Published:Updated:

நாகை: சுமைதூக்கும் தொழிலாளியின் மகள் மருத்துவராகிறார்... நிதி உதவிய நல்லுள்ளங்கள்!

சுமைதூக்கும் தொழிலாளி மகள் மருத்துவராகிறார் -
சுமைதூக்கும் தொழிலாளி மகள் மருத்துவராகிறார் -

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை அரசு ஏற்குமென்றாலும், இந்த மாணவிக்கு புத்தகம், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்குக்கூட பணமில்லை.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ பயின்ற, பட்டியலின, சுமைதூக்கும் தொழிலாளியின் மகள், தமிழக அரசு கொண்டு வந்த இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளால், மருத்துவக் கல்லூரியில் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளாா்.

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு (கீழக்காடு) பகுதியைச் சோ்ந்தவா் செல்வராசு. பாா்வை குறைபாடுள்ள சுமைதூக்கும் தொழிலாளி. இவரின் மனைவி பானுமதி, தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளி. பட்டியலினத்தைச் சோ்ந்த இவா்களின் மகன் சூரியபிரகாஷ், டி.எம்.இ முடித்துள்ளாா்.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

இந்தக் குடும்பத்தினா், கஜா புயலில் சேதமடைந்த குடிசை வீட்டைச் சீரமைக்க முடியாமல், நெகிழிப் பாயால் மறைத்து வசித்து வருகின்றனா். இந்த வீட்டிலிருந்து இவர்களின் மகள் லட்சுமிபிரியா, 7 கி.மீ தொலைவிலுள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், அரசு அளித்த மிதிவண்டியில் சென்று படித்து, ப்ளஸ் டூ அரசு பொதுத்தோ்வில் 461 மதிப்பெண்கள் பெற்றார்.

சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்துவந்த லட்சுமிபிரியா, 'நீட்’ தோ்வு எழுதி 185 மதிப்பெண்கள் பெற்றாா். பின்பு அரசுப் பள்ளி மணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்ட 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் இரண்டாம்  கட்ட அரசு மருத்துவக் கலந்தாய்வில் வாய்ப்பு பெற்ற அவருக்கு, சென்னை முத்துக்குமரன் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசு ஏற்கும் என்றாலும், இந்த மாணவிக்கு படிப்பதற்கான புத்தகம், தனது கிராமத்திலிருந்து சென்னை சென்று வர பேருந்துக் கட்டணம், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 50,000 செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது.

இந்த செலவுகளைச் செய்ய லட்சுமிபிரியாவின் பெற்றோரால் இயலாத காரணத்தால், அவர் தனது மருத்துவப் படிப்பு கனவாகவே சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தார்.

இந்தச் செய்தி அறிந்த ஆனந்தம் அறக்கட்டளையினர் முதல்கட்டமாக ரூ. 40,000 வழங்கி லட்சுமிபிரியாவுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர். தொகுதி எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனும் தன் பங்குக்கு ரூ.15,000 கொடுத்து உதவியிருக்கிறார்.

சுமைதூக்கும் தொழிலாளி மகள் மருத்துவராகிறார்
சுமைதூக்கும் தொழிலாளி மகள் மருத்துவராகிறார்

"ஃபீஸு கவர்மென்ட்டுல கட்டிடுவாங்க. இருந்தாலும் ஒரு புது பேக், பேனா, செருப்புனு வாங்கக்கூட அவங்ககிட்ட காசில்ல. அந்த காலேஜுல மத்த பிள்ளைங்க எல்லாம் எப்படி வருவாங்கனு தெரியல. காலேஜுக்கு போட்டுட்டுப் போக நாலு நல்ல டிரெஸ்கூட இல்ல அந்த பிள்ளைகிட்ட'' என்கிறார்கள் இந்தக் குடும்பத்தை அறிந்தவர்கள்.

லட்சுமிபிரியாவிடம் பேசினோம்.

''புத்தகம், பயணம்னு இந்தச் செலவுகளுக்கு எல்லாம் வருஷத்துக்கு குறைஞ்சது 50,000 தேவைப்படலாம்னு எங்கப்பா, அம்மாகிட்ட சொன்னப்போ, எங்களால அவ்வளவு தொகை ஏற்பாடு செய்ய முடியாதேனு கண்ணு கலங்கினாங்க. எனக்கு மருத்துவக் கல்லூரியில இடம் கிடைச்சாலும் அதை என்னால தொடர முடியுமானு தவிப்புல இருந்தேன். இக்கட்டான இந்த நேரத்துல, எனக்கு உதவியிருக்கிறவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல. வாழ்நாள் முழுசும் கடமைப்பட்டிருக்கேன். நான் மருத்துவராகி என்னைப் போன்ற ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவி செய்யணும்'' என்றார்.

எளியவர்களின் கனவுகள் வெல்லட்டும்!

அடுத்த கட்டுரைக்கு