Published:Updated:

``விழித்திறன் இல்லையே என்கிற வலி எனக்கில்லை!''- கலெக்டராகும் பூரண சுந்தரி

பூரண சுந்தரி
பூரண சுந்தரி

"மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்!"- சிவில் சர்விஸ் தேர்வில் சாதித்த விழித்திறன் சவால் கொண்ட பூரண சுந்தரி!

"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத என் அம்மா அப்பாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர்களும் வெற்றி பெற்று விடுவார்கள். எனக்கு பாடங்களை படித்துக் காட்டி படித்துக்காட்டி அந்தளவுக்கு அவர்களும் தயாராகி விட்டார்கள்.'' என்று, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பூரணசுந்தரி தன் பெற்றோரைக் காட்டி நெகிழ்கிறார்.

தற்போது முடிவு அறிவிக்கப்பட்ட 2019-ம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வு முடிவில் 286-ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த பூரணசுந்தரி விழித்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி.

5 வயதில் திடீரென்று பார்வை இல்லாமல் போக சிறுமியான பூரணசுந்தரிக்கு அந்த குறைபாடு தெரியாமல் விழிகளாக மாறினார்கள் அவரின் பெற்றோர்.

பூரண சுந்தரி குடும்பம்
பூரண சுந்தரி குடும்பம்

அவர்களின் அர்ப்பணிப்பு பூரணசுந்தரியின் ஆர்வம் இன்று அவரை இந்திய ஆட்சிப் பணி செய்ய வாய்ப்பளித்துள்ளது.

மதுரை சிம்மக்கல் பகுதியில் பழைய மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் பகுதியில் அமைந்துள்ள பூர்ணசுந்தரியின் சிறிய வீட்டுக்கு பல பெரிய மனிதர்கள் வந்து வாழ்த்து சொல்லி விட்டுப் போகிறார்கள். தெரிந்த தெரியாத பலரின் அலைபேசி வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்த பூரணசுந்தரிக்கு விகடன் சார்பில் வாழ்த்துகள் சொல்லிப்பேசினேன்.

"நான் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தபோது விகடனிலிருந்து என்னைப் பாராட்டி அப்போது செய்தி வெளியிட்டார்கள். அப்போதிருந்து இதுபோன்ற வாழ்த்துகளும் உற்சாகப்படுத்தலும்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது" என்று கலகலவென்று பேசுபவரிடம் இக்காலத் தலைமுறையினர் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன.

"இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?"

பூரண சுந்தரி
பூரண சுந்தரி

"மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய வளர்ச்சிக்காக வாழ்க்கையில் பல நாட்களை அர்ப்பணித்த என் பெற்றோருக்கும், நான் எதிர்பார்த்த இலக்கை அடையவேண்டும் என்று விரும்பிய நண்பர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளேன். இந்த நேரத்தில் நான் தேர்வுக்கு தயாராக நிதி உதவி செய்த நாகர்ஜுனா சார் மற்றும் என்னுடன் பயின்ற மற்ற மாணவர்களுக்கும், பள்ளி, கல்லூரியில் என் மீது அக்கறை எடுத்துக்கொண்ட ஆசிரியர்களுக்கும், பயிற்சி மையத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்."

``12 மணி நேரப் படிப்பு... 3 அட்டெம்ப்ட்'' - யு.பி.எஸ்.சி தேர்வில் சாதித்த மலைதேசத்து மல்லிகா!

"பள்ளியில் படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதா?"

"லேடி டோக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தாலும் தமிழ்ப் பேராசிரியர் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். அந்தளவுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வம். சிறு வயதில் விஞ்ஞானி ஆக வேண்டும் என்கிற ஆசையிருந்தது. மதுரை கலெக்டராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், சகாயம் ஐ.ஏ.எஸ் ஆகியோர் இருந்தபோது அவர்கள் மாவட்டத்தில் எடுத்த நடவடிக்கைகளைப் பார்த்து மக்கள் பணி செய்ய ஐ.ஏ.எஸ் படிப்பதே சரியானது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை என் பெற்றோரிடம் தெரிவித்ததும், அதற்கு எப்படி தயார் ஆக வேண்டும் என திட்டமிட ஆரம்பித்தனர். பல புத்தகங்களை வாங்கிக் கொடுத்து என்னை தயார்படுத்தினர்."

பூரண சுந்தரி குடும்பம்
பூரண சுந்தரி குடும்பம்

"போட்டித் தேர்வுக்கு எப்போதிருந்து தயாரானீர்கள்?"

"2016-லிருந்து படிக்க ஆரம்பித்தேன். அம்மாவும் அப்பாவும் சொல்லித்தரும் பாடங்களை நன்கு கவனித்து கற்றுகொண்டதால் போட்டித் தேர்வுகளில என் தாய் தந்தையரே எனக்கு ஆசிரியராகவும் மாறினர். ஆரம்பத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், அந்தத் தோல்விகள் என்னை சோர்வடையச் செய்யவில்லை. வங்கிக்கான போட்டித்தேர்வு எழுதி 2018-ல் வெற்றி கிடைத்தது. சிவில் சர்வீஸ் தேர்வுதான் இலக்கு என்றாலும் பல்வேறு போட்டித் தேர்வுகளையும் எழுதினேன். அது இன்னும் பயிற்சியை அளித்தது."

"தற்போது நீங்கள் எடுத்த ரேங்க்கில் ஐ.ஏ.எஸ் கிடைக்க வாய்ப்புள்ளதா?"

"கிடைக்க வாய்ப்புள்ளது என்றே நினைக்கிறேன்."

பூரண சுந்தரி
பூரண சுந்தரி

"நீங்கள் கலெக்டராகும் பட்சத்தில் என்ன மாதிரியான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?"

"இந்திய ஆட்சிப்பணியில் மக்களுக்குத் திட்டங்களை நேரடியாக கொண்டு சேர்க்கவும் ஏழை எளிய மக்களுக்கு உதவவும் சரியான வாய்ப்பு உள்ளது. கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். எளிய மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அதற்கு ஐ.ஏ.எஸ் பதவி வழி ஏற்படுத்தும்."

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பூரணசுந்தரியின் தந்தை முருகேசன், தாயார் ஆவுடை தேவியிடம் பேசினேன். "5 வயது வரை அவர் எல்லாக் குழந்தைகளையும் போலத்தான் இருந்தார். முதல் வகுப்பு பயிலும்போது போர்டில் எழுதிப்போடுவது தெரியவில்லை என்று சொன்னபோதுதான் பார்வைக் குறைபாடு ஏற்பட்டதை அறிய முடிந்தது. பல கண் மருத்துவமனைகளில் காட்டியும் சரி செய்ய முடியவில்லை. நாங்கள் வேதனை அடைந்தாலும் அந்த வேதனையை அவர் படக் கூடாது என்ற முடிவோடு அந்த குறையே தெரியாத வகையில் வளர்த்தோம். படிப்பில் ரொம்ப ஷார்ப்பாக இருப்பார்.

தன்னம்பிக்கையோடு வளர்த்தோம். முதல் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று வந்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்னும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1092 மதிப்பெண்ணும் பெற்று கல்லூரியில் ஆங்கில இலக்கியம் எடுத்தார்.

பூரண சுந்தரி குடும்பம்
பூரண சுந்தரி குடும்பம்

அப்போதுதான் தான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும், அதற்கு படிக்க வேண்டும் என்கிற விருப்பத்தைச் சொன்னார். உடனே நாங்கள் மறுப்பேதும் சொல்லவில்லை. அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தோம். 2016-ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு, வங்கி போட்டித் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு என அனைத்து போட்டித் தேர்வுகளையும் தளராமல் எழுதினார். போட்டித் தேர்வுகளில் தோல்வி அடைந்தாலும் சோர்ந்து போகாமல் நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவேன் என்பார். 2018-ம் ஆண்டு வங்கித்தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி வங்கியில் பணிக்கு சேர்ந்தார். அங்கிருந்தபடிதான் மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்து வந்தார். பயிற்சி மையங்களுக்கு செல்ல விடுப்பு எடுக்கும்போது வங்கியில் சம்பளம் பிடித்தம் செய்து விடுவார்கள். அந்த கஷ்டத்தையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் பயிற்சி எடுத்தார். அதற்கெல்லாம் பலன் அளிக்கும் வகையில் இந்த ரிசல்ட் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. பெற்ற பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தோம்" என்றனர்.

தற்போது பூரணசுந்தரியின் தம்பி சரவணனும் சிவில் சர்விஸ் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு