Published:Updated:

`கரன்ட் இல்லை… சாப்பாடு இல்லை..!’- துணை முதல்வர் தொகுதியில் ஓர் அரசு பள்ளியின் அவல நிலை #OPS #Theni

கண்ணகரை அரசு ஆரம்பப் பள்ளி
கண்ணகரை அரசு ஆரம்பப் பள்ளி

மலைக்கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியில், முதலில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். தற்போது 12 பேர் மட்டுமே படிக்கின்றனர்.

பழங்குடியின மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக, மார் தட்டும் தேனி மாவட்ட நிர்வாகத்தின் கண்களுக்கு, கண்ணக்கரை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளி தெரியவில்லை என்பது பெரும் சோகம்.

பெரியகுளத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, கண்ணக்கரை மலைக்கிராமம். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி சட்டமன்றத் தொகுதியில், அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த மலைக்கிராமத்தில், கடந்த 2004-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது இப்பள்ளி. 33 லட்சம் மதிப்பீட்டில் கண்ணக்கரை அருவிக்கு அருகே, மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது.

கண்ணகரை அரசு ஆரம்பப் பள்ளி
கண்ணகரை அரசு ஆரம்பப் பள்ளி

அகமலையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில், முதலில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவந்துள்ளனர். ஆனால், தற்போது 12 பேர் மட்டுமே படிக்கின்றனர். காரணம், இப்பள்ளியில் மின்சாரம் இல்லை. முறையாக சத்துணவு வழங்கப்படுவதில்லை. சுடுதண்ணீர் இல்லை. எழுதுவதற்கு நோட்டு வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.

இதனால், பெரும்பாலான மலைக்கிராம குழந்தைகள் பெரியகுளம் பள்ளிகளில் படிக்கின்றனர். கண்ணக்கரை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளிக்கு சமீபத்தில் சென்றோம்.

கண்ணகரை அரசு ஆரம்பப் பள்ளி
கண்ணகரை அரசு ஆரம்பப் பள்ளி

ஒரு சிறிய வகுப்பறையில் பாய்களை விரித்து, அதில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர் மாணவர்கள். ஒரு ஆசிரியை மட்டும் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். இடைநிலை ஆசிரியையான அவர், தினமும் பெரியகுளத்திலிருந்து கண்ணக்கரை வருவதாகக் கூறினார். தலைமையாசிரியர் எங்கே எனக் கேட்டோம். அவர், சென்னைக்கு மீட்டிங் சென்றிருக்கிறார் என்றார். மாணவர்களிடம் பேச்சுக்கொடுத்தோம்.

“கரன்ட் இல்லாமல் நைட் ரொம்பப் பயமா இருக்கும்…” எனப் பேச ஆரம்பித்தார் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவர். “கரன்ட் இல்லாததால், குடிக்க, குளிக்க சுடுதண்ணீர் இல்லை. குளிர்ந்த தண்ணீரில்தான் குளிப்போம், குடிப்போம். சோலார் விளக்கு ஒன்று உள்ளது. அதுவும், 1 மணி நேரம்தான் எரியும். சாயந்தரம் 6 மணிக்கு போட்டால், 7 மணிக்கு அணைந்துவிடும். இங்கே, சூரிய ஒளி அவ்வளவாக இல்லாததால், சோலார் விளக்கு எங்களுக்குப் பயன்படுவதில்லை” என்ற மணவரிடம், "இங்கே எழுதிவைக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி சாப்பாடு கொடுக்கப்படுகிறதா?" என்று கேட்டோம். 'இல்லை' என ஒற்றை வரியில் முடித்துகொண்டார். நாம் சென்ற அன்றைய தினம், உணவுப் பட்டியல்படி சிக்கன் அல்லது மட்டன் குழம்பு கொடுக்க வேண்டும். அன்றோ, சாம்பாரும் முட்டையும் மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டன.

மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள்
மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள்

உண்டு உறைவிடப் பள்ளி என்பதால், அதே கட்டடத்தில் உள்ள மாணவர்களுக்கான விடுதிக்குச் சென்றோம். அறையில் இருந்த கட்டில்களில் விறகுகள் அடுக்கப்பட்டிருந்தன. கட்டில்கள் இல்லாமல் மாணவர்கள் எப்படித் தூங்குகிறார்கள் என விசாரித்ததில், காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் எப்போதாவது வழங்கும் பாய், போர்வையை வைத்து அந்தக் குளிரில் தரையிலேயே படுத்துத் தூங்குவதாகக் கூறினார்கள். பாய், போர்வைகள் அழுக்காக, கிழிந்த நிலையில் இருந்தன.

நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரிடம் பேசினோம். “பாடத்துக்கு ஒன்று என ஐந்து நோட்டும், இரண்டு ரஃப் நோட்டும் கொடுப்பார்கள். இப்பல்லாம், இரண்டு ரஃப் நோட்டு மட்டும்தான் கொடுக்கிறார்கள். ஆறு மணிக்கு மேல படுக்கப்போயிருவோம். கரன்ட் இல்லாததால படிக்க முடியாது. இரவு, காட்டுமாடு வரும். ரொம்பப் பயமாக இருக்கும். அதனால, எங்ககூட படிச்ச நிறைய பேர், பெரியகுளத்தில் இருக்கும் ஸ்கூல்ல சேர்ந்துட்டாங்க” என்றார்.

மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள்
மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள்
`உங்கள் லட்சிய ஆசைகள் நிறைவேறும்!'- இஸ்ரோ தலைவர் சிவனின் கடிதத்தால் நெகிழ்ந்த  பழங்குடியின மாணவர்கள்

மறுநாள் மீண்டும் கண்ணக்கரை அரசுப் பள்ளிக்குச் சென்றோம். முந்தைய தினம் நாம் வந்துவிட்டுச் சென்றதால் அன்றைய தினம் குழந்தைகளுக்கு சிக்கன் குழம்பு கொடுக்கப்பட்டது. சமையலர் சிவகாமி பற்றி விசாரித்தோம். அன்றைய தினமும் அவர் அங்கு இல்லை. லீவ் எடுத்துச் சென்றுள்ளார் என்றனர். அவருக்குப் பதிலாக, காவலர் சேகர் சமையல் செய்கிறார். ”குழந்தைகளுக்கு மோர் ஏன் கொடுக்கப்படவில்லை... நேற்றைய உணவுப் பட்டியலை இன்று கடைபிடிக்கிறீர்களே... என்று கேட்டோம். சேகர் பதில் ஏதும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.

கட்டில்களின் விறகுகள் அடுக்கப்பட்டுள்ள காட்சி
கட்டில்களின் விறகுகள் அடுக்கப்பட்டுள்ள காட்சி

மாலை நேரம், குழந்தைகளுக்கு சுண்டலும், சுக்குமல்லி காபியும் கொடுக்க வேண்டும். இதுவரை அவர்களுக்கு அவை கிடைத்ததே இல்லையாம். இரவுக்கு சமைக்கப்படவேண்டிய தனிப்பட்டியல் ஒன்று உள்ளது. ஆனால், மதியம் என்ன சமைக்கப்படுகிறதோ அதேதான் இரவும் கொடுக்கப்படுகிறது.

அனைத்தையும் கண்காணிக்கவேண்டிய பள்ளித் தலைமையாசிரியர் ராகவன், அலுவலகப் பணிகளை மட்டுமே மேற்கொண்டுவருகிறார் என்கிறார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியை ராஜேஸ்வரி பாடம் நடத்த, ராகவனோ நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். ஆனால் அவரோ, அலுவலகப் பணிகளின் காரணமாக, பாடம் நடத்தியே பல மாதங்கள் ஆகிறது என்கின்றனர் மாணவர்கள். உண்டு உறைவிடப் பள்ளியான அங்கு, அவர்தான் விடுதிக் காப்பாளரும் கூட, அலுவலகப் பணி எனக் கூறிக்கொண்டு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அங்கு தங்குகிறார் என்கின்றனர்.

இது தொடர்பாக அங்கிருந்த ஆசிரியை ராஜேஸ்வரியிடம் கேள்வி எழுப்பினோம். “நான் காலையில் வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு மாலை சென்றுவிடுவேன். எனக்கு வேறு எதுவும் தெரியாது” என்று முடித்துக்கொண்டார்.

உணவுப் பட்டியல்
உணவுப் பட்டியல்

காவலர் வந்தால் சமையலர் வருவதில்லை. சமையலர் வந்தால் காவலர் வருவதில்லை. இவர்கள் இருவரும் வந்தால் தலைமையாசியர் வருவதில்லை. இப்படி சரிவர நிர்வகிக்கப்படாத காரணத்தாலும், பராமரிப்பு இல்லாததாலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, அகமலை சொக்கன்மலை அரசுப் பள்ளி மூடப்பட்டது. இதேபோல கண்ணக்கரை அரசுப் பள்ளியையும் மூட திட்டமிடப்படுகிறதா என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகாதேவியிடம் கேட்டோம். “என்னுடைய நேரடி கண்காணிப்பில்தான் அப்பள்ளி உள்ளது. நானும் அடிக்கடி அங்கே விசிட் செய்துகொண்டிருக்கிறேன். இனி, எந்தத் தவறும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.

கண்ணக்கரை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளியின் நிர்வாகக் கட்டுப்பாடு அனைத்தும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையிடமே உள்ளது. அத்துறையின் தனி வட்டாட்சியர் ராணியிடம் பேசினோம். “சென்னைக்கு ஒரு முக்கியமான ஃபைல் அனுப்ப வேண்டியதாக இருந்தது. அதனால், தலைமையாசிரியர் ராகவனை அனுப்பினோம். இனி அங்கு தொடர்ச்சியாகச் செல்கிறாரா என கண்காணிக்கிறோம். சாப்பாடு பிரச்னை தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன். அருகில் ஒரு மின் இணைப்பு உள்ளது. அங்கிருந்து பள்ளிக்கு மின்சாரம் கொடுக்க வனத்துறை அனுமதி மறுக்கின்றனர். கலெக்டரிடமும் கூறியிருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கண்ணகரை அரசு ஆரம்பப் பள்ளி
கண்ணகரை அரசு ஆரம்பப் பள்ளி

பழங்குடியினர், பணம் கொடுத்து நகரங்களில் உள்ள பள்ளிகளில் படிக்க முடியாத காரணத்திற்காகத்தான் மலையில் உண்டு உறைவிடப் பள்ளியை உருவாக்குகிறது அரசு. அதிலும் பல்வேறு சிக்கல்கள் இருந்தால், பழங்குடியின மாணவர்கள் எங்குதான் செல்வார்கள்.

அடுத்த கட்டுரைக்கு