Published:Updated:

`அரசுப் பள்ளிகளில் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பம்!' -சிட்னி மாநாட்டுக்குத் தேர்வான கரூர் ஆசிரியர்

தமிழ்நாடு அளவில் சிறப்பாக புராஜெக்ட்களைச் செய்த 8 ஆசிரியர்களை டெல்லியில் நடந்த தேசிய அளவிலான சந்திப்பில் இடம்பெற வைத்தனர். அங்கும் பல புராஜெக்ட்டுகளை செய்து காண்பித்தோம்.

ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகர் சிட்னியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்தும் 21-ம் நூற்றாண்டுக்கான கல்வி கற்பித்தல் தொடர்பான மாநாட்டில் பங்கேற்கச் செல்கிறார் கரூர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர்.

ஆசிரியர் மனோகர்
ஆசிரியர் மனோகர்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது, வெள்ளியணை. இந்தக் கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் மனோகர் என்பவர்தான், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வரும் மார்ச் 24, 25 மற்றும் 26-ம் தேதிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்தும் உலகளவிலான ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்தியாவிலிருந்து மொத்தம் 30 ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டிலிருந்து மனோகரும் சேலம் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் இளவரசனும் கலந்து கொள்கின்றனர்.

ஆசிரியர் மனோகர்
ஆசிரியர் மனோகர்

ஆசிரியர் மனோகரிடம் பேசினோம். `` 21-ம் நூற்றாண்டில் கல்வியை தொழில்நுட்ப உதவியுடன் புதுமையாகக் கற்பிப்பது தொடர்பாகப் பல வழிகளை மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ளனர். அதை உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கற்றுக் கொடுக்க உள்ளனர். இதுதொடர்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுத்தனர். நானும் அதில் பங்கேற்றேன். அதன்பிறகு, பல்வேறு புராஜெக்ட்டுகளை எங்களுக்குக் கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்மூலமாக, மாணவர்களுக்குப் புதுமையான முறையில் டெக்னாலஜியைப் பயன்படுத்தி கல்வி கற்பிக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். மேலும், ஸ்கைப் சாதனத்தைவிட அட்வான்ஸ் தொழில்நுட்பம் உள்ள கருவியின் உதவியோடு எங்கள் மாணவர்களை வேறு மாநிலம், வேறு நாடுகளில் உள்ள மாணவர்களோடு பேச வைத்தேன்.

நானும் அங்குள்ள ஆசிரியர்களிடம் பேசி, கல்வி கற்பிக்கும் முறைகளைப் பரிமாறிக் கொண்டேன். மாணவர்கள் கையால் எழுதுவதைக் குறைத்து, எல்லா விஷயங்களையும் அவர்களை வீடியோவாக எடுக்க வைத்தோம். மேலும், தேர்வு பயத்தைக் குறைக்கும்விதமாக, அனைத்தையும் எளிமையாக்கினோம். கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வைக்கும் மைக்ரோ கற்றல்முறை மூலமாக அதைச் செய்ய வைத்தோம். தவிர, எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கினேன்.

ஆசிரியர் மனோகர்
ஆசிரியர் மனோகர்

அதை ஆண்ட்ராய்டு மொபைலில் அவர்களின் பெற்றோர்கள் ஸ்கேன் செய்தால், அந்த மாணவர் பள்ளிக்குச் சென்றாரா இல்லையா, அன்று படித்த பாடங்கள் என்னென்ன, பள்ளியில் மாணவரின் செயல்பாடுகள், வீட்டுப்பாடம் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதன்முறையா இந்த முயற்சியை மேற்கொண்டோம். இதெல்லாம் தனித்தனி புராஜெக்ட்கள்.

இப்படி தமிழ்நாடு அளவில் சிறப்பாக புராஜெக்ட்களைச் செய்த 8 ஆசிரியர்களை டெல்லியில் நடந்த தேசிய அளவிலான சந்திப்பில் இடம்பெற வைத்தனர். அங்கும் பல புராஜெக்ட்டுகளை செய்து காண்பித்தோம். ஒவ்வொரு டீமில் இருந்தும் ஓர் ஆசிரியரை உலக அளவிலான மாநாட்டுக்குத் தேர்வு செய்தனர். தமிழகத்திலிருந்து நானும் சேலம் இளவரசனும் மட்டும் தேர்வானோம்" என உற்சாகத்தை வெளிப்படுத்தியவர்,

ஆசிரியர் மனோகர்
ஆசிரியர் மனோகர்

`` இந்த மாநாட்டை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கல்விப் பிரிவின் துணைத்தலைவர் அந்தோணி சால்சிட்டோ தலைமையில் நடத்த இருக்கிறார்கள். அங்கே உலக அளவில் சிறந்த ஆசிரியர்கள் வருவார்கள். அவர்களோடு பழகுவதன் மூலம், கல்வி கற்பிப்பதில் பல புதுமையான விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அதை வைத்து, வெள்ளியணை என்ற கடைக்கோடி கிராமத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களையும் உலகத் தரத்துக்கு உயர்த்த முடியும்" என்றார் மகிழ்ச்சியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு