Published:Updated:

`அரசுப் பள்ளி; தமிழ் வழிக் கல்வி' - தன் குழந்தைகளைச் சேர்த்த பெண் நீதிபதிக்குக் குவியும் பாராட்டு

அருண் சின்னதுரை
ஈ.ஜெ.நந்தகுமார்
வி.சதிஷ்குமார்

மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற பெண் நீதிபதி தனது 2 குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார். பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நகராட்சி உயர் நிலைப்பள்ளி
நகராட்சி உயர் நிலைப்பள்ளி ( வி.சதிஷ்குமார் )

மதுரை மாவட்டத்தில் மேலூர்ப் பகுதி நூற்றுக்கணக்கான கிராமங்களை கொண்ட பெரும் பகுதியாக இருக்கிறது. வாழை, கரும்பு, நெல் போன்ற பல்வேறு பயிர்களை விளைக்கும் விவசாய பகுதியாகும். மேலும் இங்கு கிரானைட் கனிம வளங்களும் அதிகப்படியாக இருக்கிறது. இதன் காரணமாக மேலூர் நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்த 178 கிரானைட் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கோப்புப் படம்
கோப்புப் படம்

7 வருடங்களாக கிரானைட் தொடர்பான பிரச்னைகள் எதுவுமே தீர்வு காணப்படாமல் உள்ளது. தற்போது புதிய நீதிபதியாக ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பெண் நீதிபதியான இவர் தனது இரண்டு குழந்தைகளையும் மேலூர் நகராட்சி அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.

நீதிபதி ஜெயந்தியின் குழந்தைகள் சாக்யா 7 -ம் வகுப்பிலும், அசுரன் 5 -ம் வகுப்பிலும் சேர்ந்துள்ளனர். தமிழ் வழிக்கல்வி மூலம் அரசுப் பள்ளியில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கும் பெண் நீதிபதிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ஜெயந்தியின் கணவர் சிவராஜ் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலூர் நீதிமன்றம்
மேலூர் நீதிமன்றம்

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ``மேலூருக்கு புதிதாக வந்த மாஜிஸ்திரேட் ஜெயந்தி தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் என்ற செய்தி வரவேற்கத்தக்க விஷயம். இதனால் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பிக்கை வளர்ந்துள்ளது. 7 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கிரானைட் வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தனர்.