Published:Updated:

Fact Check: மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்ற TC தேவையில்லையா?

School Students
School Students ( Photo: Vikatan / Balasubramanian.C )

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில், `மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லாமலே சேர்க்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு' என்ற தகவல் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமே ஆரம்பத்தில் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூட ஆன்லைன் வழியாகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரையும் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி செய்வதாக அறிவித்திருந்தது. அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் தமிழகம் முழுவதிலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக, தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் (TC - Transfer Certificate) இல்லாமலே பள்ளியில் சேர்க்கலாம் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகத் தகவல் ஒன்று மீம் வாயிலாக வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. சில செய்தி நிறுவனங்களும் இது தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத செய்தியினை வெளியிட்டிருந்தன.

வைரல் மீம்
வைரல் மீம்

அந்த மீமில், ``தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளியில் சேர்க்கும் பொழுது, எந்த ஒரு குழந்தைக்கும் மாற்றுச் சான்றிதழ் (TC) தேவையில்லை. குழந்தையின் ஆதார் எண்ணை நீங்கள் சேர்க்கும் பள்ளியில் கொடுத்தால் போதுமானது. அவர்களாகவே உங்களுடைய EMIS நம்பரை எடுத்துக் கொள்வார்கள். தனியார் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டோ அல்லது EMIS நம்பரைக் கேட்டோ பணம் கட்டி ஏமாற வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா ஊரடங்கின் காரணமாகத் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பெற்றோர் பலரும், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க சமீபமாக முனைப்புக் காட்டி வருகின்றனர். இந்நிலையில்தான், கட்டணம் செலுத்தாத காரணத்தினால் தனியார் பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழ் அளிக்க மறுத்தால் EMIS எண் மூலம் அரசுப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இணையத்தில் கடந்த சில தினங்களாகச் சுற்றலில் இருக்கும் இந்த தகவலை மக்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ஷேர் சாட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தற்போது வரையிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஆனால், தமிழக அரசின் சார்பில் இப்படியானதோர் அறிவிப்பு வெளியானதாகத் தெரியவில்லை. அதனால், இந்த வைரல் மீமை நம்முடைய Fact Check-ற்கு உட்படுத்தினோம்.

முதற்கட்டமாக விசாரித்ததில், அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை தொடர்பாகத் தமிழக அரசு எந்த திடீர் அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது உறுதியானது.

Vikatan Fact Check
Vikatan Fact Check

அதைத் தொடர்ந்து, EMIS நம்பர் என்றால் என்ன, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு எதனடிப்படையில் மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கப்பட்டு வருகிறது, தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறுவதற்கு நடைமுறை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கான விவரங்களைத் தெரிந்து கொண்டு வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

``தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் சேர மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை. 1-8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தாலும், விரும்பினால் அவர்கள் அரசுப் பள்ளியில் அட்மிஷன் பெற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவைப்படாது. மாணவர்களின் நடுநிலைக் கல்வி தடைபடக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு அரசு பின்பற்றும் நடைமுறை இது. தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாறும் மாணவர்கள், சேர்க்கை முடிந்த பிறகு கூட பொறுமையாக மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம். வாங்கவில்லை என்றாலும் வில்லங்கம் இல்லை. அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு முடித்த பிறகு அங்கு அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆனால், இது 1-8-ம் வகுப்புக்கு மட்டும்தான் பொருந்தும். 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதற்கு மாற்றுச் சான்றிதழ் கட்டாயம். EMIS நம்பரை வைத்து எல்லாம் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற முடியாது. EMIS (Education Management Information System) என்பது மாணவர்களின் அடையாள எண். அதைப் பயன்படுத்தி இணையத்தில் தேடும் போது ஒரு மாணவர் எந்த பள்ளியில் படிக்கிறார், என்ன வகுப்புப் படிக்கிறார், தனியார் பள்ளியில் படிக்கும் பட்சத்தில் கட்டண விவரம் உள்ளிட்டவற்றை நாம் அறிந்துகொள்ளலாம்.

ஒரு மாணவர் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறுகிறார் என்றால், அவர் அங்கு கல்விக் கட்டண தொகையை முழுமையாகச் செலுத்திய பிறகுதான் இந்த இணையதளத்தில் அவரைப் பற்றிய விவரங்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. ஒரு மாணவரை தற்போது படித்துக் கொண்டிருக்கும் பள்ளியின் நிர்வாகம், அவரது EMIS விவரங்களை அப்டேட் செய்யாமல் அவரை அங்கிருந்து அரசுப் பள்ளிக்கோ, அல்லது தனியார் பள்ளிக்கோ அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

9-12 வகுப்பு சேரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கட்டாயம் வேண்டும். கல்விக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தாத பட்சத்தில் தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழை அவ்வளவு எளிதில் வழங்கிடாது. முன்பெல்லாம் வகுப்பு படிப்பை முழுமையாக முடித்த பின்புதான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது எப்போது வேண்டுமானாலும் இணையத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆனால், அதில் பள்ளி நிர்வாகம் சீல் போட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது செல்லுபடியாகும்.

ஆனால், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர் தங்களின் ஏழ்மை நிலையைப் பள்ளி நிர்வாகத்துக்கு விளக்கிக் கூறி கடிதம் எழுதி அரசுப் பள்ளியில் சேர்க்க மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கோரிக்கை வைக்கலாம். கல்வி உரிமைச் சட்டத்தின் படியும், நீதிமன்ற உத்தரவின் படியும் தனியார் பள்ளிகளால் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் இருக்க முடியாது. ஒன்று, மாணவர்களின் பெற்றோருக்குக் கால அவகாசம் அளித்து எழுதி வாங்கிக் கொண்டு மாற்றுச் சான்றிதழ் அளித்து கல்விப்படிப்பு தொடர உதவ வேண்டும். இல்லையென்றால், பெற்றோரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு கல்விக் கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்களித்து மாற்றுச் சான்றிதழ் அளிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும், மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியாது என்று அவர்களால் மறுக்க முடியாது. சமீபத்தில், இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Fake Information
Fake Information
மாணவர் இறப்பு முதல் பாலியல் புகார் வரை - பத்ம சேஷாத்திரி பள்ளி மீதான தொடர் சர்ச்சைகள்!

எனவே, தனியார்ப் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கூறுபவர்கள் முறையாகப் பள்ளி நிர்வாகத்தை அணுகி கோரிக்கை வைக்கலாம். எந்த ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தாலும் கல்விக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறவோ, பெற்றோர் மற்றும் மாணவர்களைக் கட்டணம் செலுத்தக் கூறி நிர்பந்திக்கவோ முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. பெற்றோரின் ஏழ்மை நிலை மாணவர்களின் படிப்பை எந்த நிலையிலும் பாதித்து விடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்து வருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு