தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஒளிவிளக்கு: ஒரு லட்சம் ரூபாய் சொந்தப் பணம், 43 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள்...

ஆசிரியர் பைரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசிரியர் பைரவி

அரசுப்பள்ளி ஆசிரியர் பைரவியின் முன்னெடுப்பு!

‘‘மனசுல சின்ன விதையா விழுந்த ஒரு நல்ல விஷயம், வறுமை நிலையில இருக்கிற 43 மாணவர்கள் கைக்கு ஸ்மார்ட்போன் கிடைக்க வெச்சிருக்குனு நினைக்கும்போது நெகிழ்ச்சியா இருக்கு. கலெக்டர், எம்.எல்.ஏ-னு எல்லோரும் பாராட்டினாங்க. என் மாணவர்களின் பெற்றோர் சொன்ன நன்றி ரொம்ப கனமா இருந்தது” - தாயன்போடு சொல்கிறார் பெரம்பலூர் அரசுப் பள்ளி ஆசிரியர் பைரவி.

பைரவியிடம் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகளில் சிலர், தங்களிடம் செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில், அவர்களுக்குத் தன் சொந்தப் பணத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 16 செல்போன்களை வாங்கிக்கொடுத்தார் பைரவி. அதைப் பார்த்து, ‘நாங்களும் எங்களாலான உதவிகளைச் செய்கிறோம்’ என்று சேவைக்கரங்கள் நீள, மேலும் 27 மாணவர்களுக்கு பைரவி மூலம் ஸ்மார்ட்போன்கள் கிடைத்துள்ளன.

 ஆஷா
ஆஷா

``பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில நான் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் கணித ஆசிரியர். போன வருஷத்தைவிட இந்த வருஷம் எங்க பள்ளியில மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைவா இருந்ததால, பெற்றோர்களிடம் பிள்ளைகளை அரசுப் பள்ளியில சேர்க்கச் சொல்றதுக்காக வீடு வீடா போனோம். அப்போ, என்கிட்ட படிக்கிற மாணவி கிருஷ்ணப்ரியாவைப் பார்த்தேன்.

அவங்க வீட்டுக்குப் போய், ‘ஏம்மா நேத்து ஆன்லைன் கிளாஸுக்கு வரலை..?’னு கேட்டேன். சேறும் சகதியுமாயிருந்த அந்த ஒழுகும் குடிசை வீட்டுல, எங்களைப் பார்த்ததும் அவங்க அம்மாவும் அண்ணனும் பதறிப்போய் பாயை எடுத்துப்போட்டு, தண்ணி கொடுத்தாங்க. ‘மிஸ்... செல்லுல நெட் தீர்ந்துபோச்சு. கையில காசு இல்லைன்னு அப்பா சொன்னாங்க மிஸ்...’னு கிருஷ்ணப்ரியா சொன்னப்போ, நான் கேட்ட கேள்வி தப்புனு புரிஞ்சது.

தொடர்ந்து பல மாணவ, மாணவிகளிடம் பேசும்போது, ஸ்மார்ட்போன் இல்லாததால அவங்கள்ல பலரால ஆன்லைன் கிளாஸ்ல கலந்துக்க முடியாததைப் புரிஞ்சுக்கிட்டேன். ஆன்லைன் வகுப்புகள்ல கலந்துக்க வாய்ப்பில்லாத மாணவ, மாணவிகள் உயிரை மாய்ச்சுக்கிற செய்திகள் எல்லாம் நினைவுக்கு வர, அடிமனசுல கவலையும் பயமும் பிசைந்தது. நான் கஷ்டமான குடும்பத்துலதான் பொறந்து வளர்ந்தேன். பல நாள்கள் ஒருவேளை சாப்பாடு சாப்பிட்டுத்தான் படிச்சேன். என்னை மாதிரி இருக்கிற இந்தப் பசங்களுக்கு, என்னாலான உதவியைச் செய்யணும்னு நினைச்சேன். அந்த எண்ணத்தை, என் பொண்ணு இன்னும் கூர்மையாக்கினாள்...’’ என்பவருக்கு ஜெயவதனா, ஜெயகிரி என ஒரு மகள், ஒரு மகன். பைரவியின் கணவர் முரளி தனியார் பள்ளியில் ஆசிரியர்.

ஒளிவிளக்கு: ஒரு லட்சம் ரூபாய் சொந்தப் பணம், 43 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள்...

பைரவியின் மகள் ஜெயவதனா, ‘‘ ‘கொரோனா ஊரடங்கால பள்ளிகள் இயங்கலைன்னாலும், ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் கொடுத்துக்கிட்டிருக்காங்க. ஆன்லைன் கிளாஸுக்கு வர முடியாம சிரமப்படுற என் மாணவர்கள் மூணு பேருக்கு, நான் செல்போன் வாங்கிக் கொடுக்கப் போறேன்’னு எங்கம்மா வீட்டுல சொல்லிக்கிட்ருந்தாங்க. ‘அம்மா, முடிஞ்சா உங்கிட்ட படிக்கிற எல்லா பசங்களுக்கும் வாங்கிக் கொடேன்’னு சொன்னேன். ‘பணத்துக்கு என்னம்மா பண்றது’னு கேட்டாங்க. ‘எனக்கு நகை வாங்க சேர்த்து வெச்சிருக்கிற பணத்தை எடுத்து வாங்கும்மா, ரெண்டு பவுன் நகை எனக்கு வாங்கலைன்னு நெனச்சுக்குவோம்’னு சொன்னேன். அம்மா உறுதியா ஒரு முடிவெடுத்து, 16 மாணவ, மாணவிகளுக்கு 6,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களுக்கு 96,000 ரூபாய், எல்லோருக்கும் 4ஜி சிம் கார்டுகள் மற்றும் ஆக்டிவேஷனுக்கு 4,000 ரூபாய்னு, மொத்தமா ஒரு லட்சம் ரூபாய் செலவழிச் சாங்க. லாக்டெளன் முடியும்வரை ரீசார்ஜ் செலவையும் ஏத்துக்கிட்டாங்க. உதவி செய்யும்போது நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது'' - பதினொன்றாம் வகுப்புப் படிப்பவரின் பேச்சில் பக்குவம்.

 பள்ளியில்...
பள்ளியில்...

ஸ்மார்ட்போன் பெற்றுக்கொண்ட மாணவி ஆஷா, ‘‘பக்கத்து கல் குவாரியில எங்கப்பா வேலை செய்யறாங்க. அவங்ககிட்ட இருக்கிறது சாதாரண கீபேட் போன்தான். எங்க சொந்தக்கார அண்ணன்கிட்ட, ‘ஆன்லைன் கிளாஸ் மட்டும் அட்டண்ட் பண்ணிட்டு தர்றேன்ணே’னு சொல்லி போன் வாங்குனேன். ஆனா, நெட்டு காலியாகிடுதுனு ரெண்டு நாளைக்கு மேல அவங்க தரமாட்டேன்னுட்டாங்க. ‘சீக்கிரம் புது செல்லு வாங்கித் தர்றேன்’னு அப்பா சொன்னாலும், அதுக்கு அப்பாவோட ஒரு மாச சம்பளம் முழுசா போயிடும்னு எனக்கும் தெரியும். வீட்டுல அழுதுகிட்டிருந்தப்போதான், பைரவி மிஸ்ஸுகிட்டயிருந்து, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸை எல்லாம் எடுத்துக்கிட்டு ஸ்கூலுக்கு வரச்சொல்லி போன் வந்தது. எதுக்கு இதெல்லாம் கேட்குறாங்கனு தெரியாமலேயே எடுத்துக்கிட்டு போன என் கையில், ‘இந்தாடா...’னு புது மொபைலைக் கொடுத்தாங்க. எங்க மிஸ்ஸைக் கட்டிப்புடிச்சு கண்ணீரோட நன்றி சொன்னேன். ஸூம் ஆப்பும் இன்ஸ்டால் செய்து கொடுத்துட்டாங்க. அதுலயிருந்து எங்க பசங்க யாரும் கிளாஸை மிஸ் பண்ணுறதில்ல...’’ என்றார் உற்சாகமாக.

 மகள், மகனுடன் ஆசிரியர் பைரவி
மகள், மகனுடன் ஆசிரியர் பைரவி

பைரவியைப் பற்றி விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். ‘‘விகடன் செய்தியில, ‘` `என் வகுப்பில் (பத்தாம் வகுப்பு ஆங்கில வழி) புதிதா சேரும் மாணவர்களுக்கும் இதேபோல மொபைல் கொடுக்க இருக்கேன்’னு சொல்லியிருந்தேன். அதைப் படிச்சிட்டு பல இடங்கள்லயிருந்தும், ‘நாங்க அந்த உதவியைச் செய்றோம்’னு சொன்னாங்க. பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் 10 ஸ்மார்ட்போன்கள் வாங்கிக் கொடுத்தார். பள்ளியில் என்னுடன் பணிபுரியும் செல்வராஜ் சார் எட்டு போன்களும், சுரேஷ் சார் இரண்டு போன்களும் வாங்கிக் கொடுத்தாங்க. இன்னும் நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத நல்லுள்ளங்கள், வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள்னு பலரும் உதவி செய்ததில், மேலும் 27 ஸ்மார்ட்போன்களை 27 மாணவர்களுக்கு டி.இ.ஓ மரியமீனாள் மேடம் தலைமையில வழங்கினோம். அவங்களுக்கான நெட் ரீசார்ஜ் செலவை நானே ஏத்துக்கிட்டேன்’’ என்ற பைரவி நிறைவாகச் சொன்னார்...

‘‘எங்க மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் கிடைச்சிருச்சு. அந்த வாய்ப்பில்லாம ஆன்லைன் வகுப்புகள்ல இருந்து விலகியிருக்கிற எல்லா மாணவர்களுக்கும் இந்த உதவி கிடைக் கணும்னு மனசு வேண்டுது!’’

ஆசிரியர்கள் முன்வர வேண்டும்!

பெரம்பலூர் டி.இ.ஓ. மரியமீனாள், ‘‘ஆசிரியர் பைரவியின் இந்த முன்னெடுப்பை, கல்வித்துறை அதிகாரிகளுக்கான கூட்டத்தில் கலெக்டர் குறிப்பிட்டுப் பாராட்டினார். மேலும், பைரவியைப் பார்த்து பலரும் இந்தச் சேவையில் இணைந்ததால், இன்று 43 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தடையின்றி கிடைக்கிறது. கொரோனா லாக்டௌனால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியில் இடைவெளி ஏற்படாமல் இருக்க, ஒவ்வோர் அரசுப் பள்ளி ஆசிரியரும் தங்களின் ஒவ்வொரு மாணவரையும் கண்காணித்து உதவ வேண்டும். உரிய முயற்சி எடுத்து உதவி பெற்றுத் தர வேண்டும்” என்றார்.