Published:Updated:

அறக்கட்டளை நிர்வாகம் Vs பேராசிரியர்கள் - பச்சையப்பன் கல்லூரி விவகாரத்தில் தலையிடுமா அரசு?

பச்சையப்பன் கல்லூரி
பிரீமியம் ஸ்டோரி
பச்சையப்பன் கல்லூரி

போராட்டங்களில் கலந்துகொள்கிறார் என்பதற்காகவே திருஞானம் என்கிற தமிழ்ப் பேராசிரியரை, வேலையிலிருந்தே நீக்கிவிட்டார்.

அறக்கட்டளை நிர்வாகம் Vs பேராசிரியர்கள் - பச்சையப்பன் கல்லூரி விவகாரத்தில் தலையிடுமா அரசு?

போராட்டங்களில் கலந்துகொள்கிறார் என்பதற்காகவே திருஞானம் என்கிற தமிழ்ப் பேராசிரியரை, வேலையிலிருந்தே நீக்கிவிட்டார்.

Published:Updated:
பச்சையப்பன் கல்லூரி
பிரீமியம் ஸ்டோரி
பச்சையப்பன் கல்லூரி

தமிழ்நாட்டின் புகழ்மிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பச்சையப்பன் கல்லூரியில், அறக்கட்டளை நிர்வாகத்துக்கும், பேராசிரியர்கள் தரப்புக்குமான மோதல் முடிவின்றி நீள்கிறது!

பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நகரங்களில் ஆறு கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இந்தக் கல்லூரி அறக்கட்டளைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்களின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், பல்வேறு முறைகேடு புகார்கள், வழக்குகள் காரணமாக அடுத்த தேர்தலை நடத்த முடியாத சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகத்தை சென்னை உயர் நீதிமன்றமே கையில் எடுத்ததுடன், அறக்கட்டளையை நிர்வகிக்க, இடைக்கால நிர்வாகியாக ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகத்தை நியமித்தது. அவர் மீதும் புகார் சொன்னார்கள் பேராசிரியர்கள். இப்போது மாவட்ட நீதிபதி எஸ்.ராஜு சொத்தாட்சியராக வும், நெய்வேலி நிலக்கரி நிறுவன பள்ளிகளில் கல்விப் புரட்சியை ஏற்படுத்திய துரைக்கண்ணு செயலாளராகவும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு அறக்கட்டளையை நிர்வகித்துவருகிறார்கள். ஆனாலும் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை.

அறக்கட்டளை நிர்வாகம் Vs பேராசிரியர்கள் - பச்சையப்பன் கல்லூரி விவகாரத்தில் தலையிடுமா அரசு?

பச்சையப்பன் அறக்கட்டளை தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 30.11.2021 அன்று அளித்த தீர்ப்பில், ‘08.02.2022-க்குள் அறக்கட்டளைக்குத் தேர்தல் நடத்தி, புதிய அறங்காவலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க’ ஆணையிட்டிருந்தது. ஆனால், கெடு முடிந்தும் அறக்கட்டளைக்குத் தேர்தல் நடத்தப்படாதது ஆசிரியர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. ‘‘அறக்கட்டளைத் தேர்தல் நடத்தப்படாத சூழலில், தற்போது செயலாளர் பொறுப்பில் இருந்துவரும் துரைக்கண்ணு, ஆசிரியர்களைப் படுத்தியெடுக்கிறார்; பதவி உயர்வு வழங்காமல் வேண்டுமென்றே இழுத்தடிக் கிறார்’’ என்று புகார்களை அடுக்குகிறது பேராசிரி யர் தரப்பு. “இங்கே எல்லாமே தப்பாக இருக்கின்றன. ஆசிரியர் நியமனம் தொடங்கி, அறக்கட்டளை உறுப்பினர் தேர்வுவரை எல்லாவற்றிலும் மாற்றம் தேவை” என்கிறது அறக்கட்டளை தரப்பு. முன்னாள் மாணவர் தரப்போ, கல்லூரியில் சீர் திருத்தங்களைச் செய்துவரும் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், பேராசிரியர் களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துவருகிறது.

அறக்கட்டளை நிர்வாகம் Vs பேராசிரியர்கள் - பச்சையப்பன் கல்லூரி விவகாரத்தில் தலையிடுமா அரசு?

உண்மையில் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள களமிறங்கினோம். கல்லூரியின் விலங்கியல்துறை பேராசிரியரும், தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் சென்னை மண்டலச் செயலாளருமான சத்யநாராயணனிடம் பேசினோம். ‘‘கல்லூரி அறக்கட்டளையை நிர்வகிக்க, இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம், அறக்கட்டளையைத் தாண்டி கல்லூரி நிர்வாகத்துக்குள்ளும் தலையிட ஆரம்பித்தார். அதை எதிர்த்து நாங்கள் போராடியதால், எங்களைப் பழிவாங்க ஆரம்பித்தார் சண்முகம்.

உதாரணத்துக்கு, போராட்டங்களில் கலந்துகொள்கிறார் என்பதற்காகவே திருஞானம் என்கிற தமிழ்ப் பேராசிரியரை, வேலையிலிருந்தே நீக்கிவிட்டார். இதேபோல், பல்வேறு காரணங்களைச் சொல்லி 152 பேரை வேலையைவிட்டு நீக்கினார். உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, அவர்கள் மீண்டும் வேலை பெற்றனர். ஆனால், சண்முகம் கூறிய புகார்களை வைத்துக் கொண்டு, தற்போது செயலாளராக இருக்கும் துரைக்கண்ணு எங்களுக்குப் பல்வேறு வகையிலும் நெருக்கடி கொடுத்துவருகிறார். ‘தொலைதூரக் கல்வியில் படித்திருக்கிறார்’ எனச் சொல்லி சமீபத்தில் உத்தமக்குமார் என்பவரை காஞ்சிபுரம் கல்லூரிக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறார். ‘கிராஸ் மேஜர்’ என்ற குற்றச்சாட்டில் இன்னும் பலரைக் குறிவைத்திருக்கின்றனர். அப்படித் தகுதியில்லாதவர்கள் என்றால், இந்த 152 பேர் நியமனத்துக்கும் மெட்ராஸ் யுனிவர்சிட்டி எப்படி அப்ரூவல் கொடுத்திருக்கும்... வட்டார இணை இயக்குநர் எப்படி அப்ரூவல் கொடுத்திருப்பார்... பேராசிரியர்கள் சரிவரப் பாடம் நடத்தவில்லை என்று எங்கள்மீது குற்றச்சாட்டுவைக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு வருடமும் எங்கள் துறையில் மாணவர்கள் யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கி வருகின்றனர். எங்களின் பணி மேம்பாட்டு ஆணையை வேண்டுமென்றே துரைக்கண்ணு நிறுத்திவைத்திருக்கிறார்’’ என்கிறார் ஆதங்கத்தோடு.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு பச்சையப்பன் அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். ``தேர்தலை நடத்தி, பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமும். ஆனால், இங்கிருக்கும் சிக்கல்களைச் சரி செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது. அதற்கான விளக்கங்களை ஏற்கெனவே நாங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டோம். எனவே, உண்மையான பிரச்னை இதுவல்ல... கிட்டத்தட்ட 200 பேர், போலியான தகவல் மற்றும் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து இங்கே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். இதைச் சொல்லித்தான் முன்னாள் நீதிபதி சண்முகமும் 152 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்தார். இவர்களின் பணி நியமனத்தை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் சிலரும் வழக்கு போட்டிருக்கின்றனர். கூடவே முன்னாள் மாணவர்கள் சிலரும் வழக்கு போட்டிருக்கின்றனர். அந்த வழக்குகளெல்லாம் நிலுவையில் இருப்பதால் தான், இவர்களின் பணி மேம்பாட்டு ஆணையை அனுப்ப முடியவில்லை. அப்படிச் செய்வது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.

அறக்கட்டளை நிர்வாகம் Vs பேராசிரியர்கள் - பச்சையப்பன் கல்லூரி விவகாரத்தில் தலையிடுமா அரசு?

ஆக, இந்த முறைகேடுகளெல்லாம் உரிய முறையில் விசாரித்து, தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் கல்லூரியில் கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்க முடியும். ஏனெனில், முறைகேடான வழிகளில் வேலைக்கு வந்திருப்பதால், ‘ஏன் பாடம் நடத்த வேண்டும்’ என்கிற மனநிலைதான் இவர்களிடம் இருக்கிறது. எனவே, உரிய காரணங்களின் அடிப்படையில்தான் சிலர் பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கையையும் எதிர்ப்பவர்கள், தாராளமாக நீதிமன்றத்துக்குச் செல்லட்டுமே.... உயர்கல்வித்துறை அதிகாரிகள் சிலரும் இவர்களுக்கு ஆதரவாக இருப்பதால், தமிழக முதல்வரே இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும்’’ என்கிறார் கோரிக்கையாக.

இரு தரப்பினரும் தங்கள் கருத்தில் உறுதியாக இருப்பதால், சமரசத்துக்கே இடமில்லாமல் போய் விட்டது. இடையில், மாணவர்கள்தான் பாதிக்கப் படுகிறார்கள். எனவே, இந்தப் பிரச்சினையில் உடனே தலையிட வேண்டியது அரசின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism