Published:Updated:

`அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால், ₹1000 பரிசு!' - அசத்தும் தலைமை ஆசிரியர்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜேசுதாஸ்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜேசுதாஸ் ( நா.ராஜமுருகன் )

``மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் உற்சாகப்படுத்தத்தான், `எங்கள் பள்ளியில் 1 - 8ம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்த்தால் ரூ.1000 பரிசு' என்று அறிவித்தேன். பலரும் ஆர்வமாக வந்து தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்".

தனியார் பள்ளி மோகத்தில், `கடன் வாங்கியாவது அங்கு பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும்' என்றுதான் பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். `அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தால், சரியாக படிக்கமாட்டார்கள்' என்று தவறாக நினைத்து, தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் ஒருவர், ``எங்கள் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்த்தால், சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1000 பரிசு வழங்குகிறேன்" என்று அறிவித்திருப்பது, கல்வி ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஈசநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
ஈசநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
நா.ராஜமுருகன்
``உங்கள மாதிரி கலெக்டர் ஆகப்போறேன்!" - ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியரை நெகிழ வைத்த மாணவர்கள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது ஈசநத்தம். மிகவும் பின்தங்கிய கிராமமான ஈசநத்தம், கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகின்றன. அதோடு, தனியார் பள்ளிகளும் உள்ளன. இங்கு இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜேசுதாஸ்தான், பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்களுக்கு ரூ.1000 பரிசு வழங்குவதாக அறிவித்து, ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

வீடு வீடாகச் சென்று அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டிய அவசியம் குறித்தான விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கிகொண்டிருந்த ஜேசுதாஸை சந்தித்தோம். வாழ்த்துகள் சொல்லி, அவரிடம் பேசினோம். ``முதலில் இது தொடக்கப்பள்ளியாகத்தான் இயங்கி வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு இந்தப் பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக பணிமாறுதலில் வந்தேன்.

ஜேசுதாஸ்
ஜேசுதாஸ்
நா.ராஜமுருகன்

இந்தப் பள்ளியில் அந்த நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. அதற்குக் காரணம், இந்த கிராமப் பகுதியில் சில தனியார் பள்ளிகளும், அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றும் இருந்ததுதான். இங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் சிரமப்படும் நிலையில் உள்ளவர்கள். இருந்தாலும், அவர்களில் பலர் இங்குள்ள அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க நினைக்காமல், தனியார் பள்ளிகளை நாடினார்கள். அதனால், அவர்களிடம் அரசுப் பள்ளி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த, கல்வி கற்பிக்கும் முறையை செம்மையாக்கி, மாணவர்களைத் தரமானவர்களாக உருவாக்கினோம். சக ஆசிரியர்கள் அதற்கு நல்லமுறையில் ஒத்துழைப்பு தந்தார்கள்.

இதன் காரணமாக, எங்கள் பள்ளியில் எட்டாவது வரை படித்துவிட்டு இங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் போய் சேரும் மாணவர்கள்தான், பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்புகளில் வருடா வருடம் அதிகம் மார்க் வாங்க ஆரம்பித்தார்கள். அதனால், எங்கள் பள்ளியின் மீது நம்பிக்கை வந்து, பெற்றோர்கள் பிள்ளைகளை இங்கே சேர்க்க ஆரம்பித்தார்கள். அதன் காரணமாக, மாணவர்களின் எண்ணிக்கை 150-க்கும் மேல் உயர்ந்தது.

என்னுடைய சொந்தப் பணத்தில் மாணவர்களுக்குக் கல்வி சம்பந்தப்பட்ட செலவுகள் பண்ணுவது, ஆண்டு விழாக்களைச் சிறப்பாக நடத்துவது என்று செயல்பட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு, ``ஆறாம் வகுப்பில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கும் முதல் இரண்டு பெற்றோர்களுக்கு தலா இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்" என்று அறிவித்தேன்.

 ஈசநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
ஈசநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
நா.ராஜமுருகன்

உடனே, பெற்றோர்கள் ஆர்வமாகத் தங்கள் பிள்ளைகளை அழைத்துவந்து சேர்த்தார்கள். அதில் முதலில் சேர்த்த இரண்டு மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தலா இரண்டு கிராம் தங்க நாணயங்களை வழங்கினேன். அதைத் தொடர்ந்து, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்குக் காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். இருந்தாலும், வீடியோ, வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு மொபைல்கள் மூலமாக மாணவர்களுக்கு தொடர் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தோம். இந்நிலையில் தான், இந்தக் கல்வி ஆண்டிற்காக மாணவர்கள் சேர்க்கையை அரசு வலியுறுத்தியது.

அதன் காரணமாக, பெற்றோர்களைச் சந்தித்து, மாணவர்களை எங்கள் பள்ளியில் சேர்க்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் உற்சாகப்படுத்தத்தான், `எங்கள் பள்ளியில் 1 - 8ம் வகுப்பு வரை மாணவர்களைச் சேர்த்தால், ரூ.1000 பரிசு' என்று அறிவித்தேன். பலரும் ஆர்வமாக வந்து தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அதில் பலர், `நீங்க இந்த பள்ளிக்கூடத்தை சிறப்பாக மாற்றி வைத்திருப்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் பரிசு கொடுப்பதற்காகவெல்லாம் நாங்கள் இந்தப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கவில்லை. இங்கே எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்ததன் காரணமாகவே, பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து சேர்க்கிறோம்' என்றார்கள். அதைக் கேட்டபோது, ஆசிரியர்களான எங்களுக்குப் பெரிய திருப்தி ஏற்பட்டிருக்கிறது.

இன்னும் பலர், தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இங்கு எட்டாம் வகுப்பு படித்த 35 மாணவர்கள் உயர்நிலைக் கல்வி பயில வெளிப் பள்ளிக்கு போயிருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம், ஒன்றாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரை இதுவரை 39 புதிய மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜேசுதாஸ்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜேசுதாஸ்
நா.ராஜமுருகன்
அட்மிஷன் போட்டால் ₹1,000 ஊக்கத்தொகை, வகுப்பறையில் உண்டியல்; அசத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்!

அவர்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அட்மிஷன் போட்டேன். இதன் மூலம், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 163 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் 10 முதல் 15 மாணவர்கள் வரை எங்கள் பள்ளியில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வரும் சுதந்திர தினவிழாவில் இந்த வருடம் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் விழாவுக்கு அழைத்து, அவர்களுக்கு மரியாதை செய்து, ரூ. 1000 பரிசை வழங்க இருக்கிறேன். பின்தங்கிய பகுதியில் உள்ள இந்த எளிய குடும்பப் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த என்னாலான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்வேன்" என்றார் உறுதியாக.

எளிய வீட்டுப் பிள்ளைகளின் கல்விக்கண்ணை திறக்கும், தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்!

அடுத்த கட்டுரைக்கு