சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கடன்பழி சுமக்கவா கல்விச்சான்றிதழ்?

மாணவர்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர்

8-ம் வகுப்பு படித்த ஒரு குழந்தை அந்த மாற்றுச்சான்றிதழைக் கொண்டு வீட்டிலிருந்தே பிளஸ் டூ வரை படிக்கலாம்.

பேரிடரால் பலர் வேலையிழந்திருக்கிறார்கள். கல்விச்சூழல் முழுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறது. கட்டணம் செலுத்தமுடியாததால் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தச்சூழலில், ‘மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கி குறித்துக் குறிப்பிடலாம்’ என்று நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா உச்சம் பெற்றிருந்த நேரத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கின. சில பள்ளிகள் கல்விக்கட்டணம் கட்டவும் பெற்றோரை வலியுறுத்தின. அப்போதைய அரசு மௌனம் சாதித்தது. பெற்றோர்களும் கல்வி அமைப்புகளும் நீதிமன்றத்தை நாட, 2019-20-ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 85% கட்டவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது. அதேநேரம், பள்ளியிலிருந்து விலக விரும்பும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழை மறுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

இதற்கிடையே, அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தனியார் பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழை வாங்காமலே பெரும் பாலானோர் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தார்கள். இந்தச் சூழலில் தனியார் பள்ளிகளுக்கான சட்டப்பாதுகாப்பு அமைப்பு, ‘பள்ளி மாறும்போது மாற்றுச்சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்க உத்தரவிடக்கோரி’ உயர் நீதிமன்றத்தை அணுகியது. மேலும் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழில், கட்டணம் செலுத்திவிட்டார்களா, இல்லையா என்பதைக் குறிப்பிடவும் அனுமதிக்கவேண்டும் என்று கோரியது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடன்பழி சுமக்கவா கல்விச்சான்றிதழ்?

‘மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்ப்பதால் பலர் கல்விக்கட்டணம் செலுத்துவதில்லை. அதனால் பெரும் நிதிச்சுமையில் சிக்கி பள்ளியை நடத்தமுடியாத சூழல் உருவாகிறது. மாற்றுச்சான்றிதழைக் கட்டாயமாக்குவதோடு, கட்டணம் செலுத்தப்பட்டது குறித்த தகவலையும் அதில் இணைக்கவேண்டும்’ என்ற தனியார் பள்ளிகளின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதேநேரம் ‘கட்டணம் குறித்து முரண்பாடுகள் இருப்பின் கேள்வி எழுப்பப் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது’ என்றும் கூறியிருக்கிறது.

“மாற்றுச்சான்றிதழ் என்பது வாழ்நாள் முழுவதும் சேமித்துவைக்கவேண்டிய ஆவணம். 8-ம் வகுப்பு படித்த ஒரு குழந்தை அந்த மாற்றுச்சான்றிதழைக் கொண்டு வீட்டிலிருந்தே பிளஸ் டூ வரை படிக்கலாம். கல்வித்தகுதியைச் சுட்டிக்காட்டும் ஒரு ஆவணத்தில் ‘கட்டணம் கட்டவில்லை’ என்று குறிப்பிடுவது அந்தக் குழந்தைக்குச் செய்யும் அநீதி; பாரபட்சம். கட்டணம் கட்டவில்லை என்ற குறிப்போடு இன்னொரு தனியார் பள்ளியில் சேரச்சென்றால் அங்கு அந்தக் குழந்தைக்கு அட்மிஷன் கொடுப்பார்களா? மற்ற குழந்தைகள் இந்தக் குழந்தையை எப்படிப் பார்ப்பார்கள்? நாளை அந்தக் குழந்தையின் உயர்கல்விக்கு வங்கிக்கடன் கிடைக்குமா? பள்ளியிலேயே கடன் வைத்தவர் எப்படி வங்கிக்கடனைக் கட்டுவீர்கள் என்று கேட்கமாட்டார்களா? மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கி பற்றிக் குறிப்பிடுவது குழந்தைகளுக்குத் தரப்படும் கொடூரமான தண்டனை...” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளரைச் சந்தித்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது தமிழக மாணவர் பெற்றோர் நலச் சங்கம். அந்தச் சங்கத்தின் நிறுவனர் அருமைநாதனிடம் பேசினேன்.

“அரசின் EMIS தளத்தில் சான்றிதழ் எண்ணைக் குறிப்பிட்டால் எவரின் மாற்றுச்சான்றிதழையும் பார்க்கமுடியும். கட்டணம் கட்டாதவர் என்ற முத்திரை காலம் முழுவதும் குழந்தைகளைத் துரத்தும். இது யாரும் எதிர்பார்க்காத பேரிடர்க் காலம். மக்களின் பிரச்னைகளைத் தனியார் பள்ளிகள் புரிந்துகொள்ளவேண்டும். ‘கண்டிப்பாக மேல்முறையீடு செய்வோம்’ என்று பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் கூறியிருக்கிறார். நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்” என்கிறார் அருமைநாதன்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, அருமைநாதன், கே.ஆர்.நந்தகுமார்
பிரின்ஸ் கஜேந்திரபாபு, அருமைநாதன், கே.ஆர்.நந்தகுமார்

இந்த வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றவர்களில் ஒருவரும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் தலைவருமான கே.ஆர்.நந்தகுமாரிடம் பேசினேன்.

“பெற்றோரால் கட்டணம் கட்டமுடியவில்லை என்றால் அரசாங்கம் உதவவேண்டும். தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அரசுப் பணியில் இருப்பவர்கள்கூட இந்தச்சூழலைப் பயன்படுத்தி பீஸ்கட்ட மறுக்கிறார்கள். நாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவேண்டும். மின்சாரக் கட்டணம் கட்டவேண்டும். வாகனங்கள் ஓடுகிறதோ இல்லையோ, சாலை வரி கட்டவேண்டும். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச்சான்றிதழ் தேவையில்லை என்று அரசு கூறிவிட்டது. பெரும்பாலானோர் படித்த பள்ளியில் தகவலே சொல்லாமல் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து விட்டார்கள். 10,11,12 மாணவர்கள்தான் மாற்றுச்சான்றிதழ் கேட்டு வருகிறார்கள். அவர்களிடமும் பணம் கேட்கக்கூடாது என்று சொல்வது நியாயமில்லை” என்கிறார் நந்தகுமார்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்று அறிய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், ஆணையரைத் தொடர்புகொள்ள முயன்றோம். இருவருமே நம்மிடம் பேச விரும்பவில்லை.

கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதற்காகவே சமச்சீர் பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ‘பாடத்திட்டம் ஒன்று, தேர்வுகள் ஒன்று என்றானபின், மெட்ரிகுலேஷன் என்றொரு வாரியம் தனியாக இருப்பதும் அதன் விதிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதும் நியாயமல்ல’ என்பதே பெரும்பாலானோர் கருத்து. தமிழக அரசு இந்த விஷயத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பு!