Published:Updated:

`டிஜிட்டல் வகுப்பு; நல்லொழுக்கக் கல்வி'-தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் குருவிமலை அரசுப் பள்ளி!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம் குருவிமலை கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

இந்தப் பள்ளியில் மாணவர்களுக்குச் செய்துகொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் பள்ளியின் தூய்மையையும் பார்க்கும்போது பூரிப்படையச் செய்கிறது. தனியார் தொடக்கப் பள்ளிகளெல்லாம், குருவிமலை அரசுப் பள்ளிக்கு ஈடுகொடுக்கவே முடியாது.

அந்த அளவிற்கு உள்கட்டமைப்பு, கல்வி நடைமுறைகள், மாணவர்களின் வகுப்பறைத் தோற்றம், சுவர் சித்திரம், வகுப்பறையில் மின்னும் மாணவர்களே வரைந்த ஓவியங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட நூலகம், தூய்மையான கழிவறைகள், தரம் பிரிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என ஒவ்வொரு அசைவிலும் ஆச்சர்யப்படவைக்கிறது.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

தலைமை ஆசிரியரின் அறையில் நுழைந்ததும், நம்மை முதலுதவி பெட்டியே வரவேற்றது. பெட்டியைத் திறந்து பார்த்தோம். அதில் தலைவலி, இருமல், சளி, வாந்தி போன்றவற்றுக்கு மருந்துகள் தனித்தனியாக இருந்தது. மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி மருந்தின் காலாவதி தேதியும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் விடுமுறைப் படிவமும் மாணவர்களின் விண்ணப்பப் படிவமும் ஒரு ரேக்கில் வைக்கப்பட்டிருந்தது.

``கவர்மென்ட் ஸ்கூல்ல என்ன சார் சொல்லித்தர்றாங்க? அங்கு அடிப்படை வசதிகள்கூட இருக்காது. பிள்ளையை அரசுப் பள்ளிக்கு அனுப்புவதே அவமானம். தலையை அடமானம் வைத்தாவது என் பிள்ளையைத் தனியார் பள்ளியில் படிக்கவெச்சுடணும்’ என்று சொல்லும் பெற்றோர்கள், ஒருமுறை வந்து என் பள்ளியைப் பார்த்துவிட்டுச் செல்லட்டும்.

முதலுதவி பெட்டி
முதலுதவி பெட்டி

அதன்பிறகே, அரசுப் பள்ளி எப்படி இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்" என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார் குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஞ்சலா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ஆரம்பப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் புத்தகத்தில் உள்ளவற்றை மட்டும் மாணவர்களுக்குப் போதிக்கும் இடமல்ல. மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும், அறத்தையும், நீதியையும் போதிக்கும் இடமே... இங்கு போதிக்கும், ஆரம்ப நிலை நல்லொழுக்கக் கல்வியே ஒவ்வொரு மாணவனின் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் தீர்மானிக்க உதவுகிறது.

தலைமை ஆசிரியர் ஆஞ்சலா
தலைமை ஆசிரியர் ஆஞ்சலா

அதுபோன்று நல்லொழுக்கத்தைத்தான் எங்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். இவற்றை முதலில் கற்றுக்கொடுத்தாலே, புத்தகத்தில் உள்ளவற்றை மாணவர்கள் எளிதாகப் படித்துவிடுவார்கள். புத்தகப் பாடங்களைக் கடந்து யோகா, செஸ், கராத்தே, விவசாயம் போன்ற கலைகளை தனித்தனி ஆசிரியர்களை வைத்துக் கற்றுக்கொடுக்கின்றோம். மாநில அளவில் நடந்த யோகா போட்டியில் என்னுடைய மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்" என்று அந்தப் பதக்கங்களைக் காண்பித்துச் சிரிக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், ``தனியார் பள்ளிகளைப் போன்று மாணவர்களின் தேர்ச்சி அறிக்கையைத் தபால் மூலம், பெற்றோருக்கு அனுப்பி வைக்கின்றோம். அனைத்து மாணவர்களுக்கும் ஹேண்ட் புக் தந்துள்ளோம். 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிஜிட்டல் வகுப்பறை உருவாக்கி இருக்கிறோம். மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

அதேபோன்று அஞ்சல் துறை அதிகாரிகளை அழைத்து, சிறு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகிறோம். புரவலர் திட்டத்தைத் தொடங்கி அதன் மூலம் வரும் நன்கொடைகளைப் பள்ளியின் வங்கிக் கணக்கில் சேமித்து வைகிறோம். தற்போது புரவலர் திட்டம் மூலம் ரூபாய்.51,000 பள்ளியின் வங்கிக்கணக்கில் இருக்கிறது. மாணவர்களை உற்சாகப்படுத்த ஆண்டுதோறும் குருவிமலை கிராம மக்களை அழைத்து ஆண்டுவிழா நடத்துகின்றோம்.

இவற்றையெல்லாம் பார்த்து மாணவர்களின் பெற்றோர்களே பள்ளிக்குத்தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கின்றனர். 2017-ம் ஆண்டு 80 மாணவர்களே இருந்தனர். இப்போது 200 மாணவர்களுக்கு மேல் உள்ளனர்" என்றார்.

`டிஜிட்டல் வகுப்பு; நல்லொழுக்கக் கல்வி'-தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் குருவிமலை அரசுப் பள்ளி!

மேலும் அவர், என்னால் முடிந்தவரை என் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை, எங்கள் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு செய்தது வருகிறேன். என்னுடைய பள்ளி திருவண்ணாமலை மாவட்டத்தின் ‘மாதிரி’ பள்ளியாக்குவதே என்னுடைய லட்சியம். என்னுடைய பள்ளிக்கு பில்டிங் வசதி குறைவாக இருக்கிறது. அதை அரசு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். மாவட்ட ஆட்சியர் ஒருமுறை வந்து எங்கள் பள்ளியைப் பார்வையிடவேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு