Published:Updated:

`ஆங்காங்கே நாப்கின், துர்நாற்றக் கழிவறை; திறந்தவெளிதான்!'- புதுக்கோட்டை மகளிர் கல்லூரியின் அவலம்

மணிமாறன்.இரா
Vengadesh R

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் முறையான கழிப்பறை வசதி இல்லாததால், இயற்கை உபாதைகளைக் கழிக்க மாணவிகள் தினம் தினம் திண்டாடி வருகின்றனர். மேலும், கல்லூரி வளாகம் சுகாதாரமில்லாமல் காணப்படுவதால், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர் உடைந்த நிலையில் காணப்படும் மகளிர் கல்லூரி
சுற்றுச்சுவர் உடைந்த நிலையில் காணப்படும் மகளிர் கல்லூரி ( வெங்கடேஷ்.ஆர் )

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் பிரதான சாலையில் இருக்கிறது புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி. பல, பெண் அதிகாரிகளை உருவாக்கிய பெருமைமிக்க இந்தக் கல்லூரியில் கடந்த சில வருடங்களாகவே முறையான கழிப்பறை வசதி இல்லை என்பது தான் உச்சக்கட்ட வேதனை. தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இக்கல்லூரியில் படிக்கின்றனர். ஆனால், இங்குள்ள கழிப்பறைகள் அனைத்தும் மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலையில்தான் சிதலமடைந்து கிடக்கிறது.

சேதமடைந்த கழிப்பறை
சேதமடைந்த கழிப்பறை
வெங்கடேஷ்.ஆர்

கல்லூரி வளாகத்தின் திறந்தவெளிப் பகுதியைத் தான் கழிப்பறைகளாக பயன்படுத்துகின்றனர். நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் அதுவும் செயல்படவில்லை. வளாகம் முழுவதும் நாப்கின்கள் பரவிக் கிடப்பதால், தொற்று நோய் ஏற்படும் அவல நிலையும் உள்ளது.

இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர் மாணவ சங்கத்தினர். இந்த நிலையில்தான், கல்லூரியில் இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் செய்யக் கோரி மாணவர் சங்கம், மாதர் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

குப்பைகள் நிறைந்த வளாகம்
குப்பைகள் நிறைந்த வளாகம்
வெங்கடேஷ்.ஆர்

இதுபற்றி மாணவர் சங்கத்தினர் கூறும்போது, ``கல்லூரி கழிப்பறைங்க ரொம்ப வருஷமாகவே சரியா பராமரிக்கப்படலை. கழிப்பறை எல்லாமும் உடைஞ்சு, புதர் மண்டிக் கிடக்குது. மாணவிகள் எல்லாரும் திறந்தவெளியைத் தான் கழிப்பறையா பயன்படுத்திக்கிட்டு வர்றாங்க. சில தினங்களுக்கு முன்னால, திறந்தவெளியில் மாணவிகள் சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தப்ப, இளைஞர் ஒருவர் அதை வீடியோ எடுத்திருக்கார். இதைப்பார்த்து மாணவிகள் அலறி சத்தம் போட்டதால், அங்கிருந்தவர்கள் எல்லாரும் சேர்ந்து அவனை காவல் நிலையத்தில் ஒப்படைச்சிட்டாங்க.

ஆனாலும், இதுபற்றி கல்லூரி நிர்வாகம் கண்டுக்கல. போலீஸில் புகார் கொடுக்க கல்லூரி நிர்வாகம் முன்வரலை. கல்லூரி மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் இனியாவது அக்கறை காட்ட வேண்டும். செல்போனில் வீடியோ எடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்துள்ள கழிப்பறைகள் உடனடியாக சரி செய்து மாணவிகள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும். நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை உடனடியாக பழுது நீக்க வேண்டும். இவை உடனே சரிசெய்யப்படவில்லை என்றால், தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்றனர்.

சேதமடைந்த கழிப்பறை
சேதமடைந்த கழிப்பறை
வெங்கடேஷ்.ஆர்

நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத், ``ஒரு வாரத்துக்குள் மாணவிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். நாப்கின் எரியூட்டும் இயந்திரம் சீரமைக்கப்பட்டு வளாகம் தூய்மைப் படுத்தப்படும். உடைந்த சுற்றுச்சுவர் அனைத்தும் சரி செய்யப்படும்" என்றார்.