அமெரிக்காவில் அதிகரித்த மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள்... காரணம் என்ன தெரியுமா? #FauciEffect

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 50% அதிகரித்திருப்பதாக அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 18% கூடுதலாக வந்திருப்பதாகவும், இந்த மாற்றத்துக்கு `ஃபவுச்சி விளைவே (Fauci effect)' காரணம் என்று தெரியவந்துள்ளதாகவும் அந்த நாட்டின் தேசியப் பொது வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

அதென்ன `ஃபவுச்சி விளைவு?' அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர், ஆந்தனி ஃபவுச்சி. நோயெதிர்ப்பு நிபுணரான (immunologist) இவர்தான் அமெரிக்காவின் `தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் மையத்தின்’ இயக்குநராகப் (National Institute of Allergy and Infectious Diseases) பணியாற்றி வருகிறார். கொரொனோ பெருந்தொற்று காலத்தில் ஃபவுச்சி மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளும், மக்களிடையே இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வும்தான் மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டியதாகவும், இதன் காரணமாகவே அமெரிக்காவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஃபவுச்சி ஏற்படுத்திய இந்தத் தாக்கத்தின் காரணமாகவே இந்த மாற்றத்தை `ஃபவுச்சி விளைவு’ என்று அமெரிக்கர்கள் அழைக்கின்றனர்.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 50% அதிகரித்திருப்பதாக அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது, அங்குள்ள 90 மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்கு 11,000 விண்ணப்பங்கள் வந்துள்ளனவாம். பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் உள்ள 110 இடங்களுக்கு 12,024 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இது சென்ற வருடத்தைவிட 27% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இந்த விளைவுகள் ஏற்படுவதற்கு நான் காரணம் கிடையாது. கொரோனா பெருந்தொற்று தாக்கத்திற்குப் பிறகு உலகம் முழுவதிலுமே மருத்துவர்களின் சேவையை, மருத்துவத்தின் தேவையை மக்கள் மிக அதிகமாக உணர்ந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் மருத்துவப் படிப்பிற்கான மதிப்பு அதிகரித்திருக்கிறது” என்கிறார் பவுசி.
ஆனால், மருத்துவத்துறைப் பக்கம் மாணவர்களின் கவனம் அதிகம் திரும்ப வேறொரு காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, கொரோனா தாக்கம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக உச்சத்தில் இருந்தபோது மருத்துவமனைகளில் மருத்துவரின் பற்றாக்குறை அதிகம் இருந்ததும்கூட மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் அதிகம் சேர விரும்புவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் பலர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க ராணுவத்தில் இளைஞர்களும் இளைஞிகளும் அதிக அளவில் பணியில் சேர்ந்தனர். இதைப்போலவே தேசத்தின் தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் எடுத்திருக்கும் முடிவாகவும் இந்த மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்காக வந்திருக்கும் அதிக அளவிலான விண்ணப்பங்களைப் பார்க்கலாம் என்றும் அங்குள்ள கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
காரணம் எதுவாக இருந்தால் என்ன? நல்லது நடந்தால் மகிழ்ச்சி!