Published:Updated:

காந்தியில் இருந்து கல்வியைத் தொடங்குவோம்!

மகளுடன் த.கண்ணன் – நித்யா
பிரீமியம் ஸ்டோரி
மகளுடன் த.கண்ணன் – நித்யா

இன்றைய கல்விமுறையில் இருக்கும் சிக்கலால் கிராமத்து மாணவர்கள், கிராமத்திலும் வாழ முடியாமல் நகரத்தில் வாழ்வதற்கான திறனையும் வளர்த்துக்கொள்ள முடியாமல் இடையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

காந்தியில் இருந்து கல்வியைத் தொடங்குவோம்!

இன்றைய கல்விமுறையில் இருக்கும் சிக்கலால் கிராமத்து மாணவர்கள், கிராமத்திலும் வாழ முடியாமல் நகரத்தில் வாழ்வதற்கான திறனையும் வளர்த்துக்கொள்ள முடியாமல் இடையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

Published:Updated:
மகளுடன் த.கண்ணன் – நித்யா
பிரீமியம் ஸ்டோரி
மகளுடன் த.கண்ணன் – நித்யா

நாம் விரும்பும் மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்கிற கூற்றின்படி வாழ்கிறார்கள் த.கண்ணன் - நித்யா தம்பதியினர். கோவையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர்கள் காந்தியச் சிந்தனைகளின்பால் ஈர்ப்புக் கொண்டவர்கள். பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக அங்கம் வகித்தவர் கண்ணன். இவர் மனைவி நித்யா பல் மருத்துவர். உலகமயமாக்கலின் விளைவாக சூழலியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் நிகழ்ந்துள்ள சீர்கேடுகளிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்கிற கேள்வி இவர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உண்டாக்கியது. அதன் விளைவாக தற்போது இவர்கள் பொள்ளாச்சி அருகே சேர்வகாரன்பாளையம் என்கிற கிராமத்தில் 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கிறார்கள். மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக மாலை நேரப் பயிலகம் ஒன்றையும் நடத்திவருகிறார்கள்.

“பலரைப் போலவே நானும் தொடக்கத்தில் காந்தியை எதிர்மறையாகத்தான் அணுகினேன். காந்தியைப் பற்றிய மேலோட்டமான புரிதலின் விளைவு இது. பொறியியல் படிப்பை முடித்து விட்டு, வணிக மேலாண்மை படித்தேன். கார்ப்பரேட் நிறுவனங்களில் சில ஆண்டுகள் வேலை செய்தேன். `வாழ்வின் முழுமுதல்நோக்கம் பொருளீட்டுவது மட்டும்தானா?’ என்கிற கேள்வி எழுந்த போதுதான் காந்தியின் இன்றைய தேவை குறித்து உணர முடிந்தது. அதன் பிறகு காந்தியை முழுமையாக வாசித்தேன். திருக்குறள் மீதிருந்த மிகுந்த ஈடுபாட்டின் காரணமாக அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தேன். திருக்குறளும், காந்தியச் சிந்தனையும்தான் எங்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தன” என்கிறார் கண்ணன்.

காந்தியில் இருந்து கல்வியைத் தொடங்குவோம்!

“2005-ம் ஆண்டு எங்களுக்குத் திருமணமானது. அதன் பிறகு வேலை நிமித்தம் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிக்க வேண்டியிருந்தது. அந்தப் பரபரப்பான வாழ்க்கைச் சூழல்மீது இருவருக்குமே சலிப்பு ஏற்பட்டது. எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்கிற கேள்விதான் காந்தியிடம் எங்களைக் கொண்டு போய்ச் சேர்த்தது. என் கணவரோடு சேர்ந்து நானும் காந்தியை வாசித்தேன். நுகர்வுக்கு நம்மை அடிமையாக்கும் நகரச் சூழலிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற எண்ணம் எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது” என்கிறார் அவரின் மனைவி நித்யா.

ஐடி நிறுவனத் துணைத்தலைவர் பணியிலிருந்து வெளியேறிய கண்ணன், திருக்குறளை அடிப்படையாக வைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தலைமைப் பண்பைக் கற்றுக்கொடுக்கும் வகையில் ‘சீர் ஏழு’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன்மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே திருக்குறளை மேலும் விளக்கப்பூர்வமாகக் கொண்டு சேர்த்துள்ளார்.

காந்தியில் இருந்து கல்வியைத் தொடங்குவோம்!

“2012-ல் சீர் ஏழு நிறுவனத்தைத் தொடங்கினோம். சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தோம். இதற்குப் பெரிய வரவேற்பு இருந்தது எனச் சொல்ல முடியாது. இருந்தும் சிறிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரப் பயிலகத்தைத் தொடங்கி பாடத்தோடு சேர்த்து விளையாட்டு, சினிமா, புத்தகங்கள்மீதான ஈடுபாட்டை உருவாக்கினோம்.

காந்தியில் இருந்து கல்வியைத் தொடங்குவோம்!

“இன்றைய கல்விமுறையில் இருக்கும் சிக்கலால் கிராமத்து மாணவர்கள், கிராமத்திலும் வாழ முடியாமல் நகரத்தில் வாழ்வதற்கான திறனையும் வளர்த்துக்கொள்ள முடியாமல் இடையில் மாட்டிக்கொள்கிறார்கள். இது மிகப்பெரிய சிக்கல். விவசாயம் சார்ந்த வாழ்வியலுக்குள் இருக்கும்போது உடல் உழைப்பு மற்றும் இயற்கை சார்ந்த அறிவு கிடைக்கிறது. தற்போதைய கிராமத்து மாணவர்கள் அதில் பின்தங்கிக்கொண்டிருக்கிறார்கள். இச்சூழலை ஆதாரக் கல்விமுறை மூலம் மாற்ற முடியும். கிராமியம் சார்ந்த தொழில் மற்றும் கைவினைகள் மூலம் நவீனக் கல்வியைக் கற்றுக் கொடுக்க முடியும். காந்திய தற்சார்பு என்பது தேசிய தற்சார்பு கிடையாது. முடிந்த வரை உள்ளூர் உற்பத்திதான். இந்த அறிதலின் அர்த்தபூர்வமான விளைவாகவே கிராமத்தை நோக்கிய எங்களது நகர்வையும், மாலை நேரப் பயிலகத்தையும் பார்க்கிறோம்” என்கிறார் கண்ணன்.

மகளுடன் த.கண்ணன் – நித்யா
மகளுடன் த.கண்ணன் – நித்யா

“நாங்கள் இருவருமே நகரச் சூழலில் வளர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு எந்த விவசாயப் பின்னணியும் கிடையாது. கிராமத்துக்கும் எங்களுக்கும் தொடர்பே கிடையாது. விவசாயம் மற்றும் கல்விசார் செயல்பாடே நாங்கள் கிராமத்தில் வேரூன்றுவதற்கான அடிப்படை. விவசாயத்தை நாங்கள் வணிகமாகப் பார்க்கவில்லை. அதை ஒரு வாழ்க்கை முறையாகப் பார்க்கிறோம். மூன்று ஏக்கரில் தென்னை மர விவசாயம் செய்து வருகிறோம். அதனூடாகவே வேறு சில மரங்களும் வளர்க்கிறோம். விவசாயப் பணியாட்களை வைக்காமல் நாங்களே குடும்பமாக வேலை செய்கிறோம்” என்கிறார் நித்யா.

சேர்வகாரன்பாளையத்துக்கு இவர்கள் குடிபெயர்ந்த பிறகு 2015-ம் ஆண்டு அக்கிராமத்திலுள்ள அரசமரத்தடி விநாயகர் கோயிலில் மாலை நேரப் பயிலகத்தைத் தொடங்கியுள்ளனர். இவர்களது நோக்கத்தை அறிந்த பிறகு அப்பகுதி மக்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.

காந்தியில் இருந்து கல்வியைத் தொடங்குவோம்!

“இப்பயிலகம் தொடங்கியபோது 15 - 20 மாணவர்கள் இணைந்தார்கள். முதலில் அவர்களுக்கு என்ன தேவையோ அதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம் எனத் தீர்மானித்தோம். இப்பகுதி மக்களைப் பொறுத்தவரை இது ஒரு ட்யூஷன். எனவே முதலில் பள்ளிப்பாடங்களைக் கற்றுக்கொடுத்தோம். அதுபோக எஞ்சியிருக்கும் நேரங்களில் மற்ற செயல்பாடுகள் நோக்கி அவர்களைக் கொண்டு சென்றோம். சிறு நூலகம் அமைத்தோம். விளையாடுவதற்கான பொருள்கள் கொடுத்தோம். திரைப்படங்கள் போட்டுக்காண்பித்தோம்.

காந்தியில் இருந்து கல்வியைத் தொடங்குவோம்!

பல்வேறு துறை சார்ந்து இயங்கும் நண்பர்கள் வருகிறார்கள். நாடகப் பயிற்சி, சதுரங்கம், பறவைகளை அறிதல் எனப் பலவற்றையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். எங்கள் மகள் மகிழ்மலர் தமிழ் இசை மற்றும் கர்னாடக இசை கற்று வருகிறாள். அவள் பயிலகக் குழந்தைகளுக்கு இசை கற்றுக் கொடுக்கிறாள். இச்செயல்பாட்டின் அவசியத்தைப் புரிந்துகொண்ட இப்பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பயிலகம் நடத்த இடம்கொடுத்துள்ளார்” என்கிறார் கண்ணன்.

இத்தம்பதியினர் தங்கள் மகள் மகிழ்மலரை வீட்டுக்கல்விமுறையில் (Home Schooling) வளர்க்கிறார்கள். எல்லோருக்குமான தீர்வாக வீட்டுக்கல்விமுறையை முன்வைக்க முடியாது என்றும், தாங்கள் அதற்கான சூழலை அமைத்துக் கொண்டதாலே அது சாத்தியப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

மாற்றுக்கல்வி சார்ந்து செயல்படும் முனைப்போடு இந்தியாவில் சில ஆளுமைகளைச் சென்று சந்தித்திருக்கின்றனர். அச்சந்திப்பின் வழியே இவர்களுக்குப் பேரூக்கம் கிடைத்திருக்கிறது.

“நேர்காணல் புரிவதற்காக, காந்தியின் செயலராக இருந்த மகாதேவ் தேசாயின் மகன் நாராயண் தேசாயைச் சந்தித்தோம். அவர் வீட்டுக்கல்விமுறையில் வளர்ந்தவர் என்கிற செய்தி எங்களது முடிவுக்கு உந்துதலாக இருந்தது. நம்மாழ்வார், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்ற ஆளுமைகளைச் சந்தித்தோம். சத்தீஸ்கரில் மாற்றுக்கல்வி முயற்சியில் இயங்கும் பள்ளிகளைப் பார்வையிட்டோம். களரீதியான அனுபவங்கள் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம்” என்கிறார் கண்ணன். இறுதியாக அவர்…

“கிராமம் என்றாலே சாதியக்கட்டமைப்பு வலுவாக உள்ள இடம் என்கிற பொதுப்பார்வை உள்ளது. அதில் உண்மை இருக்கிறது என்றாலும் நகர்மயத்தால் நாம் எதிர்கொண்டு வரும் சூழலிய சீர்கேடுகளிலிருந்து மீள கிராமியப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர வேண்டும். அந்நோக்கில் சாதியத்தையும் உடைத்தெறிய வேண்டியுள்ளது” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism