`பழங்குடிகளுக்கு சட்ட உதவிகள் இலவசம்!' - தோடர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞர் நந்தினி

ஊட்டி அருகில் உள்ள தவிட்டுக்கோடு மந்துவை சேர்ந்த இளம்பெண் நந்தினி, தோடர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞராகத் தடம் பதித்துள்ளார்.
ஊட்டியிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தவிட்டுக்கோடு மந்து (தோடர் பழங்குடிகள் வாழும் கிராமத்தை 'மந்து' என்றே அழைப்பர்). இந்தக் கிராமத்தில் தோடர் வளர்ப்பு எருமைகள் மற்றும் மலைக்காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டுவரும் ஸ்ரீகாந்த்-செண்பகவள்ளி தம்பதியின் மூத்த மகளான நந்தினி, தனது வாழ்நாள் லட்சியமான சட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் தோடர் பழங்குடி இனத்தின் முதல் வழக்கறிஞர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளார்.

நந்தினியை நேரில் சந்தித்தோம். 'பூத்துக்குளி' எனும் பூ வேலைப்பாடுகள் நிறைந்த தோடர்களின் பாரம்பர்ய போர்வையைப் போர்த்தியபடி வந்தார். விகடனின் சார்பாக நந்தினிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தோம்.
"ஊட்டியில இருக்க கவர்ன்மென்ட் எய்டட் ஸ்கூல்லதான் ப்ளஸ்டூ வரை படிச்சேன். சின்ன வயசுலயிருந்தே அட்வகேட் ஆகணும்னு ரொம்ப ஆசை. எங்க அம்மா, அப்பா என்னை சென்னைக்கு லா படிக்க அனுப்பி வெச்சாங்க. காலேஜ்லயும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. ஊட்டியில இருந்து ஒரு ட்ரைபல் பொண்ணு இங்க வந்து படிக்குதுனு நல்லா என்கரேஜ் பண்ணினாங்க. கஷ்டப்பட்டு நல்லபடியா படிப்பை முடிச்சேன்.

எங்க சமூகத்துல நான்தான் முதல் அட்வகேட்னு மத்தவங்க சொன்னதும் சந்தோஷமா இருந்தது. எங்க மக்களுக்கு சட்ட உதவிகள் அதிகமா தேவைப்படுது. பழங்குடி மக்களுக்கான சட்ட உதவிகளை எப்போதும் இலவசமாகவே செய்வேன். நீதிபதி ஆவதற்கான எக்ஸாம் எழுதி அதுல பாஸ் பண்ணணும். எங்க மக்களுக்கு கல்விக்கு உதவி செய்யணும். இதுதான் என்னோட அடுத்த இலக்கு" என நம்பிக்கையுடன் பேசி முடித்தார்.
மகளின் சாதனை குறித்து நம்மிடம் பகிர்ந்த ஸ்ரீகாந்த், "எங்களுக்கு மூணு குழந்தைங்க. முதல் பொண்ணு வக்கீல் ஆகிட்டா. அடுத்த ரெண்டு பேரும் படிக்கிறாங்க. எங்க சமூகத்துல வக்கீல்களே இல்ல. ஆனா, இந்தக் காலகட்டத்துல எங்க உரிமைகளைத் தக்கவைக்க எங்களுக்கு சட்ட உதவி தேவையா இருக்கு.

எங்க பொண்ணு நல்ல வழிய தொடங்கியிருக்கா. எங்க மக்கள் இன்னும் நெறைய பேரு படிச்சி நல்லா வரணும், அதான் எங்க ஆசை" - ஆனந்தம் பொங்கும் முகத்துடன் தெரிவித்தார்.
முதல் தலைமுறையினரின் வெற்றி மகத்தானது!