Published:Updated:

6 மணி நேர வேலை... இரவு முழுவதும் படிப்பு... +2-வில் சாதித்து கேரளாவை நெகிழவைத்த தமிழ்மகன்!

குடும்பதினருடன் ஜெயசூர்யா
குடும்பதினருடன் ஜெயசூர்யா

கேரள மாநில பொதுத்தேர்வு முடிவுகளில், எல்லா பாடங்களிலும் 'A' கிரேட் எடுத்த முதல் தமிழன் என்ற பெருமையைப் பெறுகிறார் ஜெய சூர்யா.

" 'படிப்பு மட்டும்தான் எதிர்காலத்தை மாத்தும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நான் எடுத்திருக்க மார்க் என் குடும்பத்தோட தலையெழுத்தையே மாத்தப்போகுது. இன்னும் சில வருஷங்களில் என்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா பார்ப்பீங்க" - உற்சாகம் பொங்க பேசுகிறார் ஜெயசூர்யா. கேரள மாநில பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், எல்லா பாடங்களிலும் 'A' கிரேட் எடுத்திருக்கிறார் ஜெய சூர்யா. இது தொடர்பாக கேரளா மாநிலம் கோட்டக்கல்லில் வசிக்கும் ஜெயசூர்யாவை தொடர்புகொண்டு பேசினோம்.

ஜெய சூர்யா
ஜெய சூர்யா

"ரொம்ப சந்தோஷமா இருக்கு. அரசுப் பள்ளியில்தான் படிச்சேன். என்னோட குடும்ப சூழலில் ஸ்கூல் படிக்கிறதே சவாலாதான் இருந்துச்சு. காலேஜ் படிக்க வாய்ப்பு இருக்குமான்னு தெரியாமதான் இருந்தேன். இப்போ நல்ல மார்க் எடுத்துருப்பதால் உதவிகள் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு" - கேரளாவில் வசித்து வந்தாலும் மலையாள வாசனையில்லாத அழகு தமிழில் பேசுகிறார் ஜெயசூர்யா.

’’விழுப்புரத்துக்குப் பக்கத்துலதான் எங்களுக்கு சொந்த ஊரு. குடும்பப் பிரச்னை காரணமா, எங்க அம்மா, அப்பா கேரளாவுக்கு வந்து 16 வருஷம் ஆச்சு. வாழ்க்கையில ஜெயிக்கணும்ங்கிற வைராக்கியத்தோட வாழ்க்கையைத் தொடங்குனாங்க. அப்பா கூலி வேலை பார்த்துட்டு இருந்தாங்க. எதிர்பாராத விதமா 14 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு விபத்து நடந்துச்சு. அந்த விபத்தில் கடும் போராடத்துக்குப் பிறகு அப்பா உயிர் பிழைச்சாலும், கை, கால் செயல் இழந்துபோச்சு. அவங்களோட தனிப்பட்ட வேலையைக் கூட, யாராவது செஞ்சுவிடணுங்கிற சூழல். குடும்பத்துக்கு இருந்த ஒரே வருமானமும் போச்சு. அப்பா சரியாகிருவாங்கனு சிலமாசம் பொறுத்திருந்து பார்த்தோம். சாப்பாடுக்கே வழியில்லைனு ஆகும் போது, வெளியுலகமே தெரியாத எங்க அம்மா வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க.

ஜெய சூர்யா
ஜெய சூர்யா

பாஷை தெரியாத இடத்துல இருந்து கஷ்டப்படுறதுக்கு பதிலா சொந்த ஊருக்கே போயிருங்கனு நிறைய பேர் சொன்னாங்க. வாழ்க்கையில் ஜெயிச்சுட்டுதான் ஊருக்கு போகணும்னு அம்மா வைராக்கியமா இருந்தாங்க. அம்மா படிக்கல. அதனால் வீட்டுவேலைதான் கிடைச்சுது. ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வேலை செய்வாங்க. காலையில அஞ்சு மணிக்கு வேலைக்கு போறவங்க, ராத்திரி 8 மணிக்கு வந்து திண்ணையில் சாயுறதை பார்க்கும்போது, அவ்வளவு கஷ்டமா இருக்கும். எத்தனையோ நாள் அம்மாவுக்கு தெரியாம அழுதுருக்கேன். விவரம் தெரிஞ்ச பிறகு, அம்மாபடுற கஷ்டத்தை பார்த்துட்டு சும்மா இருக்க முடியல. நான் ஸ்கூல் போகலம்மா. வேலைக்கு போயி உன்ன பாத்துக்கிறேன். நீ வீட்டுல இருனு சொல்லுவேன். என்னை கட்டிபிடிச்சுட்டு அம்மா அழுவாங்க." - கண்களில் கண்ணீர் அரும்ப குரல் தழுதழுத்து அமைதியாகிறார் ஜெயசூர்யா.

’’அப்பாவோட மெடிக்கல் செலவு, என் படிப்பு செலவு, சாப்பாட்டு செலவுனு தேவைகள் அதிகரிக்க, அதிகரிக்க அம்மா இன்னும் அதிக நேரம் வேலை செய்ய ஆரம்பிச்சாங்க. அம்மா எவ்வளவோ தடுத்தும், ஆறாம் வகுப்பு படிக்கிற காலத்துலருந்து நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். ஸ்கூல் விட்டு வந்ததும், ஹோட்டல்களில் கிளினர் வேலை, வீடுகளுக்கு மளிகை சாமான் வாங்கிக்கொடுக்கிறதுனு நாலு மணிநேரம் வேலை செய்வேன். 20 ரூபாய் கிடைக்கும். எங்க அம்மா நல்ல புடவை உடுத்தி கூட நான் பார்த்தது இல்ல. நான் சம்பாதிச்ச காசுல, என் அம்மாக்கு ஒரு புடவை வாங்கிக்கொடுத்தது தான் என்னோட வாழ்நாள் சாதனையா நினைக்கிறேன்"- ரேகை தேய்ந்த தன் அம்மா, கோவிந்தம்மாளின் கைகளைப் பற்றிக்கொள்கிறார் ஜெயசூர்யா.

தந்தையுடன் ஜெய சூர்யா
தந்தையுடன் ஜெய சூர்யா

"பொதுவா கேரளாவில் தமிழர்களை நிறையவே கேலி, கிண்டல் செய்வாங்க. நான் கடைகளில் வேலை செஞ்சதால், சின்ன வயசுல யாருமே என்னை விளையாட கூட சேர்த்துக்க மாட்டாங்க. புரியாத மொழியில் கிண்டல் பண்ணுவாங்க. அம்மாகிட்ட ஓடிவந்து அழுவேன். 'நீ நல்லாபடி... எல்லாரும் உன்ன விளையாட்டுக்கு சேர்த்துப்பாங்க'னு சொல்லுவாங்க. வீட்டுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் என்னோட மார்க் குறைஞ்சதே இல்ல. வயசு அதிகரிக்க, அதிகரிக்க ஆறுமணிநேரம் வேலை செய்ய ஆரம்பிச்சேன். சம்பளமும் நிறைய கிடைக்க ஆரம்பிச்சுது.

'ப்ளஸ் டூ வந்துட்ட, இந்த ஒரு வருஷமாவது வேலைக்கு போகாம படி'னு அம்மா சொன்னாங்க. மனசு கேட்கல. தொடர்ந்து வேலைக்கு போயிட்டுதான் இருந்தேன். பார்ட் டைம் வேலை பார்க்கிறதால் காலையில் ரெண்டு மணிநேரம்தான் படிக்க நேரம் இருக்கும். சில நாள் ஹோம் வொர்க் பண்ணாம ஸ்கூலில் திட்டு வாங்குனதும் உண்டு. ஆனா, எதையுமே அம்மாகிட்ட காட்டிக்க மாட்டேன். நோட் வேணும், புக் வேணும்னு அம்மாவை கஷ்டப்படுத்தினதும் கிடையாது. நோட்ஸ் தேவைப்பட்டா, ஃப்ரெண்ட்ஸ்கிட்ட வாங்கி நைட்ல படிச்சுட்டு கொடுத்துருவேன். பை, வாட்டர் பாட்டிலெல்லாம் கூட புதுசு வாங்கி பயன்படுத்துனது கிடையாது. அதுக்கு ஆசைப்பட்டதும் கிடையாது" என்கிற ஜெயசூர்யா, ரிசல்ட் வெளியான நிமிடங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

பெற்றோருடன் ஜெய சூர்யா
பெற்றோருடன் ஜெய சூர்யா

"நல்ல மார்க் வரும்னு எதிர்பார்த்தேன். எல்லாத்துலையும் 'ஏ' கிரேட்ங்கிறது நானே நினைச்சுப் பார்க்காத ஒன்னுதான். ரிசல்ட் வெளியான நிமிஷம் கனவு மாதிரி இருந்துச்சு. அம்மா அழுதுக்கிட்டே கட்டி பிடிச்சுக்கிட்டாங்க. உண்மையை சொல்லணும்னா, கொரோனா வந்ததிலிருந்து அம்மாக்கும் எனக்கும் வேலையே இல்ல. சாப்பாடுக்கே கஷ்டமான நிலைமைதான். காலேஜ் அப்ளிகேஷன் வாங்க கூட என்ன பண்ணனும்னு தெரியாம இருந்தேன்.

நிறைய மார்க் எடுத்ததால் நிறைய பேர் பாராட்டுனாங்க. சிலர் படிப்புக்கு உதவி செய்வதாவும் சொல்லிருக்காங்க. இப்போதைக்கு ஆங்கில இலக்கியம் படிக்கணும்னு முடிவு பண்ணி வெச்சுருக்கேன். காலேஜ் சேர்ந்ததும், சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு படிக்குற திட்டம் வெச்சுருக்கேன்.

தேர்வு முடிவுகள்
உங்கள் பண்புகளை எடைபோடாது!

வாழ்க்கையை ஜெயிச்சுட்டு சொந்த ஊருக்கு போகணுங்கிற அம்மாவோட ஆசையை நிறைவேற்றுற கடமை எனக்கு இருக்கு. படிப்பு எங்க எதிர்காலத்தை மாத்துங்கிற நம்பிக்கையோட காத்திருக்கேன்." கண்கள் மிளிர சொல்கிறார் ஜெயசூர்யா.

அடுத்த கட்டுரைக்கு