Published:Updated:

`நீங்கள்தான் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்!’ - கனிமொழி, ஆய்ஷி கோஷ் சந்திப்பில் நடந்தது என்ன?

எந்த உதவிகள் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் தயங்காமல் கேளுங்கள் தி.மு.க எம்.பி கனிமொழி.

அய்ஷி கோஷ் -கனிமொழி சந்திப்பு
அய்ஷி கோஷ் -கனிமொழி சந்திப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் மாணவர்கள் பலரும் படுகாயமடைந்தனர். ஜே.என்.யூ மாணவ அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டார். ரத்தம் வழிந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்ஷி கோஷுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் போராட்டத்துக்கு வந்து சேர்ந்தார். தலையில் தையல் போடப்பட்ட நிலையிலும் அய்ஷி கோஷ் போராட்டத்தில் பங்கேற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதையடுத்து ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் சந்தித்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். நேற்று பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன் அய்ஷி கோஷை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஜே.என்.யூ மாணவ அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஜெ.என்.யூ பல்கலையைப் பார்வையிட்ட கனிமொழி
ஜெ.என்.யூ பல்கலையைப் பார்வையிட்ட கனிமொழி

இந்தச் சந்திப்பின்போது ஜே.என்.யூ மாணவர் அருண் மட்டும் உடனிருந்தார். இந்தச் சந்திப்பு குறித்து அருணிடம் பேசியபோது, "ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்ட இந்தச் சம்பவத்தில், `தான் எவ்வாறு குறிவைத்து தாக்கப்பட்டேன் என்பது குறித்து விரிவாக தி.மு.க எம்.பி கனிமொழியிடம் அய்ஷி கோஷ் எடுத்துரைத்தார். மேலும் 65 நாள்களாகப் போராட்டம் நடத்தியும், அதைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கண்டுகொள்ளவில்லை. நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்தும் எந்தக் கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை. படுகாயமடைந்துள்ள மாணவர்களின் நிலையைப் பற்றி அவர் எங்களிடம் இதுவரை கேட்கவில்லை. ஒரு சின்ன ஆறுதல்கூட அவர் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை' என்று கூறினார். இதைத் தொடர்ந்து தாக்கப்பட்ட எங்கள் மீதே வழக்குகளைப் பதிவு செய்யுமாறு ஆவண செய்துள்ளார். இப்படி தகுதி இல்லாத துணைவேந்தரை பதவியிலிருந்து உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து நீங்கள்தான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இவற்றையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட கனிமொழி 'எங்களுடைய கட்சியின் தலைவர் ஸ்டாலின் எப்போதும் மாணவர்கள் பக்கம் துணை நிற்பார். இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்' என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து ஜே.என்.யூ பல்கலைக்கழகம் வந்த கனிமொழி அங்குள்ள மாணவர்களைச் சந்தித்துப் பேசினார். தாக்குதல் நடந்த இடங்களுக்குச் சென்று பார்த்தார்.

ஜெ.என்.யூ பல்கலையை பார்வையிட்ட கனிமொழி
ஜெ.என்.யூ பல்கலையை பார்வையிட்ட கனிமொழி

அதில் ஏ.பி.வி.பி மாணவர்களின் அறைகள் எதுவும் உடைக்கப்படவில்லை. பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்கள் இருந்த அறைகள் மற்றும் காஷ்மீரி, முஸ்லிம் மாணவர்களின் அறைகள் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு மாணவர்களுக்கு ஆதரவளித்து பேசினார். அதன்பின்னர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசினார். எந்த உதவிகள் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் தயங்காமல் கேளுங்கள் தி.மு.க உங்களுக்கு செய்ய கடமைப்பட்டிருக்கிறது" என்றார்.