Published:Updated:

ஆன்லைனில் படிப்பது எல்லோருக்கும் சாத்தியமா? உயர்கல்வி தேர்வு குறித்து ஓர் அலசல்! #VikatanAnalysis

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள் ( ஆர்.எம்.முத்துராஜ் )

ஆன்லைன் மூலம் படித்துவிட்டு எப்படி ஒரு கிராமப்புற மாணவனால் தயாராக முடியும்? மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்காதா?

கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட, உயர்கல்வி தேர்வுகளை ஊரடங்கு முடிந்ததும் நடத்த, மத்திய -மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அரசாங்கத்தின் இந்த முடிவு மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியுள்ளன. இதில் நடைமுறை படுத்துவதில் பலவித குழப்பங்கள் உள்ளன. இதை அரசு எப்படிக் கையாளப்போகிறது... மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள்... உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை.

அண்மையில் 144 தடை உத்தரவு தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `ஆன்லைன் மூலம் பாடத்திட்டங்களைக் கையாளுங்கள்' என்று கூறியிருந்தது. அந்த விழிகாட்டல் அறிவிப்பைத் தொடர்ந்து, `மத்திய பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும்' என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

இந்தச் சூழலில், தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்திலேயே தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு முறையுமே மாணவர்களிடையே மன உளைச்சலையும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அடுத்த வருடத்துக்கு உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் மற்றும் புதிய வேலைக்குச் செல்லும் மாணவர்கள், பொருளாதார வசதியற்ற மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்குப் புதிய சவாலை உருவாகியுள்ளன.

இது தொடர்பாகக் கல்வியாளர்கள், மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்? அவற்றுக்குத் தமிழக அரசு என்ன கருத்து சொல்லவிருக்கிறது உள்ளிட்டவற்றை விரிவாகப் பார்ப்போம்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், "நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உயர்கல்வி தேர்வுகள், வரும் கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று' அத்துறையின் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இது மாணவர்களுக்குப் பலவித உளவியல் சிக்கலை உருவாக்கும். குறிப்பாக, இளங்கலை கல்வியையோ முதுகலைக் கல்வியைப் படிக்கின்ற எந்த மாணவர்களாக இருந்தாலும், ஆன்லைன் மூலம் படித்துவிட்டுத் தேர்வுக்குத் தயாராகுமாறு அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்
பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

இந்த முறை சமமான நிலையை உருவாக்காது. ஆன்லைன் மூலம் படித்துவிட்டு எப்படி ஒரு கிராமப்புற மாணவனால் தயாராக முடியும்? மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்காதா? எனவே, ஆன் லைன் கற்றல் முறையைத் தவிர்த்துவிட்டு, கல்லூரி திறந்தவுடன், முடிக்காத பாடப் பகுதிகளை முடித்துவிட்டு, தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். அப்படியே அனைத்துப் பாடப்பகுதிகளும் முடித்திருந்தால், ஒருமுறை அதை பிரஷர் கோர்ஸாவது (மறுவாசிப்பு முறை ) செய்துவிட்டு அதன் பின்னரே தேர்வுகளை நடத்த வேண்டும். இருப்பினும், எப்படி இருந்தாலும் இந்தப் பேரிடர் காலத்தில், மாணவர்களுக்குத் தேர்வு வைத்திருப்பது மிகப் பெரிய சிக்கலையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்” என்றார்.

உயர்கல்வி
உயர்கல்வி

மைசூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜவஹர் நேசன் பேசுகையில், "பேரிடர் காலத்தில் தற்போது தேர்வு தேவை இல்லை. ஒட்டு மொத்தமாக, மாணவர்கள் பழகிவந்துள்ள இயல்பான வாழ்க்கை முறையே, மாறி இருக்கும்போது 'இதை நீ செய்தே ஆக வேண்டும் என்று உத்தரவிடுவது கல்விக்கான நெறிமுறைகள் இல்லை.

 ஜவகர் நேசன்
ஜவகர் நேசன்

அதனால், அவர்களுக்குத் தற்போதைய சூழலை சமாளிப்பதற்கான வாழ்வியல் கல்வியும், அதற்கு உண்டான அறிவையும் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு அரசாங்கம் உத்தரவிட்டிருக்க வேண்டும். அதுதான் இந்தச் சமூகத்தின்மீது இந்த அரசாங்கம் வைத்துள்ள உண்மையான அக்கறையாகும்.

உயர்கல்வி
உயர்கல்வி

அமெரிக்காவில், நான் பேராசிரியராகப் பணியாற்றியபோது, ஒருமுறை அவசர காலத்தை அந்நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. அப்போது, அரசு சார்பில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன தெரியுமா? 'மாணவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பாடங்கள் நடத்துவதை நிறுத்திவிட்டு, உளவியல் ரீதியாக மாணவர்களை திடப்படுத்தவும், வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ளும் திறமைகளை வளர்க்குமாறும் அறிவுறுத்தியது. அமெரிக்க அரசின் அந்த உத்தரவை ஏற்று, நாங்கள் சமூக கல்வியையும், அந்தச் சூழலையும் அவர்களுக்கு உணர வைத்தோம்.

உயர்கல்வி
உயர்கல்வி
தற்போதையச் சூழலை மாணவர்களை உணர்வதற்கு நாம் அவர்களுக்கு போதிய அவகாசத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களாகவே இந்தச் சூழலை உணர்ந்து, இந்தச் சமூகத்துக்கு எது முதலில் தேவை என்று உணர்ந்து செயல்படுவார்கள். இதைவிட முக்கியமான ஒரு படிப்பினை வேறு என்ன இருக்கப்போகிறது? இப்படியான நிலையில் ஆன்லைனில் படித்துவிட்டு தேர்வுக்குத் தயாராகுங்கள் என்கிறது மத்திய அரசு. இதைவிட இந்த வேடிக்கையான ஒரு விஷயம் இருக்க முடியாது.
ஜவகர் நேசன். துணைவேந்தர்

எத்தனை மாணவர்களால் ஆன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்க முடியும்? அதற்கான வசதிகள் எல்லா மாணவர்களுக்கும் இருக்கிறதா? 'ஆன்லைனில் வருபவர்களுக்கு மட்டும் பாடத்தை நடத்துங்கள்' என்று கூறுவது சமத்துவத்தை உடைக்கிற விஷயம் அல்லவா? அப்படியென்றால், ஆன்லைனில் படிக்க முடியாத மாணவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களுடைய எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? இப்படி மாணவர்களின் பொருளாதார மற்றும் சூழல் சார்ந்த பிரச்னைகள் இருக்கின்ற சூழலில் பாடத்திட்டத்தை முழுமை அடையச் செய்ய முடியுமா... என்ற கேள்வி எழுகிறது?

உயர்கல்வி
உயர்கல்வி

கற்பித்தல் கலையை (pedagogy ) முறையாகக் கையாள்கிறோமோ அதைப்பொறுத்தே கற்றலின் ஆற்றல் அதிகரிக்கும். அப்படி என்றால் ஆன்லைனில் என்ன மாதிரியான கற்றல் கலையை அரசு கையாளப்போகிறது?

'ஆன்லைன் கற்றல்' என்பது சப்போர்ட்டிங் டாக்குமென்ட்தானே தவிர, அது வகுப்பறையைப் முழுமைப்படுத்திவிடாது. பெரும்பாலான நாடுகள் மாணவர்கள் அறிவை மேம்படுத்துவதற்காக, ஆன்லைன் கற்றலை ஒரு சப்போர்ட்டிங் டாக்குமெண்டாக வைத்துள்ளன. அதை எப்படி முழுநேர ஆன்லைன் வகுப்பறையாக உருவாக்க முடியும்?

திருவள்ளூர் பல்கலைகழகம்
திருவள்ளூர் பல்கலைகழகம்

இவையெல்லாம் தெரிந்தே மத்திய அரசு ஆன்லைனில் படியுங்கள் என்று கூறுவதுதான் வேடிக்கையானது. அதுவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே சொல்வது மிகப் பெரிய அவலம். எனவே, ஆன்லைன் வகுப்பறை என்பது கல்வித்துறையில் ஒரு உள்நோக்க அரசியலாகத்தான் பார்க்க முடிகிறது .'காட் 'ஒப்பந்தத்தில் கல்வியை வர்த்தகமாக முன்மொழிந்ததை, தற்போது அதற்கான வாசலைத் திறந்துவிட்டுள்ளார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, இந்தத் தேர்வு முறையில் உள்ள சிக்கல்களையும் மாணவர்களுக்கு உள்ள அழுத்தங்களையும் கர்நாடகா முதலமைச்சர், துணைவேந்தர்களுடன் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் எடுத்துரைத்தேன். அதில் `இந்தத் தேர்வு வேண்டாம்' என்று குறிப்பிட்டேன்.

மத்திய அரசு
மத்திய அரசு

'தற்போது தடைப்பட்ட தேர்வை அப்படியேவிட்டு விடுவோம். அதற்குள் இந்தச் சூழ்நிலையும் முடிவுக்கு வந்துவிடும். மாணவர்களின் விடுமுறையும் முடிந்து, கல்லூரி வரும்போது அவர்களுக்குப் புதிய கல்வியாண்டை உற்சாகமாகத் தொடங்குவோம்' என்றும் கூறினேன். தலைமைச் செயலாளரும், முதலமைச்சரும் கேட்டுக்கொண்டனர். "நல்ல யோசனைதான் என்று தெரிவித்துவிட்டு, மத்திய அரசுக்கு என்ன பதில்சொல்வது? அதனால், தேர்வை நடத்திவிடுவோம்" என்றார்கள். என்ன செய்வது?" என்றார் வருத்தமாக.

இதுகுறித்து, புதுச்சேரி மாணவர் பேரவையைச் சேர்ந்த குமார் பேசுகையில், "தேர்வு விஷயத்தில் குழப்பமான நிலை நீடிக்கிறது. ஆரம்பத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு என்று பல்கலைக்கழகம் கூறியிருந்தது. அதன் பிறகு, அந்தத் துறைகள் தங்களுடைய செளகரியத்துக்கு ஏற்றவாறு வைக்கலாம் என்றும் கூறியிருந்தது. ஆனால், எப்படித் தேர்வை வைக்கப்போகிறார்கள் என்று தற்போது வரை தெரியவில்லை.

குமார் மாணவர்பேரவை புதுச்சேரி
குமார் மாணவர்பேரவை புதுச்சேரி

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தேர்வு என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், மத்திய பல்கலைக்கழகங்களில் என்ன நிலைமை என்று இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை. ஆன்லைன் வகுப்பறையைப் பின்பற்றுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுரை வழங்குகிறது. அப்படி என்றால் எல்லோருமா ஆன்லைனுக்குத் தயாராகக்கூடிய மாணவர்களாக இருக்கிறார்கள்? பெரும்பாலான மாணவர்கள் கிராமங்களிலிருந்து வரக்கூடியவர்கள். இதற்கு அவர்களால் எவ்வாறு செலவு செய்ய முடியும்?

பார்வையற்ற மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு நேரத்தில் மற்றவர்களின் உதவியோடுதான் தேர்வு எழுதுவார்கள். அந்த மாணவர்களால் எவ்வாறு ஆன்லைன் தேர்வை எப்படி எழுத முடியும்? இந்த முறை சமத்துவமின்மையும் புறக்கணிப்பையும் ஏற்படுத்தும்.
குமார், மாணவர்பேரவை புதுச்சேரி

இந்தத் தேர்வு எதற்கு? இது ஒரு பேரிடர் காலம். இதில் மக்களைப் பாதுகாக்க மாணவர்களுக்கு களப்பணி குறித்த பயிற்சிதான் அவசியமே தவிர, தேர்வு அல்ல. கொரோனா பாதித்த பல நாடுகளிலும் தேர்வை ரத்து செய்துள்ளன. இந்தத் தேர்வை ரத்து செய்வதால் எந்த வகையிலும் மாணவர்கள் குறைந்தவர்களாகி விட மாட்டார்கள்" என்றார்.

முனிராஜ் ,சென்னை பல்கலைக்கழகம்
முனிராஜ் ,சென்னை பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழக மாணவர் முனிராஜ் பேசுகையில், "வரும் கல்வியாண்டில் தேர்வு நடைபெறும் என்ற செய்திகூட பல மாணவர்களுக்குப் போய் சேரவில்லை. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு இதில் பல சிக்கல்கள் உள்ளன. தமிழக அரசைப் பொறுத்தவரை கொரோனா பணியை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் செய்யுங்கள் நாங்கள் அதைத் தடுக்கவில்லை. ஆனால், மாணவர்களின் பிரச்னைகளைப் பார்க்க வேண்டுமல்லவா?" என்றார்.

புதுச்சேரி பல்கலைக்கழக ஆய்வியல் மாணவர் சண்முகம் பேசுகையில், 144 தடை உத்தரவு அமல்படுத்தியவுடன் வெளியூர் மாணவர்கள் அனைவரையும் அவசரமாக விடுதியிலிருந்து கிளம்புமாறு அழுத்தம் கொடுத்தது பல்கலைக்கழக நிர்வாகம். அதனால் மாணவர்கள் தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துச் செல்லவில்லை.

சண்முகம் ஆய்வியல் மாணவர்
சண்முகம் ஆய்வியல் மாணவர்

ஆன் லைன் தேர்வு அடுத்த கல்வியாண்டில் தேர்வு எனில் நிச்சயமாக அவர்களால் தயாராக முடியாது. இது வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுகிற விஷயம் அல்ல. தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை அறிந்த பின்னரே, தேர்வு பற்றி அரசு தனது செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.

பொறியியல் மாணவர் ஒருவர் பேசுகையில், "வரும் கல்வியாண்டின் தொடக்கத்தில் தேர்வு எழுதலாம் என்ற தமிழக அரசின் இந்த நடைமுறை மாணவர்களுக்கு மிகவும் சிரமமானது. குறிப்பாக 2017 ரெகுலேஷன் முறையை, இந்த நெருக்கடியான காலத்திலாவது கைவிட வேண்டும்.

பொறியியல் மாணவர்கள்
பொறியியல் மாணவர்கள்

இந்த முறையின் நடைமுறை என்பது, முதலாம் ஆண்டில் தோல்வி அடைந்திருந்தால் இறுதியாண்டு போக முடியாது என்பதுதான். இந்த 2017-ம் ஆண்டு ரெகுலேஷன் முறையில் வரும் கல்வியாண்டில் தேர்வு எழுதும் மாணவர்கள், மீண்டும் தோல்வி அடைந்தால், இறுதியாண்டு போக முடியாத நிலை உருவாகும். மீண்டும், முதலாம் ஆண்டிலேயே படிக்க வேண்டும். இப்படியான பிரச்னைகளால் அடுத்த கல்வியாண்டில் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். குறிப்பாக, பெண்கள் அதிகமாக டிராப்அவுட் ஆவார்கள் என்பதே உண்மை" என்றார்.

மாணவர்களின் இந்தப் பிரச்னை உளவியல் சிக்கலை ஏற்படுத்துமா என்று, உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்திடம் கேட்டோம். "மாணவர்களுக்கு இது சிக்கலான காலம்தான். குறிப்பாக, புது மாற்றம் என்பது அனைவருக்குமே ஒருவித அழுத்தத்தைத் தரும். இதன் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அந்தந்த மாணவர்களின் ஆற்றலைப் பொறுத்தே அமையும். வேலைப்பளு என்பது அதிக பதற்றத்தையும் பயத்தையும் தரும்.

உளவியல் நிபுணர். சித்ரா அர்விந்த்.
உளவியல் நிபுணர். சித்ரா அர்விந்த்.

வழக்கமான நிலையில் இருக்கும் மாணவர்களால் தேர்வுக்கு முழுமையாகத் தயாராக முடியாது என்பது உண்மை. அதேநேரத்தில் இந்த முறையை மாணவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதையே கல்வி நடைமுறை வலியுறுத்துகிறது. இதை ஸ்கிப் செய்வதால் அவர்களுக்குக் கல்வி முறையில் சிக்கல்கள் ஏற்படும். இது ஒரு சவாலானது. இதைக் கடந்தாக வேண்டும் என்று மாணவர்களே முழுமனதோடு ஏற்றுக்கொண்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும். எதையும் வலிமையோடு ஏற்றுக்கொள்வதில்தான் அதன் வெற்றியே உள்ளது என்று பாசிட்டிவான மனநிலையோடு தேர்வுக்குத் தயாராக வேண்டும்" என்றார்.

இந்தப் பிரச்னைகளைக் குறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனைத் தொடர்புகொண்டு பேசியபோது, "வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே நடத்துவதால் எந்தச் சிக்கலும் மாணவர்களுக்கு ஏற்படாது. இதில் எந்தக் குழப்பங்களும் இல்லை. வேண்டுமென்றே அரசுமீது குறை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறவர்கள் எதையாவது கூறிக் கொண்டிருப்பார்கள்.

கே.பி.அன்பழகன்  உயர்கல்வித்துறை அமைச்சர்
கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சர்

மாணவர்களுக்கு நடத்த வேண்டிய அனைத்துப் பாடங்களையும் முடித்துவிட்டோம். பாடப் பகுதிகள் எதுவரை நடத்திமுடிக்கப்பட்டிருக்கிறதோ, அதுவரை மட்டுமே தேர்வுகள் நடைபெறும். அதேபோன்று கேம்பஸ் தேர்வில், ஏழு செமஸ்டரைக் கணக்கில் வைத்துத் தேர்வு செய்யப்படுவார்கள். முதுகலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களும் ஐந்து செமஸ்டரை வைத்து சேர்வார்கள். ஒருவேளை அவர்களால் தேர்ச்சிபெற முடியவில்லை என்றால், அவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு வந்துவிடுவார்கள்'' என்றவரிடம் ''இது மாணவர்களுக்கு சிக்கலான சூழலைத் தரும் இல்லையா?" என்று கேட்டதும், 'இதில் எந்தச் சிக்கலும் இல்லை " என்றார். அடுத்தடுத்த கேள்விகளை முன் வைத்தபோது, முழுமையான பதில் அளிக்காது இணைப்பைத் துண்டித்தார்.

அடுத்த கட்டுரைக்கு