Published:Updated:

ஆன்லைன் கல்வி ஆரோக்கியமானதா?

பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்பு நடத்தலாம்.

பிரீமியம் ஸ்டோரி
பத்தாம் வகுப்பு தேர்வு பிரச்னைக்கு முடிவுகட்டி சில தினங்கள்கூட ஆகவில்லை. அடுத்த பிரச்னையாக முளைத்து நிற்கிறது ஆன்லைன் வகுப்புகள் குறித்த சர்ச்சைகள்.

தனியார் பள்ளிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்திவரும் இந்தச் சூழலில், ‘வசதியுள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியும்... இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?’ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது. உண்மையில் ஆன்லைன் கல்வி ஆரோக்கியமானதா, இல்லையா?

தனியார் பள்ளி ஒன்றின் நிர்வாகியான ராமசுப்பிரமணியன் இது குறித்து நம்மிடம் பேசினார். “ஊரடங்கு முழுமையாக முடிந்து இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் அவசியமாகின்றன. மாணவர்களுக்குக் கல்வியுடனான தொடர்புகள் அற்றுப்போய் விடக் கூடாது; ஆரம்ப வகுப்புகளில் கற்ற அடிப்படைக் கல்வி மறந்துபோய்விடக் கூடாது. எனவே, பெரும்பாலான பெற்றோர்களே, ‘ஆன்லைன் வகுப்புகளை நடத்துங்கள்’ என்று எங்களிடம் கேட்கிறார்கள்.

ஆன்லைன் கல்வி ஆரோக்கியமானதா?

தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால், ஊரடங்கால் தனித்திருக்கும் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல் சீராக இருக்கும். பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்பு நடத்தலாம். ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பது என்பது சற்றுச் சிக்கலானது. அவர்களுக்கு வீடியோக்கள் மூலம் கற்பிக்கலாம். நல்லவை, கெட்டவை அனைத்து விஷயங்களிலுமே இருக்கின்றனதான். நாம்தான் அதை பகுத்தாய்ந்து முறைப்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்காக, `ஆன்லைன் வகுப்புகளே வேண்டாம்’ என்பது சரியல்ல” என்றார்.

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் சந்திக்கும் விளைவுகள் குறித்துப் பேசினார் ஆசிரியர் பிரியசகி. “பள்ளி என்கிற அமைப்புதான் குழந்தைகளின் குடும்பச்சூழல், பொருளாதார நிலை உள்ளிட்ட பாகுபாடு களை உடைக்கும் இடமாக அமைகிறது. அந்த வகையில் ஆன்லைன் கல்வி, மாணவர்களிடம் இயலாமை உணர்வை உண்டாக்குகிறது. தனியார் பள்ளிகள் மும்முரமாக ஆன்லைன் வகுப்புகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. மற்றொருபுறம் இதைப் பார்த்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் மன அழுத்தம் அடைகின்றனர்.

ஆன்லைன் கல்வி ஆரோக்கியமானதா?

இது கொரோனா ஊரடங்கு காலம்தான். கல்வியை நீண்டகாலம் தள்ளிப்போட முடியாதுதான். இப்படியான சூழலில் ஆபத்தான மற்றும் மாணவர்களின் கவனத்தை திசைதிருப்பும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய முடியாத, கல்விக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய போன் அல்லது டேப்லெட்டை அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கூடவே, இலவச இணைய வசதி செய்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஆசிரியர்களை ஆன்லைன் வகுப்பெடுக்கச் சொல்லலாம். எல்லோருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும்வரை ஆன்லைன் கல்வியை அரசு தடை செய்ய வேண்டும். இப்போதைக்கு கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்து பேசி உடனடியாகக் கல்விக்காக பிரத்யேக டி.வி சேனலைத் தொடங்க வேண்டும். அது கேபிள் மூலம் அனைவரையும் சென்றடைய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கேரளாவில் செய்வதுபோல் லோக்கல் கேபிள் சேனல்களைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யலாம்” என்றவர் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட வேண்டிய விதங்களையும் பகிர்ந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எவ்வளவு நேரம் ஆன்லைனில் வகுப்பு எடுக்க வேண்டும் என்பதில் அரசு வழிகாட்டுதல் தேவை. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை கண்டிப்பாக ஆன்லைன் வகுப்பு கூடாது. அவர்களின் உடல்நிலை, மனநிலையை அது பாதிக்கும். அவர்களைக் கதை சொல்லல், ஓவியம் வரைதல், ஓரிகாமி போன்ற மற்ற விஷயங்களில் வீட்டிலிருந்தே பெற்றோர்கள் ஈடுபடுத்தலாம்.

தமிழகத்தில் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை மட்டுமே நம்பியிருக்கும் ஏழைக் குழந்தைகள் ஏராளம். மார்ச் 24-ம் தேதி பள்ளிகள் மூடப்பட்ட பிறகு, சத்துணவு கிடைக்காமல் இந்தக் குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு முன்னதாக இவர்களுக்குத் தேவையான சத்துணவு, வைட்டமின்-சி, ஜிங்க் ஆகிய சத்து மாத்திரைகள், பெண் குழந்தைகளுக்கு நாப்கின் ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.

கல்வி என்பது ஆசிரியர்-மாணவர் இடையிலான உரையாடல், அதைத் தொடர்ந்த விவாதவழித் தேடல்களில்தான் முழுமை பெறுகிறது. அந்த வகையில் ஆன்லைன் கல்வி ஒருவழிப்பாதை மட்டுமே. அது மாதக்கணக்கில் தொடர்ந்தால் பிள்ளைகள் எலெக்ட்ரானிக் சாதனங்களுடன் மட்டுமே பழகி எந்திரங்களாகி விடுவார்கள். குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் விலகி நிற்பார்கள். உளச்சிக்கல்கள் அதிகரிக்கும். இணையத்தைத் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்து அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இணையவழிப் பாடங்கள்!

மிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. தனியார் பள்ளிகள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்திவரும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களும் வீட்டிலிருந்தே படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இணைய முகவரி: e-learn.tnschools.gov.in

ஆன்லைன் வகுப்புகள்... உளவியல் சிக்கல்கள்!

`ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் உலவின.

இது குறித்து தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ஶ்ரீதரிடம் பேசினோம். ‘‘ `ஆன்லைன் வகுப்புகளுக்காகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ எனத் தனியார் பள்ளிகள் எழுதித் தருமாறு அரசிடமிருந்து இதுவரை எந்தவோர் அதிகாரபூர்வமான அறிவிப்பும் வரவில்லை. ஒரு சில சி.இ.ஓ-க்கள் மட்டும் `ஆன்லைன் வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என எச்சரிக்கின்றனர். இதுவரை அரசிடமிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை’’ என்றார்.

ஆன்லைன் வகுப்புகள் பற்றி நிலவும் சர்ச்சைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனிடம் பேசினோம். ‘‘ஆன்லைன் வகுப்புகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை” என்றார்.

தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு கட்டணம் செலுத்துவது சுலபமான காரியம்தான். ஆனால், இங்கு சிக்கல் கட்டணம் என்பதல்ல. தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்துவரும் மாணவர்கள், வகுப்பறை என்ற சூழலை இழப்பதால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்பதால் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு இவ்வாறான சூழ்நிலை அமையவில்லை என்ற மன உளைச்சலுக்கும் தள்ளப்படுகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு