Published:Updated:

`கடைசி வரைக்கும் லேப்டாப் கிடைக்கலே..!’ +2-வில் சாதித்த விழிச்சவால் மாணவி காவ்யா

காவ்யா
காவ்யா

விழிச்சவால் கொண்டவர்களுக்கான அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 600-க்கு 571 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக சிறப்பிடம் பெற்றுள்ளார் காவ்யா.

``நம்மிடம் இருக்கும் குறைகளை நினைத்து ஒருபோதும் சோர்ந்துவிடக் கூடாது. ஓர் பையன் படித்தால் அது அவனுக்கான கல்வி மட்டுமே. ஆனால், ஒரு பெண் படித்தால் அது அந்தக் குடும்பத்துக்கான கல்வி...” என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் மாணவி காவ்யா. விழிச்சவால் கொண்டவர்களுக்கான அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 600-க்கு 571 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக சிறப்பிடம் பெற்றுள்ளார்.

பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சி.

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கி வருகிறது திருச்சி பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி. 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது அப்பள்ளி. அங்கேயே தங்கிப் படித்த நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகளான காவ்யா 571 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 6 பாடங்களிலுமே 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ள காவ்யா, தமிழில் 98, வரலாற்றில் 99, அரசியல் அறிவியலில் 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இத்தனைக்கும் அரசியல் அறிவியல் பாடத்துக்கு கடந்த நவம்பர் மாதத்தில்தான் முறையாக ஆசிரியர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்படியிருந்தும் அதிக மதிப்பெண் பெற்ற இம்மாணவியின் அறிவுக் கூர்மையை பாராட்டி வருகிறார்கள் அப்பள்ளியின் ஆசிரியர்கள்.

காவ்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு உரையாடினோம். ``எங்க அப்பா கரும்பு ஜூஸ் கடை வச்சிருக்கார். அந்த வருமானத்தாலதான் எங்க குடும்பம் ஓடுது. என்கூடப் பொறந்தது ஒரே ஒரு தங்கச்சிதான். அவங்க கஷ்டப்பட்டாலும் இன்று வரையிலும், எங்களுக்கு கஷ்டம்ன்னா என்னான்னு தெரியாம வளர்த்துகிட்டு வர்றாங்க.

பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சி.

எனக்குப் பிறவியிலேயே பார்வைக் குறைபாடு இருந்துச்சு. எங்க பாட்டிக்கும் (அம்மாவோடா அம்மா), அத்தைக்கும் (அப்பாவோட அக்கா) இதேமாதிரி கண் பார்வையில பிரச்னை இருக்குங்கிறதால. எனக்கும் வந்திருக்கலாம்ன்னு டாக்டர்கள் சொன்னாங்க. கண்ணின் நரம்புகள், திசுக்களின் பிரச்னையாக்கூட இருக்கலாம்ன்னு வேறு சில டாக்டர்கள் சொல்றாங்க. சாதாரண கரும்பு ஜூஸ் கடை வச்சி பிழைக்கிறவங்களோட பிள்ளைக்கு லட்சக்கணக்கில செலவு பண்ணி மருத்துவம் பார்க்க முடியுமா... சொல்லுங்க" எனக் கேள்வி எழுப்புகிறார் காவ்யா.

``ஈரோடு மாவட்டத்துல உள்ள பவானிசாகர்தான் என்னோட சொந்தஊர். அங்குள்ள அரசுப் பள்ளியில ஒரு வருஷம் படிச்சேன். அந்தப் பள்ளியில படிக்கிற சூழல் இல்லை. நான் பார்வைக் குறைபாடு உள்ளவள்ங்கிறதால எல்லோரும் என்னைக் கிண்டலாப் பேசினாங்க. அவங்களோடப் பேச்சு எனக்கு ரொம்ப மனக்கஷ்டத்தைக் கொடுத்துச்சு. நான் டிரீட்மெண்ட் பார்க்கும் டாக்டர் ஒருவர், கோயம்புத்தூர்ல ப்ளைண்ட் ஸ்கூல் இருக்கிறதாச் சொன்னார். அஞ்சாவது வரைக்கும் அங்கே படிச்சேன். அந்த ஸ்கூல் தலைமையாசிரியர்தான் திருச்சியில 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கலாம்ன்னு சொன்னாங்க. திருச்சி ஸ்கூல்ல என்னை சேர்த்துவிட அப்பாவும் அம்மாவும் ரொம்பத் தயங்குனாங்க.

காவ்யா
காவ்யா

அப்போ அந்த ஹெச்.எம், ``திறமையான பொண்ணு... வாழ்க்கைய கெடுத்துடாதீங்க”ன்னு அப்பா, அம்மாவை கன்வின்ஸ் பண்ணினார். நானும் ரெண்டு பேருக்கும் தைரியம் கொடுத்தேன். அதுக்குப் பிறகுதான் திருச்சி பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டாங்க. பத்தாவதுல 452 மார்க் எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தேர்வானேன். பிரெய்லி முறையில் தமிழில் எழுதுதல் மற்றும் வாசித்தல் ஆகிய இரண்டு போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றேன். அப்போதைய ஆட்சியர் இராசாமணி சார், என்னைப் பாராட்டி 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கினார்.

இப்போ 12-ம் வகுப்புத் தேர்வில் 600-க்கு 571 மதிப்பெண் எடுத்து மீண்டும் முதல் மாணவியாகத் தேர்வாகியுள்ளேன். யு.பி.எஸ்.சி, தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ரேங்க் பெற்று, கலெக்டராகணும். அதுதான் என்னோட வாழ்நாள் கனவு. சென்னையில காலேஜ்ல சேர்ந்து பி.ஏ வரலாறு படிக்கப்போறேன். நான் படிச்ச பள்ளியில் பொருளியல் போன்ற முக்கியமான பாடங்களுக்கு டீச்சர் இல்லைங்கிறதும் ஒரு குறையா இருக்கு. நாங்க ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்த லேப்டாப்பும் கடைசிவரை வரல. நம்ம சூழ்நிலையையும் குடும்பக் கஷ்டத்தையும் புரிஞ்சுகிட்டுப் படிச்சா நிச்சயம் நம்மால சாதிக்க முடியும். இந்த ஆண்டாவது எனக்கு அரசாங்கத்தோட மடிக்கணினி கிடைச்சா, அது என் காலேஜ் படிப்புக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்’’’ என்கிறார் காவ்யா.

திருச்சி, பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனிடம் பேசினோம். ``தொடர்ந்து ஐந்தாவது முறையாக 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது இப்பள்ளி. இங்கு படிக்கும் மாணவர்களுக்குப் படிப்போடு சேர்த்து மனஉறுதியோடு எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற சவால் கொண்ட மாணவிகள் எளிதில் மனம் உடைந்துவிடுவார்கள். அதை எப்படித் தவிர்க்க வேண்டும், அவர்களின் எதிர்மறை எண்ணங்களிலிருந்து எப்படி விடுவிப்பது என்பது குறித்து தொடர்ந்து கவுன்சலிங் கொடுத்து வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு