Published:Updated:

`நிச்சயம் ஒருநாள் ரஷ்யா செல்வேன்!' -ஜே.என்.யூ நுழைவுத் தேர்வில் சாதித்த பல்கலைக்கழகப் பாதுகாவலர்

தினேஷ் ராமையா

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் காவலராகப் பணியாற்றிவரும் ராஜஸ்தான் இளைஞர், பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் வென்று சாதித்திருக்கிறார்.

ராம்ஜால் மீனா
ராம்ஜால் மீனா ( ANI )

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்ஜால் மீனா. பள்ளிப்பருவத்தில் படிப்பில் சுட்டியாக விளங்கிய மீனா குடும்பத்தின் பொருளாதார சூழலால் தனது படிப்பைக் கைவிட நேர்ந்தது. கல்லூரிப் படிப்பை முதலாமாண்டோடு நிறுத்திய அவர், தன் தந்தைக்கு உதவியாக தினக்கூலியாக வேலைபார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கவே, டெல்லி வந்திருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

படிப்பில் ஈடுபாடு இருந்தாலும் குடும்ப பொருளாதாரம் ஒத்துழைக்காததால், தொலைதூரக் கல்வி மூலம் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை முடித்திருக்கிறார் ராம்ஜால் மீனா. இதற்கிடையில் அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் பிறந்திருக்கின்றனர். ரஷ்யா மீதும் அதன் கலாசாரம் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட மீனா, ஒருநாளாவது அந்நாட்டில் கால்பதித்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், ஜே.என்.யூ பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறார் மீனா. இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் வென்ற அவர், ஜே.என்.யூ அளிக்கும் பி.ஏ (ரஷ்ய மொழி) பாடப்பிரிவில் சேர இருக்கிறார். அவருக்கு பல்கலைக்கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து பேசிய ராம்ஜால் மீனா, ``கடந்த 2000-ம் ஆண்டில் ப்ளஸ் டூ முடித்தேன். பின்னர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினேன். ஆனால், குடும்பச் சூழல் காரணமாக முதலாமாண்டுடன் எனது படிப்பை நிறுத்தி தந்தையுடன் வேலைபார்க்கத் தொடங்கினேன். தினசரி 50 முதல் 60 ரூபாய் வரை கூலி கிடைத்தது. பின்னர், டெல்லிக்கு வந்து இந்தப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகளாகப் பாதுகாவலராகப் பணிபுரிந்து வருகிறேன்.

ராம்ஜால் மீனா
ராம்ஜால் மீனா
ANI

ரஷ்யா சென்று அந்நாட்டு கலாசாரம் மற்றும் மக்கள் வாழ்வியல் குறித்து நேரில் பார்த்துவிட வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அதற்காக, ரஷ்ய மொழி பிரிவில் சேர இருக்கிறேன். நுழைவுத் தேர்வுக்காக வேலை ஓய்வு நேரங்களில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் படித்தேன்.

என் சகோதரிகள் திருமணத்துக்காக தந்தை வாங்கிய கடனை அடைக்க வேண்டிய நிலையிலும், எனது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையிலும் நான் இருக்கிறேன். இது ரெகுலர் கோர்ஸ் என்பதால், எனது வேலை நேரமும் பாதிக்கப்படும்'' என்றார்.

ரஷ்யா சென்று அந்நாட்டு கலாசாரம் மற்றும் மக்கள் வாழ்வியல் குறித்து நேரில் பார்த்துவிட வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு
ராம்ஜால் மீனா

மீனாவுக்கு தங்கள் தரப்பிலிருந்து நிச்சயம் உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார், அந்தப் பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர் பிரிவு தலைவரான ராஜேஸ்வர் பவார். தங்களுள் ஒருவர் மதிப்புமிக்க இந்தப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் வென்றிருப்பதைப் பெருமையாகக் கருதுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.