Published:Updated:

நம்பிக்கை விதைக்கும் நல்லாசிரியர்கள்!

ஆசிரியர்  மனோகர்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் மனோகர்

நான் ஆசிரியர் பணிக்கு வருவதற்கு முன்பே, கடந்த 2007 - 2012 வரை கோடைப் பண்பலையில் அறிவிப் பாளர், தூர்தர்ஷன் பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்

நம்பிக்கை விதைக்கும் நல்லாசிரியர்கள்!

நான் ஆசிரியர் பணிக்கு வருவதற்கு முன்பே, கடந்த 2007 - 2012 வரை கோடைப் பண்பலையில் அறிவிப் பாளர், தூர்தர்ஷன் பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்

Published:Updated:
ஆசிரியர்  மனோகர்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் மனோகர்

கொரோனா குழந்தைகளின் கல்வியைப் பெருமளவு பாதித்துவிட்டது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழிக்கல்வியில் இறங்க, அரசுப்பள்ளிக் குழந்தைகள் கற்றல் செயல்பாடே இல்லாமல் இருந்தார்கள். ஆனாலும் வகுப்பறைத் தொடர்பே இல்லாமல் இருந்த மாணவர்களுக்கு நெருக்கமாக இருந்து கிடைத்த வழிகளில் போதித்து நம்பிக்கையளித்தார்கள் சில ஆசிரியர்கள். அப்படியான ஆசிரியர்கள்தான் இவர்கள்!

மயிலாடுதுறை அருகேயுள்ள காளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக, கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார் மனோகர். தற்போது பொறுப்புத் தலைமையாசிரியர் பணியில் இருக்கும் இவர், காளி ஊராட்சியைச் சுற்றியிருக்கும் செஞ்சி, செட்டிதோப்பு, கீரைமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கொரோனா ஊரடங்கால் செல்போன் இன்றி, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் வீட்டில் முடங்கியிருக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்திவருகிறார்.

மூன்று தலைமுறைகளாக காளி ஊராட்சியிலுள்ள அபிராமி தோப்புத் தெருவில் ஊசிமணி பாசிமணி விற்கும் நாடோடி இன மக்கள் சுமார் 75 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் கழைக்கூத்தாடும் தொழிலைப் பிரதானமாகக் கொண்டவர்கள்.

ஆசிரியர்  மனோகர்
ஆசிரியர் மனோகர்

“சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நான் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவதே இல்லை. சைக்கிளில்தான் பயணிக்கிறேன். அதுபோல் மதிய உணவை மாணவ மாணவிகளுடன் பள்ளியிலேயே சத்துணவில் சாப்பிடுகிறேன். ஆசிரியரும் நம்முடன் சேர்ந்து சாப்பிடுகிறார் என்பதால் ஆசிரியர் - மாணவர் உறவு மேம்படுகிறது. அத்துடன் சத்துணவும் தரமாகத் தயாரிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் நல்ல உணவு கிடைக்கிறது. அதில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஓர் அடையாளம் வேண்டுமே என்பதற்காக, படிப்பு வாசனையே அறியாத நாடோடி இன மக்களிடம் சென்று பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களில் பலரை முதுகலைப் பட்டதாரிகளாக உருவாக்க உதவியிருக்கிறேன். அசோக்குமார் என்ற ஆசிரியரும் எனக்கு உறுதுணையாக இருந்துவருகிறார். அந்த இன மக்களில் முதுகலைப் பட்டம் பயின்ற மாணவர்களைக் கொண்டே மற்றவர்களுக்கும் விழிப்புணர்வைத் தருகிறோம்” என்கிறார் ஆசிரியர் மனோகர்.

*****

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள், ‘நம் வகுப்பறை’ என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இதற்காக, பாடப்புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு, மாணவர்களுக்குச் செயல்முறைத் திட்டங்களை bilingual (தமிழ், ஆங்கிலம்) முறையில் உருவாக்கியுள்ளனர். கடந்த ஆண்டு முதல் இந்தச் செயல்முறைப் பயிற்சித் திட்டங்களை புத்தகங்களாக அச்சடித்தும், ஆன்லைன் மூலமாகவும் வகுப்பெடுத்து வருகின்றனர். காரமடைச் சுற்றுவட்டாரங்களில் உள்ள 80-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இந்த முறையைப் பின்பற்றிவருகின்றன.

