Published:Updated:

லாக் டௌன் நேரத்தில் கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனவா தனியார் பள்ளிகள்? - என்ன நடக்கிறது?

பள்ளிக் கல்வி இயக்கம்
பள்ளிக் கல்வி இயக்கம்

தமிழக அரசின் இந்த எச்சரிக்கை ஒருவகையில் அச்சத்தைக் கொடுத்தாலும், தனியார் பள்ளிகள் கட்டணத்தை வசூல் செய்வதை நிறுத்தாது என்கிறார்கள் பெற்றோர்களும் கல்வியாளர்களும்.

கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக, நாடு முழுவதும்144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் தவிர, பிற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் அலுவலகங்களில் பணியாற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, பணிப் பாதுகாப்பின்மை, சம்பளக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, பொதுமக்களின் பொருளாதார இயல்பு வாழ்க்கையே தலைகீழாக மாறியுள்ளது.

இந்த நிலையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அழுத்தம் தருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தனியார் வசமுள்ள 11,000 பள்ளிகளில், சுமார் 52,00,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களின் கல்விக் கட்டண நிலுவைத் தொகை மற்றும் அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று சில பள்ளிகள் நிர்பந்திப்பதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதன் எதிரொலியாகக் கடந்த 21- ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும், தமிழக அரசு எச்சரிக்கை தரும் விதமாக அரசாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

144 தடை உத்தரவு
144 தடை உத்தரவு
விகடன்

அதில் 'கொரோனாவால் 144 தடை உத்தரவு இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் 2020 - 21 ஆம் கல்வியாண்டிற்கான கட்டணத்தையோ அல்லது 2019 -20 ஆம் ஆண்டின் நிலுவைத் தொகையையோ செலுத்துமாறு பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது" என்று கூறியுள்ளது.

அதேபோன்று காலதாமதமாகக் கட்டணம் கட்டுகிறவர்களிடம் அபராதமும் விதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு செய்வது பேரிடர் மேலாண்மைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசின் இந்த எச்சரிக்கை ஒருவகையில் அச்சத்தைக் கொடுத்தாலும், தனியார் பள்ளிகள் கட்டணத்தை வசூல் செய்வதை நிறுத்தாது என்கிறார்கள் பெற்றோர்களும் கல்வியாளர்களும்.

தனியார் பள்ளிகள்
தனியார் பள்ளிகள்
விகடன்

கட்டண விவகாரம் தொடர்பாக, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவர் பதற்றத்துடன் நம்மைத் தொடர்புகொண்டார். " ஒரு பள்ளியில் பெற்றோர்களிடம் கட்டாயமாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அழுத்தம் தரப்படுகிறது. அது தொடர்பாக அந்தப் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா ?" என்று கேட்டிருந்தார். அதற்கு 'பள்ளியின் பெயர் மற்றும் உங்களுடைய பெயரையும் கூறுங்கள்' என்று கூறியதும். அந்தப் பெற்றோர் பயந்து, பொதுவாக இதை எழுதினாலோ அல்லது புகார் தெரிவித்தாலோ நன்றாக இருக்கும் என்று கூறிவிட்டு போனைத் துண்டித்தார்.

இது குறித்து கள நிலவரம் அறிய, மற்றொரு தனியார் பள்ளி மாணவரின் தந்தை ஹரிகிருஷ்ணனிடம் பேசினோம். "என் மகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள இடஒதுக்கீட்டில் ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறாள். அவளுக்குக் கட்டணம் இல்லை. ஆனால், என் மகனும் அதே பள்ளியில்தான் படிக்கிறான். அவனுக்கு நான் கட்டணத்தைக் கட்டியே படிக்க வைக்கிறேன். இந்த லாக் டௌன் அறிவிப்பதற்கு முன்பாகத்தான் கட்டணத்தைக் கட்டினேன்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
எம். விஜயகுமார்

அந்தப் பள்ளியில் தவணை, தவணையாகத்தான் வசூல் செய்வார்கள். நடப்பு கல்வியாண்டிற்கு, இந்தப் பிரச்னை தொடங்குவதற்கு முன்பாகவே கட்டணத்தை வாங்கிவிட்டனர். அடுத்த கல்வியாண்டிற்குதான் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய சூழலால் கடுமையான வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எப்படிச் சமாளிக்கப்போகிறேன் என்று தெரியவில்லை. அவ்வாறு கட்டணத்தைக் கட்ட முடியவில்லை என்றால், மகனை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்" என்றார்.

பெற்றோர்கள் சங்கத்தைச் சேர்ந்த வீர பெருமாள் பேசுகையில், "சில பெற்றோர்கள் தொலைப்பேசி வாயிலாக அழைத்து, தனியார் பள்ளிகள் கட்டணத்தைக் கட்டவேண்டும் என்று வற்புறுத்துவதாகப் புகார் தெரிவித்தனர். அதற்கு, எந்தப் பள்ளி என்று கூறினால்தான் அந்தப் பள்ளிகள்மீது எடுக்க முடியும் என்று கூறியதும், அவர்கள் பயந்து பின்வாங்கினர். பெரும்பாலான பெற்றோர்கள் மாணவர்களின் கல்வியைப் பாதித்துவிடுமோ என்று பிரச்னையைச் சொல்லத் தயங்குகிறார்கள். அந்த அடிப்படையில்தான் புகார் தெரிவித்த பெற்றோர்களும் பள்ளி தொடர்பான விவரங்களைச் சொல்ல மறுத்துவிட்டனர்.

வீர பெருமாள் .பெற்றோர் நலச் சங்கம்
வீர பெருமாள் .பெற்றோர் நலச் சங்கம்

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசுக்குப் பொதுவான ஒரு கோரிக்கையாக எங்களுடைய அமைப்பு சார்பாக வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது எச்சரிக்கை கொடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த எச்சரிக்கைகளுக்குப் பயந்து வசூல் செய்வதை தனியார் பள்ளிகள் நிறுத்தாது. அரசு கொடுத்துள்ள எந்த விதியையும் பள்ளி நிர்வாகம் பின்பற்றாது என்பதே உண்மை.

இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால், கல்வி அளிப்பதை தனியாரிடமிருந்து மீட்க வேண்டும் அல்லது கட்டணத்தைக் கேட்கும், தனியார் பள்ளிகளை எதிர்த்துப் பெற்றோர்களாவது தைரியமாக முன்வந்து , போராட வேண்டும். ஆனால் பெற்றோர்கள் அப்படியான போராட்டத்தை முன்னெடுக்க மாட்டார்கள். அதற்குக் காரணம், அவர்களுடைய குழந்தையின் கல்வி பாதிக்கப்படும் என்ற கவலை அவர்களுக்கு உள்ளது.
வீர பெருமாள் .பெற்றோர் நலச் சங்கம்

அதனால், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை சார்பில் கண்காணிப்பாளர்களை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அதற்கான பணியாளர்கள் பள்ளிக் கல்வித்துறையில் இல்லை.

குறிப்பிட்ட பள்ளிகள் குறித்து புகார் அளித்தால், அங்கு சென்று ஆய்வுசெய்யக்கூடிய அளவில்தான் நமது பள்ளிக் கல்வித்துறை உள்ளது. அதனால்தான், எந்த வித அறமும் இல்லாமல், இந்தச் சூழலில்கூட கல்விக் கட்டணத்தைக் கட்டுமாறு தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருமை நாதன் பேசுகையில், "சி.பி.எஸ்.சி பள்ளிகள், ஆன்லைனில் பாடத்தை நடத்தி வருவதால், அந்த மாணவர்களிடம் எந்தத் தடையும் இல்லாமல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் வசூல் செய்வதுதான் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் கட்டணம் வசூல் செய்வதாகத் தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.

அருமை நாதன் .தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம்
அருமை நாதன் .தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம்
விகடன்

ஆனால் ,பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் கல்வி பாதித்துவிடுமோ என்று பயந்து புகார் கொடுக்க மறுக்கிறார்கள். சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்துமாறு அழுத்தம் தருவதாகப் புகார் வந்ததது. அது தொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்குநரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில், "பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வெளிப்படையாக இந்த விவகாரம் தெரியவராது. ஆனால், ஆன்லைன் மூலமாகப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியான முறையைத் தனியார் பள்ளிகள் கையாண்டு இருக்கலாம். அதனால் இந்த விவகாரம் வெளிப்படையாக தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு. கல்வியாளர்
பிரின்ஸ் கஜேந்திரபாபு. கல்வியாளர்
விகடன்

இந்தச் சூழலில் தற்போது பெற்றோர்களிடம் கட்டணம் வசூலிப்பதைத் தனியார் பள்ளிகள் கைவிட வேண்டும். குறிப்பாக மாணவர்களும் பெற்றோர்களும் உளவியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, பெரும்பாலான நேரங்களை படிப்பு, விளையாட்டு எனக் கழித்த மாணவர்கள், தற்போது இந்தத் தடை உத்தரவு அவர்களை வீட்டிலேயே முடங்கச் செய்துள்ளது. அதேபோன்று கணக்குப் போட்டு குடும்பத்தை நடத்தி வந்த பெற்றோர்களுக்கும் வேலையின்மை, வருமானம் இழப்பு போன்றவை பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளன.

இப்போதைய சூழல், குடும்ப அமைப்பையே ஆட்டம்காண செய்துள்ள நிலையில், இதற்கிடையில் சில பள்ளிகள் குறுஞ்செய்தி மூலமாக கட்டணத்தைக் கட்டுமாறு வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தனியார் பள்ளிகள் கைவிட வேண்டுமென்றால், தமிழக அரசு கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்" என்றார்.

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் மார்ட்டின்  கென்னடியிடம் கேட்டபோது "எங்களுடைய அமைப்பில் உள்ள தனியார் பள்ளிகள் எதுவும் தற்போது  கட்டணம் வசூலிக்கவில்லை. குறிப்பாக, எங்களுடைய பள்ளிகளின் அலுவலகங்கள்கூட திறந்து வைக்கவில்லை. ஆசிரியர்களுக்குச் சம்பளம் போட முடியாத நிலை இருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக கட்டணம் எதுவும் பெற்றோர்களிடம் கேட்கவில்லை. தனியார் பள்ளிகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கேட்டுள்ளோம். அந்தத் தொகை தனியார் பள்ளிகளுக்குக் கிடைத்தாலே போதுமானது. அதனால், இந்தச் சூழலில் எந்தத் தனியார் பள்ளிகளும் கட்டணம் வசூல் செய்யாது. இதில் சில அமைப்பில்  இல்லாத  தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்ததா என்று தெரியவில்லை" என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்புகொண்டு பேச முயன்றபோது ,அவர் தனது சொந்தத் தொகுதியில் இருப்பதாக அவருடைய உதவியாளர் கூறினார். அதனைத் தொடர்ந்து அவரைக் கடந்த நான்கு நாள்களாக தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். ஆனால், பேசுவதற்கு அவர் தரப்பில் ஆர்வம் காட்ட வில்லை.

அடுத்த கட்டுரைக்கு