கள் படித்த துறைகளில் வேலை கிடைக்காத சூழலில், இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததாகவும் இது அரசு வேலை. மாதம் 18,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதால் இந்தப் பணிக்கு வந்ததாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், “அரசு வேலையில் பாதுகாப்பு இருக்கும் என்ற காரணத்திற்காகப் பலர் இந்தத் துறையைத் தேர்வு செய்கின்றனர். திறமையுள்ளவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக வேலை செய்வார்கள். இதில் பிரிவுகளுக்கு இடம் இல்லை. அரசு வேலையில் இப்படி நடப்பது சாதாரண நிகழ்வுதான்” என்று கூறியுள்ளார்.