Published:Updated:

கோச்சிங் இல்லாமல் `நீட்' பாஸானவர்கள் இவ்வளவுதானா..? அரசின் அதிர்ச்சி அறிக்கை!

நீட் கோச்சிங்கில் 'நெகட்டிவ்' மார்க் வாங்காமல் இருப்பது எப்படிப் போன்ற பயிற்சிகள்தான் தரப்படுகின்றன. அந்த நுட்பத்தைக் கற்றுத்தரும் திறம்வாய்ந்த ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறவர்கள்.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக 'நீட்' - அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி இன்று வரை பலவிதமான சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை குறைந்து, ஏழை மாணவர்களுக்கு பலனளிக்கும் என்பதே நீட் தேர்வின் சிறப்பம்சம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், தேர்வு அறைக்குச் செல்லும் மாணவர்களுக்குக் கடுமையான சோதனை, அச்சோதனையை மீறியும் ஆள் மாறாட்டம், லட்சங்களில் பணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் என, ஒவ்வொரு நாளும் அதிர்ச்சிகரமான தகவல்கள் 'நீட்'டையொட்டி வெளிவருகின்றன. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் ஏழைகளின் மருத்துவக் கனவைக் கலைக்கும் நீட்டை மத்திய அரசு கவனத்தில்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

கடந்த நவம்பர் 4-ம் தேதி நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் தனியார் பயிற்சி மையங்கள் குறித்த அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டது. அதில் இந்த வருடம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள 3,081 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்காகப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறாதவர்கள் எனத் தெரிவித்துள்ளது. பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாடடுகள் அனைவரும் அறிந்த ஒன்று. டியூசன் படிப்பதற்குக்கூட வசதியற்ற அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் லட்சங்கள் கொட்டி 'நீட்' பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது.

'நீட் தேர்வை எதிர்ப்பவர்கள்,`` `நீட்' தேர்விலிருந்து முழுவதுமாக விலக்குதான் தேவை. பயிற்சி மையங்கள் மூலம் படித்து தேர்வு எழுதலாம் என்பது சமமான வாய்ப்பாகாது'' என்று சொல்கின்றனர்.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். "அரசு கூறியுள்ள இந்தத் தகவலைத்தான் பல செய்தித்தாள்களும் பல வருடங்களாகச் சொல்லிவருகிறதே. 'நீட்' போன்ற தேர்வை, பயிற்சி மையங்களுக்குப் போகாமல் ஒருவரால் எப்படி எழுத முடியும்? தனியார் பயிற்சி மையங்களுக்காகவே நடத்தப்படும் தேர்வுதான் நீட். அந்தப் பயிற்சி மையங்களில் மாணவர்கள் இதுவரை படிக்காத எதையும் கற்றுத்தரப் போவதில்லை. மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் படித்த பாடம்தான் இந்தப் பயிற்சி மையங்களின் பாடத்திட்டத்திலும் உள்ளது. அந்தப் பாடத்திட்டத்தை வைத்துதானே அரசு பொதுத் தேர்வை நடத்துகிறது. பிறகு, ஏன் மீண்டும் 'நீட்' என ஒரு புதுத் தேர்வு? அப்படியென்றால், மாநில அரசு நடத்திய பொதுத் தேர்வு மூலம் மாணவர்களின் திறனை அரசால் மதிப்பிட முடியவில்லையா. பயிற்சி மையங்கள் புதிதாக எதையும் சொல்லித் தருவதில்லை.

நீட் தேர்வு சோதனை
நீட் தேர்வு சோதனை

பயிற்சி மையங்களில் எந்தக் கேள்வியைத் தேர்வு செய்தால் வெற்றி பெற முடியும் என்ற 'டெக்னிக்'தான் கற்றுத் தரப்படுகிறது. பயிற்சி மையங்கள் வந்த பிறகு மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வில் கவனம் செலுத்துவது குறைந்துபோனது. மாணவர்கள் பலரும் பயிற்சி மையங்களை நம்பத் தொடங்கிவிட்டனர். இதனால், பெரும் விளைவு ஒன்றை எதிர்காலச் சமூகம் சந்திக்க நேரிடும். இயற்பியல், உயிரியல், வேதியியல் போன்ற தனிப்பட்ட பாடப்பிரிவுகளில் நிபுணத்துவமிக்க அறிஞர்கள் உருவாவது குறைந்துபோகும். நீட் தேர்வுக்கு 3 முறை வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால், ப்ளஸ் டூ பொதுத் தேர்வுக்கு ஒருமுறைதானே வாய்ப்பளிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவர்கள் ப்ளஸ் 2 படிக்கும்போதே, நீட் பயிற்சி வகுப்புக்கும் செல்கிறார்கள். இதனால் அறிவு வளர்ச்சி என்பதில்லை. நீட் கோச்சிங்கில் 'நெகட்டிவ்' மார்க் வாங்காமல் இருப்பது எப்படிப் போன்ற பயிற்சிகள்தான் தரப்படுகின்றன. அந்த நுட்பத்தைக் கற்றுத்தரும் திறம்வாய்ந்த ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறவர்கள். அந்தப் பயிற்சி மையங்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும். அங்கு சென்றால்தான் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை வெல்ல முடியும். லட்சங்களில்தான் அங்கு பணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் எந்த வரைமுறையும் கிடையாது. வரைமுறை படுத்தினாலும் அநியாயத்தை வரைமுறைபடுத்துவது போலத்தான் அது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

பள்ளிக் கல்வியில் சமமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி, அதில் பெறக்கூடிய மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பதுதான் நியாயமான தீர்வு. அதை விடுத்து சந்தையிடம் கல்வியை ஒப்படைப்பது, போட்டித் தேர்வுகளை நடத்துவது பயனற்றது. சக மாணவனைப் போட்டியாளனாகப் பார்க்கும் எந்த முறையுமே நியாயமான சமூக அமைப்புக்கு இட்டுச் செல்லாது. போட்டி என்பது சந்தைக்குத்தானே தவிர மாணவர்களுக்கானதல்ல" என்றார் ஆதங்கத்துடன்.

`நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது?' - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு