Published:Updated:

`பாடம் புரியலையா? இதோ வர்றேன்!' - மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் தலைமை ஆசிரியை

மாணவர்களின் வீட்டில் கலா
மாணவர்களின் வீட்டில் கலா

தங்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவார். கடந்த இரண்டு வாரங்களாக 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகிறார்.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர், தங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் புரியவில்லை என்றால், தினமும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருவது, அந்த கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

மாணவருக்கு பொன்னாடை போர்த்தும் கலா
மாணவருக்கு பொன்னாடை போர்த்தும் கலா
மாணவர்களை கிராமங்களுக்கே தேடிச்சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; குவியும் பாராட்டு!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது எழுதியாம்பட்டி. இந்த குக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் கலா, மாணவர்களின் வீடுகளுக்கு தினமும் சென்று பாடம் நடத்தி வருகிறார். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் கிராமம் இது.

வறட்சியான பகுதி என்பதால், இங்கு விவசாயமும் சரியாக நடக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய கிராமத்தில்தான், இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பல கனவுகளோடு பள்ளிக்குப் படிக்க அனுப்பி வருகிறார்கள். அதை உணர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியை கலா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்குச் சிறப்பாக கல்வியை போதித்து வருகிறார்கள்.

 காய்கறி வழங்கும் கலா
காய்கறி வழங்கும் கலா

தலைமை ஆசிரியை கலா, மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாகத்தில் இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளைந்த காய்கறிகளைக் கொண்டு மாணவர்களுக்குச் சத்தான உணவு கிடைக்கச் செய்தார். அதேபோல், வருடா வருடம் இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பொன்னாடை போர்த்தி, பூங்கொத்துக் கொடுத்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவார். இப்படி எல்லா விஷயத்திலும் மாறுபட்டு செயல்பட்டு வரும் ஆசிரியை கலா, கடந்த இரண்டு வாரங்களாக 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்றுக் கொடுத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து, தலைமை ஆசிரியை கலாவிடம் பேசினோம். ``கல்வித் தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால் பள்ளிக்கு வந்த சில பெற்றோர்கள், `அதில் ஆங்கிலப் பாடம் எடுப்பவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவதால் மாணவர்களுக்குப் புரியவில்லை. அதனால், நீங்கள் பிள்ளைகளுக்கு வீட்டுக்கு வந்து பாடம் நடத்த முடியுமா..?' என்று கோரிக்கை வைத்தார்கள். அதனால், கடந்த 2 வாரங்களாக எங்கள் பள்ளியின் 4 மற்றும் 5 -ம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களை அவர்களுக்குப் புரியும்படி நடத்துகிறேன்.

கலா (தலைமை ஆசிரியை)
கலா (தலைமை ஆசிரியை)

தினமும், என் சொந்த ஊரான மாயனூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற எழுதியாம்பட்டியில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தி வருகிறேன். 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் மாலை 5:30 முதல் 6:00 மணி வரையிலும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 6:00 முதல் 6:30 மணி வரையிலும் கல்வித் தொலைக்காட்சியில் பாடம் ஒளிபரப்பப்படுகிறது. அந்த நேரத்தில் சரியாக அங்கே சென்று, மாணவர்களுக்குப் பாடங்களை எளிமையாக விளக்குகிறேன்.

சில மாணவர்களின் வீடுகளில் டி.டி.ஹெச், சில மாணவர்களின் வீடுகளில் கேபிள் கனெக்ஷன் என்று இருப்பதால், கல்வித் தொலைக்காட்சிக்கு சேனல் எண் வீட்டுக்கு வீடு மாறுபடுவதாக உள்ளது. இதனால் மாணவர்களுக்குக் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக, அந்தந்த சேவைகளில் கல்வித் தொலைக்காட்சியின் சேனல் எண் என்ன என்பதை பிரின்ட் அவுட் எடுத்து, மாணவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். மேலும், கல்வி சேனல் எண், ஒளிபரப்பப்படும் வகுப்புகளின் நேரம் உள்ளிட்ட சில தகவல்களை மாணவர்களின் புத்தகங்களில் அட்டவணையாகப் போட்டுக் கொடுத்துள்ளேன்.

மாணவர்களின் வீட்டில் கலா
மாணவர்களின் வீட்டில் கலா
`இதுவும் என் பொறுப்புதான்!' - பள்ளி வளாகத்தை தனியொருவராக தூய்மைப்படுத்திய தலைமை ஆசிரியர்

இப்போது மாணவர்கள், `பாடங்கள் நல்லா புரியுது' என்கிறார்கள். ஒவ்வொரு மாணவரையும் அவர்கள் வீடுகளுக்கே போய் பார்த்து பாடம் நடத்துவதில் எனக்கு நிறைவாக இருக்கிறது. கொரோனா காலம் என்பதால், மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்களோடு போய் பாடம் நடத்துகிறேன். பள்ளி தொடங்கும் வரை, இப்படி பாடம் நடத்துவதை தொடர இருக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு