Published:Updated:

``12 மணி நேரப் படிப்பு... 3 அட்டெம்ப்ட்'' - யு.பி.எஸ்.சி தேர்வில் சாதித்த மலைதேசத்து மல்லிகா!

மல்லிகா
News
மல்லிகா

உயர் கல்வி வெளிச்சத்தை அதிகம் கண்டிராத, வசதியும் வாய்ப்பும் குன்றிய ஒரு கடைக்கோடி கிராமத்தில் பெண்ணாக பிறந்து, தனது வேட்கையால் இன்றைக்கு மலையுச்சி ஒளியாக உயர்ந்து நிற்கும் மல்லிகா, மலை தேசத்தின் முன்னத்தி ஏர்.

நீலகிரியின் கடைக்கோடியிலிருக்கும் கொடநாட்டிற்கு மிக அருகிலேயே இருக்கிறது கக்குளா என்ற சிறிய மலைக் கிராமம். பெயருக்கு ஏற்றார் போல் நான்கு பக்கமும் மலைகள் சூழ நடு பள்ளத்தில் நூற்றைம்பதே வீடுகள், மூன்று கோயில்கள் என பசுமை போர்த்திய அழகில் காட்சியளிக்கிறது இந்த மலைக் கிராமம்.

பெரிதாக வெளியுலக தொடர்பற்ற, தேயிலையை மட்டுமே முக்கிய வருவாய் தொழிலாக நம்பியிருக்கும் இந்தக் கடைக்கோடி கிராமத்தை ஒட்டுமொத்த தேசமும் திரும்பி பார்க்குமாறு செய்துள்ளார் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

மலை தேசத்து மக்கள் படும் பாட்டைக் கண்டு மக்கள் சேவையாற்ற ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற வேட்கையில் அயராது உழைத்து இன்றைக்கு அதை சாத்தியமாக்கியுள்ளளார்.

மல்லிகா
மல்லிகா
நாட்டின் உயரிய தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் யு.பி.எஸ்.சி தேர்வில் தேசிய அளவில் 621வது இடத்தைப் பிடித்த 26 வயதான மல்லிகாவை சந்திக்க அவரின் கிராமத்துக்குச் சென்றோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனாவாலும், மழையாலும் ஆள் நடமாட்டத்தையே வெளியில் காண முடியாத இந்த கிராமம் முழுக்க அழகிய மரங்களாலும், பறவைகளாலும் நிறைந்திருக்கிறது. தேயிலையே பிரதானம் என்பதை அறியும் வகையில் வீட்டின் அருகிலேயே தேயிலைத் தோட்டங்களும் சில ஆரஞ்சு மரங்களும் இருந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"மல்லிகாவின் வீட்டுக்கு எப்படி போகணும்?" என உள்ளூரைச்சேர்ந்த ஒருவரிடம் வழி‌ கேட்க அவர் மல்லிகாவின் வீட்டிற்கே அழைத்துச் சென்று மல்லிகாவின் அம்மாவிடம் அவரே நம்மை அறிமுகமும் செய்துவைத்தார்.

பாரம்பர்ய வழக்கப்படி வெள்ளை நிற ஆடையை போர்த்தியவாறு முகம் முழுக்க புன்னகையுடன் நம்மை வரவேற்றார். யு.பி.எஸ்.சி தேர்வில் தனது மகள் பெற்ற வெற்றியின் பூரிப்பு அவர் முகத்தில் தெரிந்தது.

மல்லிகா குடும்பம்
மல்லிகா குடும்பம்

படுகு மொழி கலந்த தமிழில் பேசிய மல்லிகாவின் அம்மா சித்ரா தேவி, "இவளுக்கு நாலு வயசு இருக்கும்போது இவ ஸ்கூலுக்கு போயிருந்தேன். அப்போ இவளோட‌ டீச்சர் சொன்னாரு. 'உங்கப்பொண்ண பாத்தா எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு. இவளே குழந்தை. ஆனால் மத்த குழந்தைகள அன்பா பாத்துக்குறா. அழுகுற குழந்தைகளோட கண்ண‌ தொடச்சிவிட்டு பக்கத்துல வச்சிக்குறா. இன்னும் சில குழந்தைகளுக்கு சாப்பிட சொல்லி கொடுக்குறா. இவளை நல்லா படிக்க வைங்க... கண்டிப்ப பெரிய ஆளா வருவா'னு சொல்லி ஒரு சின்ன குடையைப் பரிசா கொடுத்தார். இன்னமும் அந்தக் குடையைப் பத்திரமா வச்சிருக்கேன். அவர்‌ சொன்ன வார்த்தை இப்போ சொன்னது மாதிரி இருக்கு. அப்போதில் இருந்தே அவளோட இஷ்டத்துக்கு விட்டுட்டேன். நான் 27 வருஷம் நர்ஸா சர்வீஸ் முடிச்சி ரிட்டையர்டாகி ரெண்டு வருஷம் ஆச்சு. அவரோட சேர்ந்து டீ தோட்டத்தைப் பாத்துக்குறேன். எங்க ஏரியால முதல் ஆளா இவ பாஸ் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு. யார் எந்த உதவினு கேட்டாலும்‌ யோசிக்காம செய்வா. பெரிய பதவிக்கு வந்து கஷ்டப்படுற எல்லாத்துக்கும் உதவி செய்யணும். அதுதான் எங்களுக்கு சந்தோஷம்" என நெகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மாவைப் போலவே வெள்ளைநிற ஆடையை போர்த்தியபடி மகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசத்துவங்கிய மல்லிகா, "எனக்கு தாய்மொழி படுகா இருந்தாலும் தமிழ் நல்லா கத்துக்கிட்டேன். இந்த மாவட்டத்துல இருந்து இப்போதான் நிறைய பொண்ணுங்க வெளியே படிக்கப் போறாங்க. கோத்தகிரி அப்புறம் குன்னூர்ல ஸ்கூல் முடிச்சேன். சயின்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட். அதனால, அக்ரி படிக்கலாம்னு கோயம்புத்தூர் அக்ரி காலேஜ்ல 2011-ல சேர்ந்தேன். அங்கதான் எனக்கு யு.பி.எஸ்.சி எக்ஸாம் பத்தி தெரிய வந்துச்சு. அதுமேல ரொம்ப ஆர்வம் ஏற்பட நானும் ஐ.ஏ.எஸ் ஆகணும்னு முடிவு பண்ணேன். அப்போவே ஈவ்னிங் டைம்ல எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிட்டேன். 2015-ல காலேஜ் முடிஞ்சதும் எதைப்பற்றியும் யோசிக்காம நேரா சென்னைக்கு கிளம்பிட்டேன். அங்க ஒரு கோச்சிங் சென்டர்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். முழு நேரமும் படிப்பு ஒன்னுதான் என்னோட வேலையா இருந்துச்சு. குறைஞ்சது ஒரு நாளைக்கு 12 மணி நேரமாவது படிப்பேன். அஞ்சு வருஷ உழைப்புல இப்போ யு.பி.எஸ்.சி எக்ஸாம் பாஸ் பண்ணி 621வது ரேங்க் வாங்கியிருக்கேன்.

மல்லிகா
மல்லிகா

இந்த எக்ஸாம்ல ஃபஸ்ட் ஸ்டேஜான ப்ரிலிம்ஸ் (prelims) தாண்டவே எனக்கு மூணு அட்டெம்ப்ட் தேவைப்பட்டுச்சு. ரெண்டு முறை தோல்வி அடைஞ்சதும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, நிறையப் பேர் கொடுத்த ஊக்கத்தால அடுத்த தேர்வுல எப்படி பாஸ் பண்றது, எதுல கவனம் செலுத்தணும்ங்கறதைப் பத்தி யோசிக்க‌ ஆரம்பிச்சேன். கூடுதலா இன்னும் கொஞ்சம் உழைப்பைப் போட்டு இப்போ பாஸ் பண்ணிருக்கேன். யார் இந்த எக்ஸாம் எழுத வந்தாலும் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத்தன்மை இது மூணுமே கட்டாயம் இருக்கணும்.

நான் 621-வது ரேங்க் எடுத்து இருக்கறதால ஐ.ஏ.எஸ் கிடைக்குமான்னு தெரியல. அதனால எந்த சர்வீஸ் வந்தாலும் அதை மனதார ஏத்துக்கிட்டு, அடுத்து ஐ.ஏ.எஸ் கனவைத் தொடருவேன்.

எனக்கு என்னோட அம்மா அப்பா ரொம்ப சப்போட்டா இருந்தாங்க. எந்த கேள்வியும் கேக்கல. கல்யாணம் பண்ணிக்கோ அது இதுனு எந்த டார்ச்சரும் செய்யல. உன்னோட இஷ்டத்துக்கு படினு சொல்லிட்டாங்க. அதுவே எனக்கு ரொம்ப சப்போட்டா இருந்துச்சு.

மல்லிகா குடும்பம்
மல்லிகா குடும்பம்

ஆர்வம் இருக்குற நெறைய பேத்த எக்ஸாம் எழுத வைக்கணும். இப்போ ஆன்லைன்ல மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். நிச்சயமா ஒரு நாள் ஐ.ஏ.எஸ் ஆவேன்" என முடித்தார் மல்லிகா.

அதுவரை அமைதியாகவே நின்றுக்கொண்டிருந்த மல்லிகாவின் அப்பா சுந்தர் சொன்னார். "நான் பெருசா எதும் படிக்கல. இந்த டீ தோட்டத்த விட்டா எனக்கு எதும் தெரியாது. என் பொண்ண நெனச்சி நான் ரொம்ப பெருமை பட்ற விஷயம் ஒன்னுதான். அது தைரியம். எந்த வசதியும் இல்லாத இந்த கிராமத்துல பொறந்து சென்னை, டெல்லினு எந்த பயமும் இல்லாம போவா. இன்டர்வியூக்கு எங்களையும் டெல்லிக்கு கூட்டிட்டுப்போனா. அத மறக்கவே முடியாது சார்" எனப்பேசி முடிக்கும்போது அவர் கண்களில் கண்ணீர் அரும்புகிறது.