Published:Updated:

MBBS: “மருத்துவக் கல்வியில் தமிழ் மீடியம் கொண்டு வரத் திட்டம் ”- அமைச்சர் மா.சுப்ரமணியன்

இந்தி எம்.பி.பி.எஸ் பாடப்புத்தகங்களைக் குறிப்பிட்டு மருத்துவக் கல்வியில் தமிழ் மீடியத்தைக் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார் அவர்.

MBBS: “மருத்துவக் கல்வியில் தமிழ் மீடியம் கொண்டு வரத் திட்டம் ”- அமைச்சர் மா.சுப்ரமணியன்

இந்தி எம்.பி.பி.எஸ் பாடப்புத்தகங்களைக் குறிப்பிட்டு மருத்துவக் கல்வியில் தமிழ் மீடியத்தைக் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார் அவர்.

Published:Updated:

சென்னை ஓமந்தூரார் அரசுத் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வலி மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை மையத்தைக் கடந்த திங்கள்கிழமை திறந்து வைத்தார் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு தொடங்கி தமிழ் வழியில் மருத்துவக் கல்வி வரை பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினார். "மருத்துவக் கல்வியில் தமிழ் வழிக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், சென்னையில் தமிழ் வழிக் கல்வியாக மருத்துவக் கல்லூரி தொடங்க நிச்சயம் முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார். அதுமட்டுமன்றி எம்.பி.பி.எஸ் பாடப்புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்றுவருவதாகவும், மொழியியல் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அப்பாடப்புத்தகங்களை முதல்வர் வெளியிடுவார்” என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியில் தமிழ் வழிக் கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்றும், சென்னையில் தமிழ் வழியில் படிப்புகளை வழங்கும் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஓராண்டிற்கு முன்னரே வைக்கப்பட்டன. மேலும் தொண்டியார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 16 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கோரியிருந்தார். ஆனால் அது தமிழ் மொழியில் அமையுமா என்ற கேள்வி இருந்துவருகிறது. அதற்குப் பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அறிமுகப்படுத்திய இந்தி எம்.பி.பி.எஸ் பாடப்புத்தகங்களைக் குறிப்பிட்டு  ’மருத்துவக் கல்வியில் தமிழ் மீடியத்தைக் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

மேலும், ``மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் முதலில் மத்திய அரசிடம் இருந்து மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் மருத்துவக் கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் என ஆறு மாவட்டங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், அவற்றிற்கு அனுமதி கிடைத்தவுடன், சென்னையில் தமிழ் வழிக் கல்வியாகக் கொண்டு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதாகவும் கூறினார்.