Published:Updated:

`நலத்திட்ட உதவியா...`பிகில்' பட விளம்பரமா?' -சர்ச்சையை ஏற்படுத்திய மேலூர் அரசுப் பள்ளி விழா

பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நல்ல நோக்கத்துக்காக நடைபெற்றது. இதில் எந்தத் தவறும் நிகழவில்லை. அனைவரும் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவிகள் கையில் பிகில் பட போஸ்டர்
மாணவிகள் கையில் பிகில் பட போஸ்டர்

தமிழகம் முழுவதும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கல்விச் சீர் கொடுத்து அரசுப் பள்ளிகளை ஊக்குவிக்கின்றனர். அதேநேரம், சினிமா படத்தின் விளம்பரத்துக்காக அரசுப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் பரிசு வழங்கியபோது
மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் பரிசு வழங்கியபோது

மதுரை மாவட்டம் மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2,000-க்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புற மாணவிகள் அதிகம் படிக்கும் இந்தப் பள்ளியில் நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான `பிகில்’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும்விதமாக, விளையாட்டு உபகரணங்களை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் `கஞ்சா' கருப்பு கலந்துகொண்டார். விழாவின்போது, `பிகில்' பட போஸ்டர்களை மாணவிகள் கையில் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பரிசு பெற்ற மாணவிகள்
பரிசு பெற்ற மாணவிகள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெற்றோர்கள் சிலர், ``அரசுப் பள்ளியில் நலத்திட்டம் என்ற பெயரில் பிகில் படத்தை விளம்பரம் செய்தது வருத்தமளிக்கிறது. அந்தப் படத்தின் போஸ்டர்களைக் கையில் கொடுத்து கத்த வைத்தது, தேவையற்ற செயல். நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் தவறில்லை. ஆனால், பள்ளிகளில் சினிமா தொடர்பான விளம்பரங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக, மேலூர் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் எஸ்.பி.பாண்டியிடம் பேசினோம். ``மேலூர் அரசுப் பெண்கள் பள்ளியில் ஏழை, எளிய மாணவிகள் அதிகளவு படித்து வருகின்றனர். இங்கு நன்றாகப் படிக்கும் மாணவிகளையும் விளையாட்டுத் துறையில் சாதித்துவரும் மாணவிகளையும் ஊக்குவிக்கும் வகையில் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.

அப்போது எங்களிடம் இருந்த விஜய் போஸ்டர்களை, விஜய் சார் மீதுகொண்ட அன்பால் சில மாணவிகள் எடுத்து வைத்திருந்தனர். இதைப் பெரிதுபடுத்தி சிலர் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நல்ல நோக்கத்துக்காக நடைபெற்றது. இதில் எந்தத் தவறும் நிகழவில்லை. அனைவரும் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற காழ்ப்புணர்சியில் சிலர் தவறான தகவலை பரப்பிவருகின்றனர்" என்றார்.

`நலத்திட்ட உதவியா...`பிகில்' பட விளம்பரமா?' -சர்ச்சையை ஏற்படுத்திய மேலூர் அரசுப் பள்ளி விழா

பெற்றோர்களின் வேதனை குறித்து மதுரை சி.இ.ஓ சுவாமிநாதனிடம் பேசினோம். ``நிகழ்ச்சி தொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக விசாரிக்கிறேன்” என்றார்.