Published:Updated:

`தனியார் பள்ளிக் கட்டணத்துக்கு நிகரான கல்விச் சீர்!'-அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த ஆசிரியத் தம்பதி

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைவிட நீலகிரியில் அரசுப் பள்ளிகளை மூடுவதற்கான வேலைகள் அதிகம் நடைபெற்றுவருகிறது. பழங்குடி மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் 100 சதவிகிதம் அரசுப் பள்ளிகளை நம்பியே உள்ளனர்.

ஆசிரியத் தம்பதி
ஆசிரியத் தம்பதி

நீலகிரி மாவட்டம், கூடலூர் முதல் மைல் பகுதியைச் சேர்ந்தவர், கிருஷ்ணகுமார். இவர், கூடலூர் தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர், தேவாலா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு நிகரலி, மகிழினி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஐந்து வயதான தனது முதல் மகள் நிகரிலியை ஆசிரியத் தம்பதி கூடலூர் வண்டிப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.

பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் தந்தை
பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் தந்தை

குடும்பத்தோடு பள்ளிக்குத் தேவையான பொருள்களையும் வாங்கி வந்த ஆசிரியர் கிருஷ்ணகுமார் குடும்பத்தினரை மற்ற ஆசிரியர்கள் கைதட்டி வரவேற்றனர். சேர்க்கைக்குப் பிறகு தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்துக்கு நிகராக அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கினர். இந்தச் சம்பவம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் கிருஷ்ணகுமார் கூறுகையில், "நான் எனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளை அரசு நிறுவனங்களில் மட்டுமே பயின்றேன். அதேபோல எனது துணைவியாரும் அரசு நிறுவனங்களில் பயின்றார். இந்த நிலையில், இருவரும் தற்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றிவருகிறோம். அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் வகையிலும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், எனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்தேன். அதேபோல் எனது இரண்டாவது மகளையும் அரசுப் பள்ளியில்தான் சேர்ப்பேன். மேலும், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணத்தை ஒவ்வோர் ஆண்டும் வழங்கி, பள்ளியை மேம்படுத்த உதவுவோம்" என உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

admission for government school
admission for government school

ஆசிரியத் தம்பதியின் செயல் குறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மனோகரன், "தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைவிட நீலகிரியில் அரசுப் பள்ளிகளை மூடுவதற்கான வேலைகள் அதிகம் நடைபெற்றுவருகிறது. பழங்குடி மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் 100 சதவிகிதம் அரசுப் பள்ளிகளை நம்பியே உள்ளனர். கிருஷ்ணகுமார் மற்றும் ரேவதியைப் போன்ற ஆசிரியர்களே அரசுப் பள்ளிகளுக்கு நம்பிக்கையாக உள்ளனர். இதுபோன்று தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கப் பலரும் முன்வந்தால், நிச்சயம் அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்படும்" என்றார் உறுதியான குரலில்.