Published:Updated:

திருச்செந்தூர்: 6-ம் வகுப்பு மாணவர் ஏற்றிய தேசியக்கொடி... காரணம் என்ன தெரியுமா?!

மாணவர் சிவகுகன்
மாணவர் சிவகுகன்

திருச்செந்தூர், சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில், இளம் விஞ்ஞானி விருதுக்குத் தேர்வாகியுள்ள 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சிவகுகனை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக் கொடியை ஏற்றி ஊக்கப்படுத்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், பந்தல் மண்டபம் அருகில் உள்ளது ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளி. கடந்த 1895-ம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பள்ளிதான், திருச்செந்தூரிலேயே முதன்முதலாகத் திறக்கப்பட்ட பள்ளி என்ற சிறப்புக்குரியது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், 225 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். 12 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொடியேற்றும் மாணவர் சிவகுகன்
கொடியேற்றும் மாணவர் சிவகுகன்

பொதுவாக பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் தியாகிகள், தலைவர்கள், பேச்சாளர்கள், அப்பள்ளியின் தலைமையாசிரியர், மூத்த ஆசிரியர் ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைத்து கொடியேற்றி சொற்பொழிவு ஆற்ற வைப்பதுதான் வழக்கம். ஆனால், இந்தப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் 8-ம் வகுப்பு படித்து முடித்து, ’தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வு’ எழுதிய அல்லது ‘இளம் விஞ்ஞானி விருது’ பெற்ற மாணவர் அல்லது மாணவியை பெற்றோருடன் அழைத்து கொடியேற்ற வைத்து கெளரவித்து ஊக்கப்படுத்தி வருகிறது இப்பள்ளியின் நிர்வாகம்.

72வது குடியரசு தின விழாவான இன்று, இதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவர் சிவகுகன், தேசியக்கொடியை ஏற்றினார். இவர் ’இளம் விஞ்ஞானி’ விருதுக்காகத் தேர்வு பெற்றவர். அம்மாணவரின் குடியரசு தின விழா உரைக்குப் பின் மறைந்த விஞ்ஞானி அப்துல்கலாம் எழுதிய, 'உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்' என்ற புத்தகம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பெற்றோருடன் மாணவர் சிவகுகன்
பெற்றோருடன் மாணவர் சிவகுகன்

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம், “ஒவ்வொரு வருஷமும் தேசிய வருவாய் மற்றும் திறன் தேர்வை அரசு நடத்தி வருகிறது. அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வு, வழக்கமான தேர்வு போல இல்லாமல் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை அறியும் வகையில் இருக்கும். கடுமையான பயிற்சியும், முயற்சியும் இல்லாவிட்டால் தேர்ச்சி பெற முடியாது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.500 வீதம் என ரூ.24,000 உதவித்தொகையாகக் கிடைக்கும். இந்தத் தேர்வுக்குத் தயாராக எங்கள் பள்ளியிலேயே எல்லா மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம்.

`குடியரசு ஜனனம்' : 1950 -ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்க கட்டுரை #VikatanOriginals

இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கார்கள். மாணவர் சிவகுகன் எங்கள் பள்ளியில 6-ம் வகுப்பு படிக்கிறார். காளை மாடு சுற்றி வரும் கல்செக்கில் இருந்து மின்சாரம் எடுக்கும் அறிவியல் நுட்பத்தைக் கண்டறிந்ததற்காக மத்திய அரசின் இந்தாண்டிற்கான தேசியத் திறனாய்வு தேர்வில் 'இளம் விஞ்ஞானி' பட்டம் பெற்றுள்ளான். அவனது அக்கா ஜெயராம வர்ணா, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டுவதை எச்சரிக்கும் விதமாகவும், எல்லையை அடையாளம் காட்டும் விதமாகவும் வடிமைத்த கருவிக்காக ’இளம் விஞ்ஞானி’ விருது பெற்றுள்ளார்.

பரிசு பெறும் மாணவர் சிவகுகன்
பரிசு பெறும் மாணவர் சிவகுகன்

இம்மாணவர் கண்டறிந்த முறைப்படி கல் செக்கில் மாடு சுற்றி வரும் ஒரு முறைக்கு 225 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தமிழரின் பாரம்பrயத்தை உணர்த்தும் காளை மாடுகளின் சிறப்பை அறிவியலோடு தொடர்புபடுத்தி இளம் விஞ்ஞானி பட்டம் பெற்ற இந்த மாணவனது திறமையை பெருமை படுத்தும் விதமாகத்தான் 72வது குடியரசு தின விழாவான இன்று கொடியேற்ற அழைத்தோம். சாதனை மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அழைத்து மரியாதை செய்து ஊக்கப்படுத்துவதைp பெருமையாக நினைக்கிறோம். இதனால் அவர்களின் தலைமைப்பண்புகள் வளர்வதுடன் மேலும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணமும் வளரும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு