Published:Updated:

கரூர்: டோக்கியோ யுனிவர்சிட்டிக்கு படிக்கச் செல்லும் முதல் இந்திய சி.பி.எஸ்.இ மாணவி!

ஸ்வேதா
ஸ்வேதா ( படம்: நா.ராஜமுருகன் )

எங்கப்பாவும் அம்மாவும், `அவ்வளவு தூரம் பிள்ளையை அனுப்புவதா?'னு நினைக்காம, என்னைத் தட்டிக்கொடுத்து, `நல்ல கல்வியைக் கற்க உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் உன்னை அனுப்பத் தயார்'னு சொல்லி உற்சாகப்படுத்துறாங்க.

``சுற்றுச்சூழல் அறிவியலிலும், ஜாப்பனீஸ் மொழியைக் கற்பதிலும் அதிக ஈடுபாடு காட்டினேன். அதனால், டோக்கியோ பல்கலைக்கழகத்தில், நான்கு வருடம் சுற்றுச்சூழல் அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இந்தியாவில் இருந்து டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படிக்கப்போகும் முதல் சி.பி.எஸ்.இ மாணவி நான்தான்" என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் ஸ்வேதா சௌந்தர்ராஜன்.

கரூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா சௌந்தர்ராஜன். கரூர் நகரில் உள்ள சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்ட ஒரு தனியார் பள்ளியில், தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். 2016-ம் ஆண்டிலிருந்து ஜப்பானிய மொழியைக் கற்றுவந்த இவர், சுற்றுச்சூழல் அறிவியல் சம்பந்தப்பட்ட நான்கு வருட கோர்ஸ் படிக்க, ஜப்பானில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் அப்ளை செய்தார்.

அதில், டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. கொரோனா ஊரடங்குப் பிரச்னையால் இப்போதைக்கு அவரால், ஜப்பான் சென்று நேரடியாக க்ளாஸை அட்டெண்ட் செய்ய முடியாது. கொரோனோ பிரச்னை முடியும்வரையில், ஆன்லைன் கிளாஸில் படிக்கவிருக்கிறார் ஸ்வேதா.

டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்வேதா சௌந்தர்ராஜனிடம் பேசினோம்.

``அப்பா சௌந்தர்ராஜன் சின்னதா தொழில் பண்றார். அம்மா தனலட்சுமி குடும்பப் பொறுப்பை பார்த்துக்கிறார். அக்கா தனியார் கல்லூரியில் வேலைபார்க்கிறார். இதுதான் என் குடும்பம். அப்பா, என்னை நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சு, தனியார் பள்ளியில் படிக்க வெச்சார். அந்தப் பொறுப்பை உணர்ந்து, நல்லா படிச்சு பத்தாம் வகுப்புல பள்ளி அளவுல முதல் மாணவியா மார்க் வாங்கினேன். பன்னிரண்டாம் வகுப்புல, ஸ்கூல் டாப்பர்ல ஒரு மாணவியா வந்தேன். 2016-ம் ஆண்டிலிருந்து ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொண்டு வந்தேன்.

ஸ்வேதா
ஸ்வேதா
நா.ராஜமுருகன்

எனக்கு இயல்பிலேயே சுற்றுச்சூழல் சம்பந்தமான கல்வி கற்பதில் அதிக ஆர்வம். எங்கள் பள்ளி தாளாளர் அசோக் சங்கர், கடந்த வருடம் ஜப்பானில் உள்ள நேஷனல் நிப்பான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் நடைபெற்ற சக்கூரா சயின்ஸ் புரொகிராமுக்கு நான் உட்பட 10 மாணவர்களை அழைச்சுட்டுப் போனார். அதன் மூலம், அங்குள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைப் பார்க்க நேர்ந்தது. அங்குள்ள கல்வி முறையும், அங்கு பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் பாதுகாப்பு உணர்வும் என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதே, `உயர்கல்வியை இங்கேதான் படிக்கணும்'னு முடிவுபண்ணினேன். பன்னிரண்டாம் வகுப்பை முடிச்சதும், ஜப்பானில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களில், சுற்றுச்சூழல் அறிவியல் கோர்ஸ் படிக்க அப்ளை பண்ணினேன். அதுல, டோக்கியோ பல்கலைக்கழகத்திலிருந்து இன்டர்வியூவுக்கு அழைப்பு விடுத்தாங்க.

கடந்த மார்ச் 5-ம் தேதி, அந்தப் பல்கலைக்கழகத்தின் டெல்லி கிளை அலுவலகத்தில் வைத்து, நேரடியாக இன்டர்வியூ பண்ண இருந்தாங்க. ஆனா, அதற்குள் கொரோனா பிரச்னை வந்ததால, டெல்லிக்குச் சென்ற என்னிடம் ஸ்கைப் வழியாக டோக்கியோ பல்கலைக்கழகத்திலிருந்து இன்டர்வியூ பண்ணினாங்க.

நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகிட்ட அந்த இன்டர்வியூவுல, இந்திய அளவில் மூன்று பேர் மட்டும் தேர்வானோம். அதில், சி.பி.எஸ்.இ-ல் தேர்வான ஒரே மாணவி நான்தான். இதுவரை, இந்திய அளவில் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கத் தேர்வான முதல் சி.பி.எஸ்.இ மாணவியும் நான்தான்.

வரும் செப்டம்பர் 14-லிருந்து ஆன்லைன் மூலம் கிளாஸ் தொடங்க இருக்கு. கொரோனா பிரச்னை முடிஞ்சதும், ஜப்பான் போகணும். அந்தப் பல்கலைக்கழகத்திலேயே ஸ்காலர்ஷிப் கிடைக்க வாய்ப்பிருக்கு. அதற்கான படிவத்தையும் அனுப்பினாங்க. நான் அதற்கு அப்ளை பண்ணியிருக்கேன். அதற்கான இன்டர்வியூ விரைவில் நடக்கவிருக்கு.

ஜப்பானில் ஸ்வேதா
ஜப்பானில் ஸ்வேதா

டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தால், வேலைவாய்ப்பு பிரகாசமா இருக்கும். நல்ல எதிர்காலம், நினைச்சுபார்க்க முடியாத சம்பளம் கிடைக்கும். கிழக்காசிய அளவில், எங்கு போய் வேலை கேட்டாலும் உடனே கொடுப்பாங்க. எல்லாவற்றையும்விட, நிறைய கத்துக்க முடியும். இப்படி, டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படிப்பதால் பல நன்மைகள் இருக்கு.

உண்மையில் அங்கு படிக்க வாய்ப்பு கிடைச்சதை பெரிய கனவு நிறைவேறியதாக நினைக்கிறேன். தவிர, எங்கப்பாவும் அம்மாவும், `அவ்வளவு தூரம் பிள்ளையை அனுப்புவதா?'னு நினைக்காம, என்னைத் தட்டிக்கொடுத்து, `நல்ல கல்வியைக் கற்க உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் உன்னை அனுப்பத் தயார்'னு சொல்லி உற்சாகப்படுத்துறாங்க. இப்படிப் பெற்றோர் கிடைத்தால், குக்கிராமத்துல இருக்கிற மாணவர்கூட, நினைச்சதை சாதிக்க முடியும்!" என்றார் நெகிழ்ச்சியுடன்.

வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு