Published:Updated:

நிலம் நீர் நீதி! - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்!

ஏரி
பிரீமியம் ஸ்டோரி
ஏரி

இத்தனை நாளா எங்க ஊர்ல அவ்வளவா விவசாயம் நடக்காது. இந்த முறை நல்லா மழை பெய்ஞ்சு ஏரி நிரம்பியிருக்கு. சுத்தியிருக்கிற 60 ஏக்கருக்கும் மேலான நிலங்களில் விவசாயம் நடக்குது.

நிலம் நீர் நீதி! - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்!

இத்தனை நாளா எங்க ஊர்ல அவ்வளவா விவசாயம் நடக்காது. இந்த முறை நல்லா மழை பெய்ஞ்சு ஏரி நிரம்பியிருக்கு. சுத்தியிருக்கிற 60 ஏக்கருக்கும் மேலான நிலங்களில் விவசாயம் நடக்குது.

Published:Updated:
ஏரி
பிரீமியம் ஸ்டோரி
ஏரி

2015-ம் ஆண்டு சென்னையைப் புரட்டிப்போட்ட பெரு வெள்ளத்துக்குக்குக் காரணமே... நீர்நிலைகளைச் சரிவர பராமரிக்காமல் விட்டதுதான். இதை உணர்ந்து, ஏரிகளைச் சீரமைக்கும் பணிகளை ‘நிலம் நீர் நீதி!’ என்கிற பெயரில் விகடன் முன்னெடுத்தது. அப்போது, ஓடோடி வந்து கைகோத்தவர்கள் விகடன் வாசகர்களே. ஆம், அன்று வாசகர்கள் அள்ளிக்கொடுத்த ஒரு கோடி ரூபாயுடன், விகடன் நிறுவனத்தில் அறத்திட்டப் பணிகளுக்காக இயங்கிவரும் வாசன் அறக்கட்டளையும் தன் பங்குக்கு ஒரு கோடி ரூபாயைச் சேர்த்து நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்தது. அதன் பலனாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்போது மூன்று ஏரிகள் நீர் நிரம்பிக் கடல்போலக் காட்சியளிக்கின்றன.

நிலம் நீர் நீதி! - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்!
நிலம் நீர் நீதி! - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் ஏரி, சாலமங்கலம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி மற்றும் அம்மன் குளம் ஆகியவை தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது 71 ஏக்கர் பரப்பளவு கொண்ட நரியம்பாக்கம் ஏரி. 1.3 கி.மீ தொலைவுக்கு நீண்டிருக்கும் இதன் கரையைப் பலப்படுத்தியதோடு உயர்த்தியும் கொடுத்திருக்கிறோம். 8 அடி உயரம் இருந்த கரை, 12 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஏரியின் கரையில் உள்ள மண் ஒருவகையான பொறை மண். எளிதில் மண்ணரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், கரைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், உள்பக்கக் கரையில் கான்கிரீட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவு, நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக வெளுத்து வாங்கிய கனமழையையும் தாக்குப்பிடித்துத் தெம்பாக நிற்கிறது ஏரியின் கரை. நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு நிகழாதவாறு எதிர்க்கரை அமைக்கப்பட்டு, பனைமர விதைகளும் விதைத்திருந்தோம். அவை, இப்போது முளைத்து வளர்ந்திருக்கின்றன. ஏரிக்குள் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டிருப்பதால், தண்ணீர் தங்குதடை யின்றிப் பாய்கிறது.

நிலம் நீர் நீதி! - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்!
நிலம் நீர் நீதி! - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்!

“இத்தனை நாளா எங்க ஊர்ல அவ்வளவா விவசாயம் நடக்காது. இந்த முறை நல்லா மழை பெய்ஞ்சு ஏரி நிரம்பியிருக்கு. சுத்தியிருக்கிற 60 ஏக்கருக்கும் மேலான நிலங்களில் விவசாயம் நடக்குது. இத்தனை நாள் 100 நாள் வேலையை மட்டுமே நம்பியிருந்த நாங்க, இன்னிக்கு நெல் வயல்ல களைபறிக்குற வேலையைச் செய்யுறோம்னா அதுக்கு விகடன்தான் காரணம். விவசாயிகளுக்கு மட்டுமல்லாம, எங்கள மாதிரி விவசாயக் கூலிப்பெண்களுக்கும் நல்லது பண்ணியிருக்கீங்க” என்று நன்றிப்பெருக்கோடு பேசுகிறார், நரியம்பாக்கம் ஏரி நீரால் பசுமை தாங்கி நிற்கும் வயல்வெளியில் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்த புண்ணியவதி.

சாலமங்கலம் ஏரி, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரியாகும். இதன் கரைகளை பலப்படுத்திச் சீரமைத்துக் கொடுத்திருந்தோம். 103 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி முழுவதுமாக நிரம்பி, கலங்கலின் வழியே தண்ணீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. “விகடன் போட்ட இந்தக் கரைமூலமா இன்னும் 20 வருஷத்துக்குப் பிரச்னை இருக்காது. இந்த முறைதான் ஏரி முழுசும் தண்ணி நிரம்பியிருக்கு. ஆனா, கரைக்குச் சிறு பாதிப்புகூட இல்ல. இந்த ஏரியை விகடன் மூலமா சீரமைச்சுக் கொடுத்த பிறகு, தண்ணி நிறைய வந்துச்சு. பஞ்சாயத்து மூலமா படித்துறை கட்டிக்கொடுத்திருக்காங்க. துணி துவைக்கறது, தண்ணி எடுக்குறதுன்னு அந்தப் படித்துறை பலவழிகளில் எங்களுக்கு உதவுது. தண்ணி நிரம்பியிருக்கிறதால, இனி விவசாயமும் நடக்கும். யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துல கரைக்கு எதிர்ப்புறம் நீண்ட பள்ளம் அமைச்சுக் கொடுத்தீங்க. ஆனாலும், சிலர் அதையும் மீறி உள்ளே நுழையுறாங்க. அதைத் தடுத்துட்டா காலத்துக்கும் இந்த ஏரியை நம்பி நாங்க நிம்மதியா வாழ முடியும்” என்று நெகிழ்கிறார், சாலமங்கலத்தைச் சேர்ந்த பழனி.

நிலம் நீர் நீதி! - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்!
நிலம் நீர் நீதி! - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்!
dev

மற்றொரு ஏரியான சிறுமாத்தூர் ஏரியும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில்தான். சுமார் 1 கிலோமீட்டர் தூரமுள்ள இதன் கரையை பலப்படுத்திக் கொடுத்துள்ளோம். 140 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 80 சதவிகிதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. கிராமத்தின் குடிநீர்த் தேவைக்காக ஏரியின் முகப்பு அருகே கிணறு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது.

சிறுமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கமலா, “நாங்க ஆடு மாடுகள் மேய்ச்சுட்டிருக்கோம். முன்னெல்லாம் கரைமேல நடக்கிறதுக்கே பயப்படுவோம், முள்ளுக்காடா இருக்கும். அதையெல்லாம் அகற்றி, கரைகளை அகலமா போட்டுக்கொடுத்தீங்க. இப்போ ஏரிக்கு அந்தப்பக்கம் இருக்கிற காட்டுக்கு ஆடு மாடுகளைப் பிரச்னையில்லாம ஓட்டிட்டுப் போக முடியுது. மேய்ச்சல்ல இருக்கிற ஆடு மாடுகள் நேரத்துக்கு வந்து தண்ணி குடிக்குது. இங்கிருந்து மணிமங்கலம் ஏரிக்குத் தண்ணி போற கால்வாயையும் சீரமைச்சுக் கொடுத்திருக்கீங்க. ஏரி நிரம்பினா... மணிமங்கலம் ஏரிக்கும் தண்ணி போகும். நெல், சவுக்கு விவசாயத்துக்கும் தண்ணி கிடைக்குது. இந்த முறை விவசாயக் கிணறுகளெல்லாம் முழுசா நிரம்பியிருக்கு. ஏரிக்குத் தண்ணி வந்ததனால நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கு. இன்னும் ஒரு வருஷத்துக்கு விவசாயம், குடிதண்ணிக்கு எங்களுக்குப் பிரச்னையில்ல. சொன்னா நம்ப மாட்டீங்க, இப்போ இந்த ஏரிக்குப் பறவைகளும் நிறைய வந்துட்டுப் போகுது” என்றார் உற்சாகம் பொங்க.

வாசன் அறக்கட்டளையின் மேற்பார்வையில் கடந்த 2017-ம் ஆண்டே இந்த மூன்று ஏரிகளையும் தூர்வாரி, கரைகளை பலப்படுத்திக் கொடுத்தோம். அப்போதே நீர் நிறையத் தொடங்கியது. தொடர்ந்து கரைகளை மேலும் பலப்படுத்தும் பணிகளைச் செய்ததோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும் முன்னெடுத்தோம். முடிந்த அளவுக்கு அவற்றை அகற்றவும் செய்தோம். தற்போது மூன்று ஏரிகளிலுமே நீர் ததும்பிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளும் இந்த நிலையை எட்டவேண்டும் என்பதற்காக வாசகர்களுடன் கைகோத்து விகடன் முன்னெடுத்த திட்டம்தான் ‘நிலம் நீர் நீதி.’

நிலம் நீர் நீதி! - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்!

நம்முடைய பணிகள் சிறப்பாக அமையவே, கடந்த 2018-ம் ஆண்டில் குடிமராமத்துப் பணிகளைத் தொடங்கியது தமிழக அரசு. இதன் பலனாக இன்றைக்குக் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 90 சதவிகிதத்துக்கும் மேலான ஏரிகள் நீர் நிரம்பியிருக்கின்றன. இதற்காகத் தமிழக அரசை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும். அதேசமயம், இந்த நீர்நிலைகளில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் சிக்கியிருப்பதுதான் வேதனை. இதனால், குடிமராமத்துப் பணி என்பதன் பலனை நூறு சதவிகிதம் அறுவடை செய்ய முடியவில்லை என்பதே உண்மை. அதாவது, ஏரிகளின் முழுமையான கொள்ளளவுக்கு நீரைத் தேக்க முடியவில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடுத்த தலைமுறையின் வாழ்க்கையில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது என்பதை உறுதிப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

‘நிலம் நீர் நீதி’ எனும் நம்முடைய முதல் முயற்சி... நரியம்பாக்கம், சிறுமாத்தூர், சாலமங்கலம் ஆகிய மூன்று ஏரிகளில் நீர் நிரம்பச் செய்திருப்பதோடு மட்டுமல்லாமல், அரசாங்கத்தையும் களத்தில் வேகமாகச் சுழல வைத்துள்ளது. இது, தமிழகம் முழுக்கவே பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள், விலங்குகள், இன்னபிற உயிரினங்கள் என அனைவரையும் மகிழச் செய்திருக்கிறது. வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் கரம்கோத்ததாலேயே இது சாத்தியமாகி யிருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான வாசகர்கள் அனைவருக்கும் விகடனின் கோடானுகோடி நன்றிகள்! இணைந்திருப்போம்... என்றென்றும்!

நிலம் நீர் நீதி செயல்பாடுகளைக் வீடியோவாகக் காண...