தற்போது பள்ளிகள் திறக்க ஆயத்தமாகி வரும் நிலையில், தங்களது நட்பு வட்டாரங்களில் நிதி திரட்டி மாணவர்களுக்கு மாஸ்க், சானிட்டைசர், ஸ்போர்ட்ஸ் டி-ஷர்ட் (பள்ளிக்கு வாரத்துக்கு ஒருநாள் அணிந்து வர) உள்ளிட்டவற்றை வழங்கிவருகின்றனர் ‘நம் வகுப்பறை’ குழுவினர்.

நம் வகுப்பறை ஆசிரியர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன், “11 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆசிரியர்கள் இணைந்து, தொடங்கியதுதான் ‘நம் வகுப்பறை.’ இனி வரும் காலங்களில், ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கவே முடியாவிட்டாலும்கூட அவர்களுக்குக் கல்வி சென்று சேரவேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். காரமடை ஒன்றியத்தில் உள்ள 124 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, அந்தந்த ஆசிரியர்கள் மூலம் வாட்ஸ்அப் குழுவில் இணைத்தோம்.

நம்பிக்கை விதைக்கும் நல்லாசிரியர்கள்!

அதில், 1 முதல் 3-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு தினசரி தமிழ், ஆங்கிலத்தில் பாடம் எடுக்கிறோம். அவர்கள் வீட்டில் இருந்தே பணி செய்வதற்கு, பயிற்சித்தாள் தயார் செய்தோம். முகநூல் நண்பர்களின் உதவியுடன் 2 லட்ச ரூபாய் நிதி திரட்டி, அதை அச்சடித்து மாணவர்களுக்குக் கொடுத்தோம். காரமடை ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் நெசவு, மீன்பிடி, கூலித் தொழில் என்று அடித்தட்டு மக்கள். கொரோனாவால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்தால், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படும்.

அந்த மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகமாக வருவதற்கு, டி-ஷர்ட் கொடுத்துள்ளோம். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்தாலும் இதுபோன்ற முயற்சிகளாலும் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளை நோக்கிப் பலர் வருகின்றனர். காரமடை ஒன்றியத்தில் மட்டும் தனியார் பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இணைந்துள்ளனர்” என்றார் பெருமிதத்துடன்.

‘நம் வகுப்பறை’ குழுவின் இன்னொரு ஆசிரியரான ஜெகதீஸ்குமார், “கிராமப்புறங்களில் சில வீடுகளில் தொலைக்காட்சி, செல்போன் எந்த வசதியும் இருக்காது. செல்போன் இருந்தாலும் நெட்வொர்க் பிரச்னை இருக்கிறது. வாட்ஸ்அப்பில் ஏதாவது அனுப்பினால்கூட, சில கி.மீ நடந்து சென்று டவுன்லோடு செய்ய வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், மாணவர்களுக்கும் கல்விக்கும் பெரிய இடைவெளியே வந்துவிடும். அதனால், குறிப்பிட்ட இடைவெளியில் 3,500 பக்கங்கள் கொண்ட நம் வகுப்பறைப் பயிற்சித்தாளைத் தயார் செய்தோம். குழந்தைகள் இந்தப் பயிற்சித் தாளை எப்படி நிரப்ப வேண்டும் என்பதற்கு ஒரு வீடியோவை உருவாக்கினோம். எந்தத் தொழில்நுட்ப வசதியும் இல்லாத மாணவர்களுக்கு நேரடியாகச் சென்று விளக்கினோம். இப்படி, நேரம் மற்றும் வாய்ப்பு கிடைக்கும்போது மாணவர்களை நேரடியாகச் சந்தித்துப் பாடம் எடுத்துவருகிறோம்” என்றார்.

****

ஆண்ட்ராய்டு மொபைலுக்கு வழியின்றி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது, ‘வானலை கல்வி வானொலி.’ கரூர் மாவட்டத்தின் கடைக்கோடி குக்கிராமத்தில் இயங்கிவரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த ஆன்லைன் வானொலியை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10,795 அரசுப் பள்ளி மாணவர்களின் செவிகளுக்கு தினமும் பாடங்கள் சென்று சேர்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்காகத் தமிழகத்திலேயே முதன்முறையாக இந்த முயற்சி செய்யப்பட்டிருக்கிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஈசநத்தத்தில் இயங்கிவரும், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்தாம், இந்த வானொலியை வடிவமைத்திருக்கிறார்கள். இதுகுறித்து, இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மருதைவீரன், “எங்கள் பள்ளி அமைந்துள்ள இந்த ஈசநத்தம், கரூர் மாவட்டத்தின் கடைசி ஊராக திண்டுக்கல் மாவட்டத்தையொட்டி அமைந்திருக்கிறது. இந்த குக்கிராமத்தில் உள்ள எளிய வீட்டுப் பிள்ளைகள்தான் இங்கே அதிகம் படிக்கிறார்கள். ஆனால், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித்தேர்வுகளில் தொடர்ந்து எங்கள் பள்ளி அதிக விழுக்காடு தேர்ச்சி விகிதத்தைக் காட்டிவருகிறது.

நம்பிக்கை விதைக்கும் நல்லாசிரியர்கள்!

இந்த நிலையில்தான், கடந்த இரண்டு வருடமாக கொரோனா பெரும்தொற்று ஏற்பட்டு, பள்ளிக்கு தொடர் விடுமுறை விடவேண்டியதாகிவிட்டது. அதனால், எங்கள் பள்ளி 10, 12-ம் வகுப்பு படிக்கும் 252 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தோம். ஆனால், அதில் 50 சதவிகித மாணவர்களால்கூட பங்கெடுக்க முடியவில்லை. காரணம், பலரிடம் ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாத சூழல். இந்த நிலையில்தான், எங்கள் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக இருக்கும் கார்த்திகேயன், இந்த ஆன்லைன் ரேடியோ ஐடியாவைச் சொன்னார். உடனே, மற்ற ஆசிரியர்களும் அந்த முயற்சிக்கு ஆர்வம் காட்ட, இந்த வானொலி வடிவமைக்கப்பட்டது. சாதாரண 2 ஜி மொபைலில்கூட இந்த வானொலியைக் கேட்கமுடியும்” என்றார்.

இந்த வானொலியை வடிவமைத்ததில் பெரும்பங்காற்றிய ஆசிரியர் கார்த்திகேயன், “நான் ஆசிரியர் பணிக்கு வருவதற்கு முன்பே, கடந்த 2007 - 2012 வரை கோடைப் பண்பலையில் அறிவிப் பாளர், தூர்தர்ஷன் பொதிகைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் எனப் பணியாற்றி னேன். அந்த அனுபவம் இந்த ஆன்லைன் ரேடியோ முயற்சிக்குக் கைகொடுத்தது.

‘பாட்காஸ்டிங்’ முறையில் இந்த வானொலி இயங்குகிறது. இதற்காக, பிரத்யேகமாக ஓர் இணையதள பக்கத்தை உருவாக்கினோம். அனைத்து ஆசிரியர்களும் அவரவர் பாடங்களை ஆடியோ கன்டென் டாக மாற்றித் தருவதை, ஆங்கர் எஃப்.எம் என்கிற இலவச வெப்சைட்டில் அப்லோடு பண்ணி, அதை லிங்காக எடுத்துக் கொள்கிறோம். அதை, ‘www.vanalaikalviradio.in’ என்ற இணையதளப் பக்கத்தில் பதிந்து, அதில் இருந்து லிங்க் எடுத்து, எங்க பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ் என்று அனுப்புகிறோம்” என்கிறார்.

இந்த முயற்சியை அறிந்த பிற பகுதிகளைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் மாணவர் களிடமும் கொண்டு சேர்த்திருக் கிறார்கள்.

சூழலின் நெருக்கடியை உணர்ந்து மாற்றத்தை உருவாக்கிக்கொள்வதே கல்வியின் பயன். அதை உணர்ந்த இந்த நல்லாசிரியர்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக் கிறார்கள்.