Published:Updated:

‘‘அனைத்து தாலுக்காக்களிலும் அமையுமா கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்?’’

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வியைப் பெறுகிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

நீட் தேர்வு, ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கல்வியில் காவிமயம் என, முன்னெப்போதும் இல்லாத அளவில் கல்வி தொடர்பாக ஆளுங்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமான போர் முற்றிவருகிறது. இந்த நிலையில், ‘தாலுகாதோறும் கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், 1962-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகின்றன. மத்திய அரசுப் பணியில் உள்ளோருக்கு ஏற்படும் பணியிட மாறுதல் காரணமாக அவர்களுடைய குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

செங்கோட்டையன் - பிரின்ஸ் கஜேந்திரபாபு - கண்ணன்
செங்கோட்டையன் - பிரின்ஸ் கஜேந்திரபாபு - கண்ணன்

தற்போது நாடு முழுவதும் 1,230 பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. வெளிநாடுகளிலும் மூன்று பள்ளிகள் உள்ளன. 13,15,151 மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளிகளில் 45,477 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன் (சி.பி.எஸ்.சி) இணைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளிகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பாடங்கள் பயிற்றுவிக்கப்படுவதால், அரசுப் பணியாளர்களின் பணியிட மாறுதலின்போது அவர்களின் குழந்தைகளின் கல்வித்தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. இந்தப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படுவதால், இதே கல்வியை தமிழகத்தின் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற வாதமும் வலுத்துவருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கண்ணன், ‘‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வியைப் பெறுகிறார்கள். அத்துடன், நீட் உள்ளிட்ட உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதனால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா

இதுதொடர்பாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த வழக்கறிஞரான அஸ்வினிகுமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா அளித்துள்ள தீர்ப்பில், ‘நாடு முழுவதும் இருக்கும் தாலுகாக்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறார்.

இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. தூத்துக்குடி மாவட்டம் வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் பள்ளி கட்டுவதற்காக மாநில அரசிடம் நாங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த நிலத்தை, கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்காகக் கொடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை. அதனால், அங்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி வருவதில் தொடர்ந்து இழுபறி உள்ளது. தற்போது கிடைத்திருக்கும் தீர்ப்புக்குப் பிறகு, மத்திய அரசின் பள்ளி அங்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேந்திரிய வித்யாலயா
கேந்திரிய வித்யாலயா

கல்வியாளரான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு, ‘‘தமிழகத்தில் தற்போது பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு தொடக்கப் பள்ளி இருக்கிறது. 3 கி.மீ தூரத்துக்குள் ஒரு நடுநிலைப் பள்ளியும், 5 கிலோமீட்டருக்குள் ஓர் உயர்நிலைப் பள்ளியும், 77 கி.மீ தூரத்துக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளியும் உள்ளன. இந்தப் பள்ளிகளை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கினாலே கல்வித்தரம் மேம்படும்.

அதைவிடுத்து, தாலுகாவுக்கு ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்குவதால் மட்டும் கல்வித்தரம் மேம்பட்டுவிடாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப்போல் அரசுப் பள்ளிகளின் தரத்தையும் உயர்த்தினாலே போதுமானது.

எந்தப் பாடத்திட்டத்தில் படித்தவர்களாக இருந்தாலும், இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கோச்சிங் வகுப்புகளுக்குச் சென்றால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது. நீட் தேர்வுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேவை என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றார்.

இதுபற்றிப் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘‘மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை ஒவ்வொரு தாலுக்காவிலும் அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்திருக்கிறது. இருந்தாலும், இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். இதுகுறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்’’ என்றார்.

என்ன முடிவெடுக்கப்போகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு