Published:Updated:

`மன் கி பாத்’ உரையில் பாகீரதி அம்மா! -பிரதமரின் பாராட்டால் நெகிழும் 105 வயது மூதாட்டி

பாகீரதி அம்மாள்
பாகீரதி அம்மாள்

ஒன்பது வயதில் தாய் இறந்ததால் தன்னுடன் பிறந்தவர்களைக் கவனிப்பதற்காக கல்வியைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பாகீரதி அம்மாள், தனது 105-வது வயதில் 4-ம் வகுப்புத் தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார். 

பிரதமர் நரேந்திரமோடி நேற்று (23-ம் தேதி) அகில இந்திய வானொலியில் `மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். அப்போது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டியான பாகீரதி அம்மாள் பெயரைக் குறிப்பிட்டார். 

பாகீரதி அம்மாள்
பாகீரதி அம்மாள்

பிரதமர் தன்னுடைய பேச்சின்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சாதனைப் பெண்களைப் பட்டியலிட்டவர், தள்ளாத வயதிலும் தன்னுடைய கல்வி கற்கும் ஆர்வம் காரணமாக 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வை எழுதிய கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மாவை தேசிய கல்விக்கான சாதனையாளராகக் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திரமோடி தனது பேச்சின்போது, ``பாகீரதி அம்மாவின் வெற்றிக் கதையைக் கேட்டால் நீங்கள் ஆச்சர்யம் அடைவீர்கள். நீங்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினால், வாழ்வில் உயர வேண்டும் என்று ஆசைப்பட்டால், உங்களுடைய கடந்த காலத்தின் மாணவர் என்ற அந்தஸ்தை உங்கள் மனதிலிருந்து அகலாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Vikatan

105 வயது முதியவரான பாகீரதி அம்மாள் அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், தனது இளம் வயதிலேயே தாயை இழந்ததால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தனது இளம் வயதிலேயே கணவரையும் இழந்தார். ஆனால், தன்னுடைய கல்வி கற்கும் அறிவைத் தொடர்ந்து தக்க வைத்ததால் 4-ம் வகுப்புத் தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார்.

முதிய வயதில் தேர்வெழுதிய பாகீரதி அம்மாள், கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 75 சதவிகிதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். அந்தத் தாய் தொடர்ந்து படித்து அடுத்து வரக்கூடிய தேர்வுகளையும் எழுத வேண்டும் என்கிற விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக பாகீரதி அம்மாள் திகழ்கிறார். அவரை மக்கள் பின்பற்ற வேண்டும்.
பிரதமர் மோடி
`நம்பிக்கையை கைவிட்டு விடக் கூடாது' - `மான் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

அவரைப் போன்றவர்களின் செயலால் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களும் தொடர்ந்து சாதிக்கும் வாய்ப்பு உருவாகும். கல்வியில் நாட்டு மக்களுக்கே புதிய நம்பிக்கையை அவர் ஏற்படுத்தி உள்ளார். அவரை சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்’’ என்றார்.

பிரதமர் தன்னைப் பற்றிப் பேசியதைக் கேள்விப்பட்ட பாகீரதி அம்மாள், ``என்னைப் பற்றி பிரதமர் பேசியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன் பெருமையாகவும் இருக்கிறது" என்று குறிப்பிட்டார். பாகீரதி அம்மாவுக்கு 6 குழந்தைகள். அவருக்கு 16 பேரக் குழந்தைகளும் 12 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். 

பாகீரதி அம்மாள்
பாகீரதி அம்மாள்

பாகீரதி அம்மாளின் மகளான 70 வயது நிரம்பிய தங்கமணி கூறுகையில், `` பிரதமரின் பேச்சை நாங்கள் மொழிபெயர்த்துச் சொன்னோம். அவரை இந்த நாடு முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் பேசினார் என்று சொன்னதும் எங்கம்மா மிகவும் நெகிழ்ச்சியடைந்தார்’’ என்கிறார், பெருமையாக.

அடுத்த கட்டுரைக்கு