அரசியல்
Published:Updated:

இது அரசுப் பள்ளிகளுக்குத் திரும்பும் காலம்!

செங்கோட்டையன்
பிரீமியம் ஸ்டோரி
News
செங்கோட்டையன்

பெற்றோர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளுமா அரசு?

பட்டுப்போன மரமொன்று, பெரும் மழைக்குப் பிறகு துளிர்த்தால் எப்படியிருக்கும்? அப்படியான ஓர் அதிசயம் பள்ளிக் கல்வித்துறையில் நிகழ்ந்திருக் கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் முண்டியடித்து தங்கள் குழந்தைகளுக்கு அட்மிஷன் போட்டுவருகிறார்கள். தனியார் ஆங்கிலப் பள்ளிகள்மீது மோகத்திலிருந்த பெரும்பான்மையான பெற்றோர்கள், குழந்தைகளை அரசுப் பள்ளிக்குக் கைபிடித்து அழைத்துவரும் காட்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஹவுஸ்ஃபுல் போர்டு வைக்காத குறையாக, பல பள்ளிகளில் சேர்க்கைக்கு இடமில்லாத சூழல். நிச்சயமாக அரசுப் பள்ளிகளுக்கு இது ஒரு பொற்காலம்தான்.

கொரோனா பிரச்னையால் ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. `அதிகரித்துவரும் தொற்றால், பள்ளிகள் திறப்பு குறித்து அரசால் முடிவெடுக்க முடியவில்லை. கொரோனா தொற்று முழுமையாக நீங்கிய பிறகுதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க முடியும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லையென்றாலும், ஆகஸ்ட் 17-ம் தேதியிலிருந்து பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பித்து கனஜோராக நடந்துவருகிறது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பிலுள்ள 200 இருக்கைகளுக்கு 500 மாணவர்கள் சேர முயன்று, 300 பேர் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பியிருக்கிறார்கள். ``சென்னை மற்றும் வெளியூர்களி லிருந்து டி.சி-யோடு எங்கள் பள்ளியில் சேர அதிக மாணவர்கள் வருகிறார்கள். பள்ளியில்தான் இடமில்லை” என்கிறார் பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர்.

இது அரசுப் பள்ளிகளுக்குத் திரும்பும் காலம்!

திருப்பூர், பூலுவபட்டி மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் இதுவரை 168 பேர் புதிதாக அட்மிஷன் போட்டிருக்கிறார்கள். 59 பேர் முதல் வகுப்பில் சேர்ந்திருக் கிறார்கள். தனியார் பள்ளிகளி லிருந்து வெளியேறி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 3, 4, 5-ம் வகுப்புகளில் சேர்ந்திருக்கிறார்கள். திருச்சி, பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இதுவரை புதிதாக 275 மாணவர்கள் அட்மிஷன் போட்டிருக்கின்றனர். இங்கும் தனியார் பள்ளிகளிலிருந்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஈரோடு, எஸ்.கே.சி சாலையிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படித்த 10 மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். இவையெல்லாம் மிகச் சிறிய உதாரணங்கள்தான். இப்படி, தமிழகம் முழுக்க அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது.

அரசுப் பள்ளிகள்மீது பெற்றோர்களின் பார்வையைத் திருப்பியதில் கொரோனாவுக்கு பெரிய ரோல் இருக்கிறது. கொரோனாவால் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாகக் கூறி, தனியார் பள்ளிகள் வழக்கமான வசூல் வேட்டையை நடத்தின. கொரோனா நெருக்கடி யிலும் தனியார் பள்ளிகள் `கறார்’ காட்டியது, பெற்றோர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக் கிறது. ஏற்கெனவே நகையை அடகுவைத்து, வட்டிக்குக் கடன் வாங்கி குழந்தைகளைப் படிக்கவைத்த பெற்றோர்கள், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ‘குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் என்ன?’ என்ற மனநிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள். சூழல் நெருக்கடியால் நிகழ்ந்திருக்கும் இந்த மாற்றம், கல்வித் தரத்தாலும் நன்னம்பிக்கையாலும் நாளை தொடர வேண்டும். அதற்கான நம்பிக்கைக்கீற்றுகள் வெளிப்படுகின்றன.

பொருளாதாரச் சிக்கலில்லாத பலரும்கூட இன்று அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்துவருகின்றனர். ‘என் புள்ளைய அரசுப் பள்ளியில் சேர்த்தா மற்ற பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிமீது நம்பிக்கை வரும்’ எனத் தனியார் பள்ளியில் படித்துவந்த மகனை அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்திருக்கிறார் கோவை செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி தமிழாசிரியர் ஜாஸ்மின் விக்டோரியா. நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டாரக் கல்வி அலுவலராக இருக்கும் கார்த்திக், அவருடைய மகள் அனன்யாவை ‘நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி’யில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், மாரந்தை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆறு மாணவர்கள் மட்டுமே இருக்க, பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த ஊராட்சியின் தலைவர் திருவாசகம், தனியார் பள்ளியில் படித்துவந்த அவருடைய இரண்டு குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்க்க, அவரைப் பின்பற்றி தனியார் பள்ளிகளில் படித்துவந்த 10 குழந்தைகள், அந்த அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி அரசுப் பள்ளிகளை நோக்கிய பெற்றோர்களின் வருகை ஆரோக்கியமானதாக இருக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், ‘‘வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் அரசுப் பள்ளிகளில் சுமார் நான்கு லட்சம் அட்மிஷன்கள் நடைபெறும். இந்த ஆண்டு இதுவரை 5.50 லட்சம் அட்மிஷன்கள் நடைபெற்றிருக்கின்றன. இன்னும் கூடுதலான மாணவர்கள் சேருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன’’ என்றார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அவருடைய கோபிசெட்டி பாளையம் தொகுதியிலுள்ள காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சமீபத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். இந்தத் தகவல் நமக்குத் தெரியவர, அந்தப் பள்ளிக்குச் சென்றோம். அட்மிஷன் போட்ட மாணவர்க ளுக்குப் புத்தகம், பை உள்ளிட்டவற்றை வழங்கிய அமைச்சர் மாணவர்களிடையே உரையாடி உற்சாகமூட்டினார்.

இது அரசுப் பள்ளிகளுக்குத் திரும்பும் காலம்!

செங்கோட்டையனிடம் பேசினோம். ‘‘தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆங்கிலவழிக் கல்வி, ஸ்மார்ட் கிளாஸ், ஹை-டெக் லேப், தரமான பாடப் புத்தகங்கள், இலவச லேப்டாப், சைக்கிள் என அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து நம் அரசு செய்துவருகிறது. கடந்த ஆண்டைவிட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிக அளவில் இருக்கிறது. அரசுப் பள்ளியின் தரம், தேர்ச்சி விகிதம் உயர்ந்திருப்பது, மக்களுக்கு அரசுப் பள்ளிகள் மீதான பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அடிப்படைத் தேவைகளான வகுப்பறை, கழிப்பறை, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு, போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்கள் சிறப்பாகக் கல்வி கற்க ஏதுவான சூழல் உருவாக்கப்படும்” என்றார்.

அரசுப் பள்ளியை நோக்கி வரும் மாணவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற அரசு என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்வியைக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் வைத்தோம். ‘‘கொரோனா சூழலில் அரசு மருத்துவர்கள், அரசு ஊழியர்களின் செயல்பாடுகள் மக்களிடையே பெரும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றன. பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தாமாக முன்வந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்திவருகிறார்கள். மக்கள் இதை உணர்ந்ததன் விளைவே அரசுப் பள்ளிகளுக்கு அதிக அளவு மாணவர்களைக் கூட்டிவந்திருக்கிறது.

ஒரு இஸ்ரோ சிவனையும், மயில்சாமி அண்ணாதுரையையும் தனியார் பள்ளிகள் உருவாக்கவில்லை. அரசுப் பள்ளியால்தான் அது சாத்தியமாகும்.

தரமான வகுப்பறைகள், போதுமான ஆசிரியர்கள், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு போன்றவற்றை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அமைச்சர், பள்ளிக்கல்விச் செயலாளர், இயக்குநர் உள்ளிட்டோர் மாதம் ஓர் அரசுப் பள்ளிக்காவது விசிட் அடிக்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதை மட்டுமல்லாமல் ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்வதையும் அமைச்சர் கேட்க வேண்டும்’’ என்றார்.

மக்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மனமாற்றத்தை தன் செயல்பாட்டால் அரசு தக்கவைத்துக்கொள்ள வேண்டும்!